குருஜி ஐயா அவர்களுக்கு வடக்கன்குளத்திலிருந்து ஸ்ரீதரன் எழுதுவது. எங்கள் குடும்பத்தில் கடந்த இருபது வருடமாக கடனுக்கு மேல் கடன் ஏறுகிறது. செய்கிற தொழில் எதுவும் சரியாக நடப்பதில்லை. எனது இளைய தம்பி வாத்தியார் வேலை செய்கிறான். அவனது சம்பளத்தில் வட்டி கட்டுவதே சரியாகி விடுகிறது. என்ன செய்வது என்று புரியவில்லை எங்கள் வீட்டுக்கு வரும் சில பெரியவர்கள் உங்கள் வீடு வடக்கு பக்கமாக உயர்ந்திருக்கிறது. இதில் குடியிருக்காதீர்கள் மீறி இருந்தால் வறுமைதான் வருமென்று கூறுகிறார்கள். நாங்கள் இந்த வீட்டில் முப்பது வருடமாக இருக்கிறோம். வீட்டை மாற்றி கட்டவும் முடியவில்லை. வேறு இடம் சென்று வாழவும் முடியவில்லை. எங்கள் பிரச்சனை தீர சரியான பரிகாரம் கூறுங்கள்.
இப்படிக்கு,
ஸ்ரீதரன்,
வடக்கன்குளம்,
திருநெல்வேலி மாவட்டம்.
“வடக்கு மேடை வறுமைக்கு படுக்கை” என்பது வாஸ்து பழமொழி. வலதுபுறம் தாழ்ந்து தெற்குப்புறம் உயர்ந்து இருந்தால் தான் அந்த வீடு வாஸ்துப்படி சிறந்த வீடாக இருக்கும். நல்ல வாழ்க்கையை தரும் வீடாகவும் இருக்கும். மாறாக வடக்கு உயர்ந்து இருந்தால் வறுமையும், நோயும், வழக்கு விவகாரங்களும் வாட்டி வதைக்கும்.
வீட்டை புதுப்பித்து கட்ட முடியவில்லை என்று நீங்கள் கூறுவது புரிகிறது. கையில் சோற்றுக்கே பணமில்லாத போது புதிய சொக்காய் எப்படி வாங்க முடியும்? எனவே அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் வேறு இடத்திற்கு மாற முடியவில்லை என்று நீங்கள் கூறுவதை ஏற்பதில் தயக்கம் இருக்கிறது. மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் என்பது போல் மாறியே ஆகவேண்டும் என்று நீங்கள் உறுதியாக முடிவு செய்திருந்தால் எப்போதோ மாறி இருக்கலாம் அதை செய்யவில்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.
சில நோய்களுக்கு மருந்தை மேல் பூச்சாக பயன்படுத்தலாம். வேறு சில நோய்களுக்கு மருந்தை உள்ளுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை தவிர்த்து வரும் மற்ற நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கும். அதற்கு புண்ணுக்கு புனுகு பூசுவது போல் மேல்பூச்சு மருந்து போதும் அறுவை சிகிச்சை வேண்டாம் என்றால் வருகின்ற விபரீதத்தை தாங்கியே தீர வேண்டும். உங்களுக்கு வந்திருப்பது பெரிய கட்டி இதற்கு ஆப்ரேசன் மட்டுமே தீர்வு எனவே எதையும் யோசிக்காமல் வீட்டை காலி செய்து வெளியே வாருங்கள் நல்லது நடக்கும்.