மதிப்பு மிக்க குருஜி அவர்களின் பாதங்களுக்கு உங்கள் அன்பு வாசகன் சாரங்கபாணியின் நமஸ்காரம். குருஜி என் தங்கை ஐந்து வருடமாக மனநிலை பாதிப்புடன் இருக்கிறாள். திருமணம் முடிந்த இரண்டு வருடத்தில் அவளது கணவன் விபத்தில் இறந்து போனார். அன்றுமுதல் மெளனமாக இருந்த அவள் நாளடைவில் பித்துப்பிடித்த நிலைக்கு வந்துவிட்டாள். அவளுக்கு ஒரே ஒரு மகன் இருக்கிறான் தற்போது அவளும் அவளது பிள்ளையும் என் பாதுகாப்பிலே இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை உடன்பிறந்தவள் என்பதனால் அவள் செயல் அனைத்தையும் பொறுத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் என் மனைவியும், பிள்ளைகளும் அவளை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். பாரமாக நினைக்கிறார்கள். என் அப்பா கூட பெற்றமகள் என்று பார்க்காமல் ஏதாவது விடுதியில் விட்டுவிடுவோம் என்கிறார். எனக்கு மனது கேட்கவில்லை. கணவரும் இல்லை, என் தாயாரும் இல்லை அவளை அரவணைக்க பிள்ளைக்கு வயதும் போதவில்லை. நானும் கைவிட்டுவிட்டால் அந்த ஜீவன் நிச்சயம் சாம்பலாகி விடும். என்னால் முடிந்தவரை வைத்தியம் பார்த்துவிட்டேன் மந்திரம், மாயம் என்றும் பார்த்துவிட்டேன். எதற்கும் பயனில்லை மிக கடைசியாக உங்களது அறிவுரையை கேட்டு நடப்பது என்று தீர்மானித்து விட்டேன் அவள் குணமாவாளா? மாட்டாளா? அவளை நான் வீட்டோடு வைத்துக்கொள்ளலாமா? விடுதியில் சேர்க்கலாமா? என்பதை தாங்கள் தெளிவாக சொல்லவும். அவள் ஜாதகத்தையும், குழந்தை ஜாதகத்தையும் இணைத்துள்ளேன்.
இப்படிக்கு,
உங்கள் சொற்படி எப்போதும் நடக்கும்,
அன்பு வாசகன்,
சாரங்கபாணி,
மைலாப்பூர்.
உலகிலேயே மிக கொடிய நோய் புற்றுநோய் என்றும், கட்டுக்குலைக்கும் காம வினைநோயான எய்ட்ஸ் என்றும் சொல்வார்கள். நோயாளி அனுபவிக்கும் வேதனையை வைத்து உலகம் அவைகளை அப்படிப்பார்க்கிறது. ஒரு கோணத்தில் அது சரியான பார்வை தான். ஆனால் தர்கரீதியில் பார்க்கும் போது அந்த நோய்களை விட மனநோய் மிக கொடியது என்பது தெரியவரும்.
நோயில் நான் விழுந்த நேரம் எனக்கு என்ன நேர்கிறது இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை ஒரு நோயாளி சுயநினைவோடு உணர்ந்தால் அதிலிருந்து வெளிவருவதற்கு மருந்துகளால் மட்டுமல்ல, மன தைரியத்தாலும் போராடி வெளியில் வரமுடியும். தனக்கு நடப்பது என்னவென்றே தெரியாமல் தன்னைச்சுற்றி நடப்பதையும் அறிந்துகொள்ளாமல் அவதியில் தள்ளும் நோயிலிருந்து விடுபட எப்படி போராட முடியும்?
மருத்துவத்துறை மனநோயிற்கு கண்டுபிடித்திருக்கும் அதிகபடியான மருந்து உறங்க வைத்தலும் மூளை நரம்புகளை தளர வைத்தலும் தான். இம் மருந்துகளால் சுகம்பெற்று வந்தவர்களை விட வேறு நோய்களுக்கு ஆட்பட்டவர்களே அதிகம். கடவுளின் கருணையும் மனிதனின் அன்பு மட்டுமே மன நோயை தீர்க்கும் மருந்தாக அன்றுமுதல் இன்றுவரை இருந்து வருகிறது.
ஆனால் ஒரு மனநோயாளியை வீட்டில் வைத்து பராமரிப்பது என்பது மிகவும் கடினம். அக்கம் பக்கத்தாரின் கேலியும், கிண்டலும் தொல்லையும், புகார்களும் ஒருபுறம் என்றால், குடும்ப நபர்களின் சலிப்பும், அலுப்பும் இன்னொருபுறம். இதை நோயாளியின் மேல் அன்பு வைத்திருப்பவர்கள் எதிர்கொள்வது என்பதோ மிகப்பெரிய சவால். அந்த சவாலை உடன்பிறந்த சகோதரிக்காக நீங்கள் எதிர்கொண்டு அனுபவித்தும் வருவது நெஞ்சை சிலிர்க்க வைக்கிறது.
சில நோய்கள் இயற்கையாக வருகிறது. சில நோய்கள் கண்ணுக்கு தெரியாத கர்மாக்களால் வருகிறது. உங்களது தங்கைக்கு வந்திருக்கும் நோய் இவற்றில் எது வழியாக வந்தது என்று கேட்டால் என்னால் இரண்டுமே இல்லை மரபு வழியாக வந்திருக்கிறது என்ற பதிலை சொல்ல வேண்டிய சூழ்நிலை வருகிறது.
உங்கள் தங்கை மனம் பேதலித்தது கணவனின் மரணத்தால் என்று கூற முடியாது. அந்த மரணம் அதற்கொரு காரணம் அவ்வளவு தான் மற்றபடி உங்கள் தங்கையின் பூர்வ புண்ணிய இடத்தை ஆராய்கின்ற போது உங்கள் தாய்வழி குடும்பத்தில் பாட்டன் பாட்டி யாராவது ஒருவருக்கோ அல்லது உங்கள் தாயாருக்கோ கூட இந்த பாதிப்பு இருந்திருக்கலாம் அதன் தொடர்ச்சியே இன்றைய விளைவு என்று கருத முடிகிறது.
ஒரு மனநோயாளியை அதுவும் பெண்ணை புதிய மனிதர்கள் வாழுகிற விடுதியில் கொண்டுபோய் சேர்ப்பதை என் மனசாட்சிப்படி ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சித்த மருத்துவப்படி வைத்தியம் செய்தால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும் என்று நினைக்கிறேன். அதற்கான முயற்சியை செய்து பாருங்கள். மேலும் சமயபுரம் மாரியம்மனின் குங்கும பிரசாதத்தை கொண்டுவந்து தினசரி நம்பிக்கையோடு உங்கள் தங்கைக்கு இட்டு வாருங்கள் கடவுளின் சக்தி காப்பாற்றாமல் விடாது.