குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். நமது தமிழ்நாட்டில் அமாவாசை தினத்தை நல்ல நாளாக கருதுகிறார்கள் அன்று நிலவு இருப்பது இல்லை முழுவதும் இருளாக இருக்கிறது. இருளையும், கறுப்பையும் அபசகுனம் என்று கருதுகிற நாம் அமாவாசை நாளை மட்டும் சுபநாளாக கருதுவது ஏன்? இதற்கான விளக்கத்தை உங்களால் தரமுடியுமா?
இப்படிக்கு,
அபிஷேக்குமார்,
மலேசியா.
ஒரு பழைய திரைப்படத்தில் கதாநாயகன் அமாவாசையில் பிறந்திருப்பார். அமாவாசையில் பிறந்தவன் திருடன் என்று ஊர் முழுவதுமே அவனை பழிசொல்லி ஒதுக்கி வைக்கும் இது கதையில் மட்டும் நடக்கும் சம்பவம் அல்ல. பல இடங்களில் பலதரப்பட்ட மக்கள் இந்தமாதிரியான நம்பிக்கைகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதை இங்கு ஏன் சொல்ல வருகிறேன் என்றால் அமாவாசை என்பதை நல்ல நாளாக அனைவரும் ஏற்றுக்கொள்வது கிடையாது என்பதற்காகவே சொல்கிறேன்.
தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம். ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம் எனவே பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை
சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? என்ற கேள்விக்கு விடையை பார்ப்போம். அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.
எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அன்று இருட்டாக கறுப்பாக இருந்தாலும் கூட அது நல்லநாளே.