அன்புள்ள குருஜி அவர்களுக்கு பாலபத்மநாபன் பொள்ளாச்சியிலிருந்து எழுதும் மடல். எனக்கு இரண்டு மகன்கள். ஒருவன் இளங்கலை பட்டம் படித்துவருகிறான் ஐ.ஏ.எஸ் போன்ற படிப்புகளில் வெற்றிபெற வேண்டும் என்பது அவனது ஆசை. இன்னொருவன் அவனை விட நன்றாக படிப்பான், ஆனால் இப்போது தன்னால் படிக்க முடியாது படித்து வேலைக்கு செல்வதை விட விவசாயம் செய்வதோ, வியாபாரம் செய்வதோ தனக்கு சரியாக இருக்கும் எனவே நான் படிக்கமாட்டேன் என்கிறான். எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் வருத்தமாக இருக்கிறது. இவனது வருங்காலத்தை நினைத்தால் பயமாகவும் இருக்கிறது. படித்து முடித்து வேலைக்கு போனால் பாதுகாப்பான வாழ்க்கை அமையும் என்று அவன் நினைக்க மாட்டேன் என்கிறான். அவனது ஜாதகத்தை இத்தோடு இணைத்துள்ளேன் எங்கள் சொல்பேச்சு கேட்டு வழிக்கு வருவானா? அவனது வருங்காலம் எப்படி இருக்கும்? என்பதை தாங்கள் கணித்து பார்த்து எங்கள் மனதிற்கு ஆறுதல் தருமாறு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
பாலபத்மநாபன்,
பொள்ளாச்சி.
இந்திய நாடு வளம் நிறைந்த நாடாக இருக்கிறது அள்ள அள்ள குறையாத இயற்கை செல்வம் நிறைந்த நாடாக இருக்கிறது. இந்த நாட்டை நாம் தொடர்ந்து ஆளவேண்டுமானால் இம்மக்களை அடிமைகளாகவே வைக்க வேண்டும் சுரணையற்ற, சுயபுத்தி இல்லாத அடிமைகளாக இவர்கள் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்று ஆங்கில அரசாங்கம் யோசனை செய்தது.
அந்த நேரத்தில் தான் மெக்காலே என்ற வெள்ளைக்கார சீமான் சீதள நாட்டிலிருந்து வந்து குதித்தான். இந்தியாவை வடக்கும், தெற்கும், கிழக்கும், மேற்கும் பயணம் செய்து அளந்து பார்த்தான். மக்களின் அடி ஆழமான மனதை ஆழ்ந்து பார்த்தான் அப்போது அவனுக்கு ஒரு உண்மை தெரிந்தது இந்த நாட்டு மக்களிடம் உண்மை இருக்கின்ற அளவிற்கு உழைப்பு இருக்கிறது. உழைப்பு இருக்கும் அளவிற்கு தோற்று போனாலும் மீண்டும் மீண்டும் போராடி வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையை மட்டும் தகர்த்து எறிந்து விட்டால் நாட்டை அடிமைத்தளையில் எத்தனை நூற்றாண்டு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் என்று கண்டுபிடித்தான்.
நம்பிக்கையை உடைப்பது எப்படி? மனித அறிவை மயக்கம் கொள்ள வைக்க வேண்டும். மயங்கிய அறிவு சுலபத்தில் மீண்டு வராது. எனவே அவர்களது அறிவு பாதையில் விஷம் கலக்க ஆரம்பித்தான். அந்த விஷத்தின் ஒரு பகுதிதான் இன்றுவரை தொடர்ந்து வரும் படிப்பது வேலை செய்வதற்கு. படிப்பது வயிறாய் வளர்ப்பதற்கு. படிப்பது பணத்தை சம்பாதிப்பதற்கு என்ற கோழைத்தனமான நம்பிக்கையாகும்.
படித்தவனால் உத்தியோகம் பார்ப்பவனால் மட்டும் தான் வாழ முடியம் என்றால் உலகில் இன்று முக்கால்வாசிபேர் பிணமாக இருப்பார்கள். படிப்பது பணத்தை உருவாக்குவதற்கு அல்ல. அறிவை வளர்ப்பதற்கு, ஆற்றலை பெருக்குவதற்கு என்பதை உணர்ந்து கொண்டால் மட்டுமே வாழ்வில் எதிர்நோக்கி வரும் பலபேரலைகளை வெற்றிகரமாக மோதி மிதிக்கலாம். இல்லையென்றால் ஆற்றோரம் முளைத்து நிற்கும் சிறு நாணல் புல் கூட நம்மை குத்தி படுகாயப்படுத்திவிடும்.
உங்கள் மகனுக்கு பத்தாமிடம் மிக வலுவான நிலையில் இருக்கிறது. அங்கே சனி, ராகு, புதன் போன்ற கிரகங்கள் கூட்டாக சஞ்சாரம் செய்கின்றன. இந்த மூன்று கிரகங்களும் எந்த இடத்தில் சாதாரணமாக சேர்ந்திருந்தாலே ராஜ யோகத்தை தருமென்று வராகிமிகிரர், பரசாரர் போன்ற ஜோதிட மகரிஷிகள் தெளிவாக கூறுகிறார்கள். அப்படிப்பட்ட கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தால் கேட்கவே வேண்டாம் ராஜ யோகம் மிக உறுதியாக கிடைக்கும். உங்கள் புத்திரனுக்கு அந்த நிலை இருக்கிறது. படி படி என்று அவனை பாடாய் படுத்தாமல் சொந்த தொழில் துவங்க ஆக்கமும் ஊக்கமும் அனுபவமும் கொடுங்கள்.