Store
  Store
  Store
  Store
  Store
  Store

மனைவியை அடக்க பரிகாரம் !



   குருஜி அவர்களுக்கு வணக்கம். உங்களை போன்று பிரம்மச்சாரியாக வாழ்பவர்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக வருகிறது. உங்களுக்கெல்லாம் எங்களை பார்த்தால் எப்படி இருக்கிறதோ எனக்கு தெரியாது. சம்சாரியின் வாழ்க்கை வெளியில் பார்த்தால் பகட்டாக கவர்ச்சிமிக்கதாக தெரிகிறது. நிறையபேர் சொல்கிறான் குடும்பமும், குடித்தனமாக இருப்பது தான் சந்தோஷம் என்று. இது அடிதாங்க முடியாமல் உச்சகட்டமாக முனகும் வார்த்தை என்று நான் நினைக்கிறேன். 

ஆண்பிள்ளையாக பிறந்தவனுக்கு கல்யாணம் வரையில் தான் வசந்தகாலம் கெட்டிமேளம் கொட்டி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னி சாட்சியாக எப்போது ஒருத்தியின் கையை பிடிக்கிறோமோ அப்போதே அந்த அக்னியிலே நமது வசந்தகால வாழ்க்கையை தலைசுற்றி போட்டுவிட வேண்டியது தான் இதை வேடிக்கைக்காக சொல்லவில்லை அனுபவித்து சொல்கிறேன். 

திருமணம் முடிந்து வாழ்க்கையை துவங்கலாம் என்றால் மதியம் சோறுபோடும் போது ஆரம்பிப்பாள். உங்கள் அம்மா சோறு போட்டால் தான் சாப்பிடுவியோ? பிறகு என்னை எதற்கு கட்டிக்கொண்டாய்? உன் தங்கச்சி மட்டும் தான் தலையில் பூ வைப்பாளோ? என் தலை என்ன மொட்டையா? உன் அக்கா வந்தால் வாயை மூடிக்கொண்டு போகச்சொல் இல்லை என்றால் மரியாதை கெட்டுவிடும். அது யாரு காலையில் எழுந்தவுடன் உன் பெயரை சொல்லிக்கொண்டு ஒரு டம்ளர் காபிக்கு கேடாக ஒரு தீவெட்டி தடியன் வருகிறான். நண்பன் கிண்பன் எல்லாம் தெருமுனையோடு இருக்க வேண்டும் வீட்டுக்கு வந்தால் படுக்கை ரெண்டாகிவிடும். 

இப்படி ஒன்றா? இரண்டா? ஆயிரம் பீரங்கிகள் பல்லாயிரம் துப்பாகிகள் கணக்கில் அடங்கா வெடிகுண்டுகள் நகை வேண்டும், புடவை வேண்டும் அதுவேண்டும் இதுவேண்டும் கண்ணில் பார்த்ததெல்லாம் வேண்டும் என்று கட்டளைகள் போடப்போட ஓடி ஓடி நாய்போல ஆகிவிட்டேன். என்றாவது ஒருநாள் வாய்க்கு ருசியாய் அம்மா கையில் சாதம் வாங்கி சாப்பிட்டு வருகிறேன் என்றால் கையை ஒடித்து விடுவேன் என்கிறாள். இவளுக்காக பெற்றவர்களை உடன்பிறந்தவர்களை உற்ற நண்பர்களை எல்லோரையும் இழந்துவிட்டேன். பச்சையாக சொல்வது என்றால் என் சொந்த ஆசாபாசங்கள் அனைத்தையும் உணர்சிகளையும் ஆழமாக குழிதோண்டி புதைத்து விட்டேன். 

அவளுக்கு தெரிந்ததெல்லாம் அவள் அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அவள் சொந்தபந்தங்கள் அவர்கள் வீட்டில் விசேஷம் எதாவது நடந்தால் புருஷன் என்று அலங்காரத்திற்காக காட்டுகிற ஒரு உயிருள்ள பொம்மை நான். என் பிள்ளைகள் கூட என்னை மதிக்க மாட்டேன் என்கிறது. அப்பா பூனைக்குட்டி மாதிரி மூலையில் சுருண்டு படுத்துக்கொள்வார் என்று கேலி பேசுகின்றனர். காலம் முழுவதும் இப்படியே ஓடிவிட்டது சர்வாதிகாரிகள் அரசாளுகிற நாடுகள் கூட விடுதலை அடைகின்றன. எனக்கும் என்னை போன்ற அப்பாவிகளுக்கும் விடுதலையே கிடையாதா? மனைவியை அடக்கி ஆள ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் ஐயா விளையாட்டாக கேட்கவில்லை, உண்மையாகவே கேட்கிறேன் வழிகாட்டுங்கள் 

இப்படிக்கு, 
பெயர் கூறவிரும்பாத, 
உஜிலாதேவி வாசகன், 
சென்னை. 



    ங்கள் கடிதம் படிப்பதற்கு நகைச்சுவையாக இருக்கிறது என்றாலும், அதனுள் இருக்கும் வேதனையை புரிந்துகொள்ள முடிகிறது. பல வீடுகளில் கணவன் மட்டுமல்ல மனைவிகளும் கூட அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். பெண்ணை அடிமையாக நடத்தினால் பரிவுகாட்டும் சமூகம் ஆண்அடிமைகளை கண்டு பரிகாசம் செய்கிறது என்பது மிகவும் வேதனை. 

மனைவியை வசப்படுத்துவதற்கு என்று தனியான பரிகாரங்கள் எதுவும் கிடையாது. இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இனிய இல்லறம் நடத்த நல்ல பரிகாரங்கள் பல உண்டு. அவைகளை நம்பிக்கையோடு செய்தால் பலனும் உண்டு. 

தேய்பிறையில் வரும் அஷ்டமி திதியில், காளிகோவிலுக்கு சென்று குங்கும அர்ச்சனை செய்யலாம். குருதி பூஜை என்ற குங்கும அபிஷேக பூஜையை அதர்வண பத்திரகாளிக்கு அஷ்டமி திதிதோறும் செய்து வரலாம். இது முடியாதவர்கள் வீட்டில் காளி தேவி படத்தை வைத்து வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். இதுவும் முடியாதவர்கள் முறைப்படி காளியின் மூலமந்திரத்தை குரு மூலம் பெற்று ஜபித்து வரலாம். நல்ல பலன் உடனே கிடைக்கும்.



Contact Form

Name

Email *

Message *