டெக்கான் ஹெரால்டு என்ற ஆங்கில பத்திரிக்கை இரண்டாயிரத்து மூன்றாம் வருடம் டிசம்பர் மாதத்தில் ஒரு செய்தி வெளியிட்டது. அதைப்பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
தினத்தந்தி, தினமலர் படிப்பதற்கே நேரம் போதவில்லை. இதில் இங்கிலீஷ் பத்திக்ரிகை வேறு தேடிப்படிக்க வேண்டுமா? நம்மால் முடிந்ததை செய்யவேண்டும்.
சரி அது கிடக்கட்டும் வானத்தில் பறக்கிறதே விமானம் அதை முதல்முறையாக கண்டுபிடித்தது யார் என்றாவது உங்களுக்கு தெரியுமா?
காக்கா, குருவி பறக்கும் இரகசியமே எனக்கு தெரியாது. ஏரோபிளேன் பறக்கும் இரகசியத்தை எப்படி நான் தெரிந்துகொள்ள முடியும்? கைக்கடிகாரம், மண்ணெண்ணெய் அடுப்பு எல்லாவற்றையும் கண்டுபிடித்தது வெள்ளைக்காரன் தான் அதைப்போல பிளேனையும் அவன் தான் கண்டுபிடித்திருப்பான்.
விஞ்ஞான கண்டுபிடிப்பு என்றாலே அதை வெள்ளைக்காரன் தான் செய்ய வேண்டுமா? நம்நாட்டுக்காரன் எவனாலும் கண்டுபிடிக்க முடியாதா என்ன? உங்களை போலவே எல்லோரும் அந்நியனை வியந்து பார்க்கிற பழக்கத்தை கைவிட வேண்டும்.
நான் கைவிடுவது இருக்கட்டும் ஏதோ பத்திரிக்கையில் என்னவோ எழுதியிருப்பதாக சொன்னீர்களே அது என்ன? அதை முதலில் சொல்லாமல் வெட்டிப்பேச்சு எதற்கு?
சிவகுமார் பாபுஜி தளபதே என்ற இந்திய விஞ்ஞானி பரோடா மன்னர் முன்னிலையில் 1895 ஆம் வருடம் மும்பையில் உள்ள செளபாதி கடற்கரையில் ஒரு விமானத்தை உருவாக்கி பறக்க வைத்து காட்டியிருக்கிறார். இந்தச்செய்தி மராட்டிய சிங்கம் திலகர் நடத்திய கேசரி என்ற பத்திரிக்கையில் புகைப்படத்தோடு பதிவாகியிருப்பதாக நான் முன்னால் சொன்ன டெக்கான் ஹெரால்டு பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது அதைத்தான் சொல்ல வந்தேன்.
இப்படி எத்தனையோ கதைகள் இந்த நாட்டில் நடமாடிக்கொண்டிருக்கிறது பிரமீடைப் பற்றி பேசினால் அதுவும் இந்தியர்களின் கண்டுபிடிப்பு ரேடியோ தொலைக்காட்சி என்பவைகளை பற்றிப்பேசினால் அவைகளையும் நாங்கள் தான் கண்டுபிடித்தோம் வெள்ளைக்காரன் எங்கள் அறிவை தட்டிக்கொண்டு போய்விட்டான் என்று புலம்புகிற கூட்டம் இப்போது நிறைய பேர் இருக்கிறார்கள் அதில் நீரும் ஒருவர் போல் தெரிகிறது.
பிரிட்டிஷ்காரன் நாட்டைவிட்டு போய்விட்டாலும் அவன் விதைத்த அடிமைப்புத்தி இன்னும் நம்மைவிட்டு அகலவில்லை. நமது பண்பாட்டை கேலி கிண்டல் செய்து இங்கே இருக்கின்ற சில உயர்ந்த இலக்கியங்கள் கூட வெளிநாட்டு தாக்கத்தால் உருவானது என்று போலியான வரலாற்று ஆதாரங்கள் என்ற பெயரில் இட்டுகட்டிய கதைகளை எழுதிய கால்டுவெல் போப் போன்ற மோசடிப்பேர்வழிகளை இன்னும் கூட தமிழை காக்கவந்த ரட்சகர் என்று பேசுபவர்கள் மத்தியில் இந்தியனின் சொந்தபெருமையை பேசுபவன் முட்டாளாகவும் பைத்தியக்காரனாகவும் தான் பார்க்கபடுவார்கள்
கதை சொல்வதற்கும், புளுகு மூட்டைகளை அவிழ்த்து கொட்டுவதற்கும் ஒரு எல்லைவேண்டும் நீங்கள் கூறுகின்ற கதைகளை எல்லாம் நம்பியவன் தேசபக்தன் நம்பாதவன் தேசத்துரோகியா? உண்மையை நெஞ்சில் கைவைத்து மனசாட்சிப்படி பேசுங்கள். அம்மை நோய்க்கு ஆத்தாளின் கோபம் தான் காரணம் என்று வேப்பிலை கட்டிக்கொண்டிருந்தோம். அம்மனின் கோபமல்ல ஒரு கிருமியின் வேகமென்று மருந்து கண்டுபிடித்து கொடுத்தான் வெள்ளைக்காரன் இன்று செல்போன் இன்டர்நெட் என்று பயனுடையதை கண்டுபிடித்தவன் அவன்தான் நம்மால் நமது அறிவால் ஒரு துரும்பை கூட கிள்ளிபோட்டிருக்கிறோமா?
இன்றையச்சூழலில் அதிகப்படியான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இந்தியர்களால் நிகழ்த்தப்படவில்லை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன் ஆனால் அதற்கு காரணம் யார் என்று யோசிக்க வேண்டும். நமது கல்வி முறை சுயமாக சிந்திக்க சொன்னது ஆங்கிலேய மெக்காலே கல்வி முறை மனப்பாடம் செய்தால் மட்டும் போதும் என்கிறது. விடுதலை பெற்று இத்தனை வருடங்கள் ஆனாலும் நமது கல்வி முறையில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறோமா? பிறகு எப்படி இளைஞர்களுக்கு சுயசிந்தனை வளரும் கண்டுபிடிப்புகள் தொடரும்.
ஆடத்தெரியாத தாசி தெருகோணல் என்றாளாம் அதைபோல் இருக்கிறது உங்கள் கதை சொந்தமாக சிந்திக்க தெரிந்தவனை எந்த அரசாங்கமும் தடுத்துவிட முடியாது. சொந்த சிந்தனையே இல்லாதவனை எத்தனை சட்டம் போட்டாலும் வளர்த்துவிட முடியாது. உங்கள் இளைஞர்களுக்கு படிப்பது வயிறு வளர்க்க என்பது மட்டும் தான் தெரிந்திருக்கிறதே தவிர படிப்பதினால் அறிவை வளர்க்கலாம் என்பது தெரியவில்லை. நீங்கள் கண்டுபிடித்தால் அரசாங்கம் உங்கள் வாசலுக்கு வந்து பூட்டு போடப்போகிறதா என்ன?
அரசு கண்டுபிடிப்பை தடுக்கவில்லை. ஆனால் கண்டுபிடிக்கும் மனோநிலை உள்ளவனை வளரவிடாமல் தடுப்பதில் சர்வ கவனத்தோடு இருக்கிறது. ஆரம்ப பள்ளியிலேயே தம்பி தம்பி என் சொல்லைத்தட்டாமல் நீ கேளப்பா தும்பி தன்னை பிடிக்காதே துஷ்டரோடு சேராதே என்று சொந்தமாக கற்பனை செய்து பாடினால் தலையில் தட்டி பாடத்தில் உள்ளதை படி என்று வாத்தியார் மிரட்டும் நாளிலிருந்தே சொந்த சிந்தனை கருகிவிடுகிறது. குழந்தையை சுதந்திரமாக சிந்திக்க விடுகிற கல்விமுறை எப்போது இந்த நாட்டில் வருமோ அப்போது தான் இந்தியர்களின் விஞ்ஞான அறிவுத்திறன் தெரியவரும். அது வரையில் கண்ணுக்கு தெரியாத அந்நிய சக்தியை அடிவருடிக்கொண்டே வாழ்வோம்.
அந்நியனின் காலடியில் கிடக்கிற தங்க கட்டிகளை விட சொந்தபந்தங்கள் தருகிற ஒருபடி கஞ்சியே உத்தமமானது என்று நீங்கள் சொல்கிறீர்கள் அதுவும் சரிதான் அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும் மாற்றுவதற்கு முன்னால் நமது மனோநிலையை மாற்ற வேண்டும். இதுவரை நம் நாட்டை பற்றிய பெருமை என்னைப்போன்ற இளைஞர்கள் பலருக்கு கிடையாது இனி அது அவர்களுக்கு வளர்வதற்கு நான் உழைக்கப்போகிறேன் இந்தியன் என்ன சாதாரணமானவனா? சத்தியத்தோடு வாழ்ந்தாலும் எங்களுக்கு தான் அதில் முதலிடம் சத்தியத்தை கைவிட்டாலும் நாங்கள் தான் அதற்கு முன்னோடி. விமானம் கண்டுபிடித்ததில் மட்டுமல்ல விமானம் வாங்குவதில் தில்லுமுல்லு செய்வதிலும் நாங்கள்தான் முன்னோடி என்று இனி பெருமையாக ஏற்றுக்கொள்கிறேன் போதுமா?