Store
  Store
  Store
  Store
  Store
  Store

நெறிமுறை இல்லாத கூட்டணி !


   பெரியாரை போன்றவர் நரேந்திரமோடி என்று விஜயகாந்த் கூறி இருக்கிறாரே அது சரியான கருத்தா? 

   ஐம்பதாம் ஆண்டு முடிகிற தருவாயில் சீனாவுக்கு சென்ற நேரு அவர்களின் சகோதரி, விஜயலஷ்மி பண்டிட் சீனாவில் மாசேதுங் அவர்களை சந்தித்து உரையாடிவிட்டு வந்து நமது நாட்டில் ஒரு கருத்தை சொன்னார். மாசேதுங்கை பார்க்கும் போது மகாத்மா காந்தியை பார்ப்பது போல் இருந்தது என்றார். அவரது கருத்தை பிரதமர் நேருவும் கேட்டு சந்தோஷப்பட்டார் அதற்காக பிற்காலத்தில் பெரியளவு நேரு வருத்தப்படவும் நேர்ந்தது. 

அரசியலில் பக்குவப்படாமல் ஆர்வம் மட்டும் உள்ளவர்கள் மட்டுமே ஒரு தலைவரை இன்னொரு தலைவரோடு ஒப்பிட்டு புகழ்வார்கள். விஜயகாந்த் அதைத்தான் செய்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் விஜயகாந்த் இப்படி ஒப்பீடு செய்ததற்கு வருத்தப்பட வேண்டியது நீங்களோ? நானோ அல்ல. மோடியின் பக்தர்களும், பெரியாரின் தொண்டர்களும் மட்டுமே. 

மாநில கட்சிகளுக்கு வாக்களிப்பது வீண் என்று ப.சிதம்பரம் கூறும் கருத்தை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

   சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசுவதில் சிதம்பரம் வல்லவர். நேற்றுவரை மாநிலக்கட்சிகளின் ஆதரவில் இருந்துவிட்டு அந்த கட்சிக்காரர்களின் பங்களிப்பால் பதவியையும் பெற்றுவிட்டு இன்று அத்தனையையும் மறந்து பேசுவது அவருக்கு மட்டுமே கைவந்தகலையாக இருக்கும். மாநில கட்சிகளுக்கு ஒட்டுபோடக்கூடாது என்று சொன்னவர் மாநிலக்கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்கவும் கூடாது என்று சொல்வாரா? 

இன்று புதிதாக மாநிலக்கட்சியை சாடும் இவர் கருப்பையா மூப்பனாருடன் சேர்ந்து தமிழ்மாநில காங்கிரஸ் அமைத்தாரே அந்த காங்கிரஸ் தேசியக்கட்சியா? மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள் என்று நினைப்பது மிகவும் தவறு. ஆடுகிற ஆட்டத்தை, போடுகிற வேஷத்தை பொறுக்கும் வரை பொறுத்திருப்பார்கள் காலம் வந்தால் பதில் சொல்வார்கள். 

பா.ஜ.க ராமர் கோயிலை கட்டப்போவதாக மீண்டும் தேர்தல் அறிக்கையில் கூறி இருக்கிறதே...?

   இரண்டு சீட், மூன்று சீட் என்று இருந்த பா.ஜ.க வை இந்த அளவிற்கு வளர்த்து விட்டது ராமர் கோவில் விவகாரம். ராமருக்கு கோயில் கட்டுவேன் என்று சொன்னால் தான் வடஇந்திய மக்களை கவரமுடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் ஒருவகையில் இது தவறுதலான எண்ணம் என்பதே எனது சொந்த அபிப்ராயம். 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்தது மசூதி அல்ல. கோயிலே என்பது பல ஆராய்சிகளின் மூலம் தெரியவந்துவிட்டது. ஒருகோணத்தில் நீதிமன்றம் கூட அதை உறுதி செய்துவிட்டது இவ்வளவு வந்தபிறகு இது ராமர் கோயில்தான் தெரிந்த பிறகு மீண்டும் அதில் பிடிவாதமாக கோயில் கட்டியே தீருவேன் என்று கூறுவது நன்றாக இல்லை முஸ்லீம்களும் மசூதி வேண்டும் என்று பிடிவாதம் செய்யவும் கூடாது. 

இரண்டுபேருக்கும் பொதுவானதாக ஒரு கூட்டுவழிபாட்டு ஸ்தாபனத்தை அந்த இடத்தில் ஏற்படுத்தலாம். அப்படி ஏற்பாடு செய்தால் இந்தியாவில் உள்ள இந்து முஸ்லீம்கள் பகையாளிகள் அல்ல. பங்காளிகள், சகோதரர்கள் என்று தெரியவரும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே வாழ்க்கை. முதலில் இந்த அயோத்தி பிரச்சனையில் இருந்து அரசியல் கட்சிகள் வெளியேற வேண்டும். அது ஆன்மீகவாதிகளின் பிரச்சனை அவர்களாகப்பேசி முடிவுக்கு வருவது தான் நாட்டுக்கு நல்லது. அரசியலில் பேச நிறைய விஷயங்கள் இருக்கிறது இதை பா.ஜ.க புரிந்துகொண்டால் நல்லது. 

தமிழ்நாட்டில் பா.ஜ.க கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணியா? 

   மிகச்சரியான வார்த்தையில் சொல்லவேண்டுமானால் நூற்றுக்கு நூறு சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்லலாம். சினிமாக்காரர்களையும் திராவிட கட்சிக்காரர்களையும் பக்கத்திலேயே சேர்க்கமாட்டேன் என்றது பா.ம.க. ஹிந்துத்துவா கொள்கையை எப்போதுமே ஏற்பவர் அல்ல வைகோ. எதன்மீதும் பிடிப்போ, தெளிவான பார்வையோ, கொள்கையோ இல்லாதவர் விஜயகாந்த். இவர்கள் அனைவரும் கூட்டணியாக சேர்ந்திருக்கிறார்கள் என்றால் இவர்களது இலக்கு பதவி ஒன்றே தவிர வேறல்ல. 

பதவிக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள் ஆட்சி நடத்தினால் இதுவரை பாரதநாட்டில் எந்தமாதிரியான ஆட்சி கடந்த பத்துவருடமாக நடந்து வருகிறதோ அதே மாதிரியான ஆட்சி தான் இனிமேலும் நடக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. பதவியைப்பற்றி கவலைப்படாமல் கொண்ட கொள்கையிலும், நடைமுறைப்படுத்தும் நெறிமுறையிலும் அசைக்கமுடியாத உறுதி உள்ளவர்களால் மட்டுமே நல்லாட்சியை தரமுடியுமென்று நினைக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் அத்தியாயம் இந்த தேர்தலோடு முடிந்துவிடுமா? 

   அப்படி முடிந்தவிடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இன்றைய நிலையில் நாட்டிலுள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்க கூடிய சக்தியும் அனைவருக்கும் நம்பிக்கை தரக்கூடிய திறமும் காங்கிரசுக்கு மட்டுமே இருக்கிறது. இன்றைய காங்கிரசை வழிநடத்தும் தலைவர்கள் நல்லவர்களாகவும் நாணயமிக்கவர்களாகவும் இல்லை என்பது உண்மை. 

காங்கிரசில் மறைவாக இருக்கும் நல்ல சக்திகள் வருங்காலத்தில் முன்னுக்கு வருவார்கள். அப்போது காங்கிரஸ் புத்துயிர் பெற்று எழும். காங்கிரஸ் என்பது கொள்கைசார்ந்த இயக்கம் மட்டுமல்ல, உணர்வு சார்ந்த இயக்கமும் கூட. எனவே அதற்கு மரணம் என்பதே கிடையாது.

குஜராத்தை விட தமிழ்நாடே அதிகம் வளர்ந்திருக்கிறது என்று ஜெயலலிதா அவர்கள் கூறுவது பற்றி?

   ஒரு மாநிலம் உண்மையாக வளர்ந்திருக்கிறதா இல்லையா என்பதை அந்த மாநிலத்தில் உள்ள போக்குவரத்து வசதியையும், மின்சார விநியோகத்தையும் வைத்து சொல்லிவிடலாம். தமிழ்நாட்டில் மக்களின் பயணத்திற்கான போக்குவரத்து சிறப்பாக இருக்கிறதே தவிர சரக்குகளை குறித்த நேரத்தில் எடுத்து செல்லும் வசதி இன்னும் மேம்படவில்லை. குஜராத் நிலைமை இப்படி இல்லை மின்சாரம் விவசாயம், சுகாதாரம், நிர்வாகம் எல்லாமே நம்மைவிட அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

உண்மையாகவே இந்தியாவின் மிக முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு தான் இருந்திருக்க வேண்டும் காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு முதலாவதாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு தமிழ்நாட்டின் நிலை தாழ்ந்து போனதற்கு மிக முக்கிய காரணம் கவர்ச்சியான அரசியல், ஊழல் மிகுந்த நிர்வாகம். தமிழ்நாட்டில் இலவச திட்டங்கள் இருக்கிறது என்பது நமது அரசின் கருணைத் தன்மையை காட்டவில்லை மக்களின் வறுமை நிலையை காட்டுகிறது. சரியான முறையில் ஆட்சி நடந்தால் இலவசங்களுக்கு வேலையே இல்லை. 

நரேந்திரமோடி நல்லவரோ கெட்டவரோ எனக்கு தெரியாது. குஜராத்தை உண்மையாக நேசிப்பவராக அவர் இருக்கிறார். அதனால் தான் எந்தவகையிலாவது தனது மாநில மக்களை முன்னேற்ற வேண்டுமென்று பாடுபடுகிறார். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை போல அவர் இலவசங்களை காட்டி ஆட்சிக்கு வரவில்லை. மக்களை நேசிக்கும் தலைவர்களால் தான் தலைமுறைகளின் நல்வாழ்வை பற்றி சிந்தித்து செயல்பட முடியும். அதை மோடி செய்கிறார். ஜெயலலிதா அம்மையார் செய்தாலும் நன்றாக இருக்கும்.


திமுக தலைவர் தேர்தல் பொதுக்கூட்டங்களில் இதுவே தனது கடைசி பிரச்சாரமாக இருக்கும் என்று பேசுகிறாரே?

   ஒரு குழந்தையை மகிழ்விக்க சில நேரம் ஆடவேண்டும், சிலநேரம் பாடவேண்டும், சிலநேரம் அழவேண்டும்.


(குருஜியோடு நடந்த இந்த கேள்வி-பதில் நமது ஸ்ரீ நாராயணா மிஷன் வளாகத்தில் கிராம இளைஞர்கள் நடத்திய அரசியல் அரங்கம் நிகழ்வின் சில துளிகள்)



தொகுப்பு, 
சதீஷ்குமார்.










Contact Form

Name

Email *

Message *