காற்று ஊதி பறக்கவிடப்படும் பந்தும்
நீர்மீது உதயமாகும் சின்ன குமிழ்களும்
வெளிச்சத்தை தேடி பறந்து வரும் ஈசலும்
இவைகள் மட்டுமா இமைப்பொழுதில் அழிந்து போவது?
அல்ல
நமது வாழ்க்கையும் இன்றுவரை அப்படித்தான்
தாமரை இலைமீது விழுந்த
ஒரு சிறிய நீர்த்துளி
நிற்க முடியாமல் நிலைக்க முடியாமல்
உருண்டு புரண்டு தள்ளாடி தடுமாறி
தரையில் வந்து விழுவது போல
நமது வாழ்க்கையும்
உலகமென்னும் தாமரை இலையில்
தள்ளாடி தள்ளாடி
சஞ்சலத்தில் உழல்கிறது
கண்களை எடுத்து வைத்து
தெற்கு நோக்கி பார்கிறேன்
சதைகள் சுருங்கி சருமங்கள் சல்லடையாகி
நாடி நரம்பு தளர்ந்து
முதிய சடலங்கள் தெருவெங்கும் தெரிகிறது.
விக்கித்து போன கண்களை எடுத்து
வடக்கு வாசலை வருட பார்க்கிறேன்
அங்கே
சளியும் இருமலும் ஈளை புண்களும்
அங்கங்கள் பிளந்து குருதியின் ஓட்டமும்
ஐயோ வலி என்ற அழுகை ஓலமும்
கண்களில் புகுந்து காதுகளையும் ரணமாக்குகிறது
வடக்கும் தெற்கும் பார்த்து விட்டு
கிழக்கையும் மேற்கையும் பார்க்க
இதயத்தில் தெம்பு இல்லாமல்
அங்கேயும்
வறுமையும் வறட்சியும்
ஆறவே ஆறாத
பசியென்ற வயிற்று காயமும்
சகிக்க முடியாத காட்சியாக தெரியுமென்று
கண்களை மூடி
இருண்ட அறையில் மண்டியிட்டு நின்றேன்
நிலையற்ற வாழ்க்கையில்
நிலைத்திருக்கும் துன்பங்கள்
துன்பங்களை சுமந்து சுமந்து
களைத்து போன தோள்கள்
ஆனாலும்
நாளை ஒருநாள் இன்பம் வருமென்று
எதிர்பார்ப்பிலும் கற்பனையிலும்
காலம் என்ற கொடிய வண்டி
ஓடிக்கொண்டே இருக்கிறது.
எத்தனை வருடம்
எத்தனை யுகங்கள்
எத்தனை எத்தனை கல்பக்கோடி காலம்
இப்படியே போவது ?
என்றாவது ஒருநாள் முற்றுப்புள்ளி வேண்டுமே
அந்த
குழலூதும் மாயவனை
இன்றே தாழ் பிடித்தால்
இப்போதே பிறவி தளையறுத்து
முக்தி கிடைக்குமே
மூட மனமே
திசைகளை பார்க்காமல்
திசைகளின் நாயகனை
திடமாக பிடிக்க நினை
தீர்ந்துவிடும் உன் பயணம் ...