சீடர்:- நல்ல மனிதனாக வாழ்வதுதான் மிகச்சிறந்த வாழ்க்கை என்று பெரியவர்கள் கூறுகிறார்கள் அதுவே சரியான வழி என்றும் நமக்கு தெரிகிறது. ஆனால் நல்லவன் என்றால் யார்? அவன் எப்படி இருப்பான்? அவனை சரியான முறையில் அடையாளம் கண்டுகொள்வது எப்படி? என்பது புரியவில்லை. மிக எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் நீங்கள் விளக்குவீர்கள் என்று நம்புகிறோம்.
குருஜி:- நல்ல மனிதனுக்கும், ஒழுக்கம் நிரம்பியவனுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. பார்ப்பதற்கு எளிமையாக சாதுவான முகத்தை கொண்டவனாக இருப்பவனை இவன் தான் நல்லவன் என்று உறுதிப்படுத்துவதும், கரடுமுரடான தோற்றத்தோடு ஆடம்பரமாக தெரிபவனை கெட்டவன் என்றே முடிவு செய்வதும் மிகப்பெரிய தவறு. ஒருவன் நல்லவனா? கெட்டவனா என்பதை அவனது புறத்தோற்றத்தை வைத்து முடிவு செய்யக்கூடாது. கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கலாம், பூவுக்குள்ளும் நாகம் இருக்கலாம்.
பொதுவாக நல்லவர்கள் தனக்கு நன்மை ஏற்படும் போது ஆடிப்பாடி கொண்டாடாமல் அடக்கத்தோடு இருப்பதோடு மட்டுமின்றி மற்றவர்கள் துன்பத்தை அனுபவிக்கும் போது அதற்காக இறுக்கப்பட்டு தனது மகிழ்ச்சியை விட்டுக்கொடுக்க கூடியவனாக இருப்பார்கள் என்று விதுரநீதி சொல்கிறது. இந்தக்காலம் விதுரன் வாழ்ந்த காலமல்ல. நாலாபுறத்திலும் நஞ்சு மரமாக வளர்ந்து நிற்கின்ற காலம் எனவே இந்தளவு உத்தமர்களை காண்பது அரிது. குறைந்தபட்சம் பிரச்சனைகளின் பழைய வேர்களை கிளறிப்பார்க்காமல் தீர்வை மட்டுமே நினைத்து பார்ப்பவன் நல்லவனாக இருப்பான் என்பது எனது அபிப்பிராயம்
ஒருவேளை இதுகூட அதிகப்படியான எதிர்பார்ப்பாக இருக்கலாம். இன்னும் எளிமையாக சொல்வது என்றால் ஒருவனுக்கு ஒருபொருளை கொடுத்துவிட்டு ஐயோ கொடுத்துவிட்டேனே என் கையில் இருந்திருந்தால் வேறு மாதிரி பயன்பட்டிருக்குமே என்று நினைத்து மனதிற்குள் கவலைப்படாமல் இருப்பவனை நல்லவன் என்று மிக குறைந்தபட்ச இலக்கண வரம்பு வைத்து எடுத்து கொள்ளலாம். '
சீடர்:- எப்போதும் எல்லோருக்கும் பிடித்தமானவர்களாக இனியவர்களாக நடந்து கொள்வது எப்படி? இந்த ரகசியம் பலருக்கும் தெரிவதில்லை இதனாலேயே வாழ்க்கையில் பலமுனை சிக்கல்கள் ஏற்படுகிறது. அதை தவிர்ப்பதற்கே இந்த கேள்வி கேட்கிறோம்.
குருஜி:- நல்லவனாக வாழ்வதை விட இனியவனாக வாழ்வது மிகவும் சிரமம் நல்லவனுக்கு நடந்து செல்லும் பாதை எப்போதுமே நெளிவு சுளிவு இல்லாமல் ஒரே நேர்கோட்டில் அமைந்து விடும். மற்றவர்கள் தனது செயலால் வருத்தமடைகிறார்களா? என்பதை நல்லவன் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நல்லதற்காக நல்லபடி நடந்தால் அதுவே போதுமானது. ஆனால் இனியவன் என்பது கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் கண்களை கட்டிக்கொண்டு முள் தைக்காமல் நடப்பதற்கு சமமானது நல்லதையும் செய்ய வேண்டும் அதே வேளை மற்றவர்கள் யாரும் மனம் நோகாமலும் இருக்க வேண்டும் எவ்வளவு சிக்கல்.
இன்னொரு முக்கியமான விஷயம் தன்னிடம் ஆயிரம் திறமைகள் இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும். வலிந்து சென்று தனக்கு புகழ் ஏற்படுமாறு நடந்துகொள்ள கூடாது. அதே நேரம் பிறரது சிறிய செயலை கூட கவனத்தில் கொண்டு பாராட்ட வேண்டும் தவறாக இருந்தால் இதமாக பதமாக சொல்லி திருத்த முயற்சிக்க வேண்டும். மற்றவர்கள் எவ்வளவு தான் கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி நம்மை காயப்படுத்தினாலும் மறந்து கூட அவர்கள் மீது கடுஞ்சொல்லை பயன்படுத்தக்கூடாது. நாம் சுமக்கின்ற சிலுவையை வெளியில் காட்டாமல் மனதிற்குள் சுமக்க தெரிந்தவன் பழகுவதற்கும், பார்ப்பதற்கும் இனியவன்.
சீடர்:- நல்லவனாகவும், இனியவனாகவும் வாழ்வது இறைவனின் அருளைப்பெற்று அவர் தருகிற நிரந்தரமான அன்பு நிழலில் காலம் முழுவதும் வாழவேண்டும் என்பது தான் ஒவ்வொரு மனிதனின் லட்சியமாகும். தெய்வ அருள் பெற்றால் மட்டுமே இத்தகைய வாழ்வை ஒருவன் பெற முடியும். இப்படி தெய்வ அருளை பெறுவதற்கு மனிதன் என்ன செய்ய வேண்டும்?
குருஜி:- மனிதன் தெய்வ நிலைக்கு போவதை பற்றி பிறகு சிந்திப்போம். முதலில் அவன் மனித நிலையில் வாழ்கிறானா என்பதை பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும். மனிதன் என்பவன் யார்? தான் தேடி தானே அறுவடை செய்து தானே உண்பவனா? மனிதன் நிச்சயம் இல்லை. தனக்கு என்று எதுவும் இல்லையே என்று வருந்தாமல் இருப்பதை எல்லாம் கொடுத்து விடுபவன், கொடுக்க விரும்புபவன் நல்ல மனிதன் இவனே தெய்வ நிலைக்கு உயரத்தக்கவன்.
அடக்கம், அகம்-புறம் சுத்தம், மங்களகரமான காரியங்கள் என்ற நல்ல காரியங்களை முன்னின்று நடத்துகின்ற ஆர்வம் இவைகள் இருந்தாலே ஒருமனிதன் தேவதைகளின் அருளை தினசரி பெற்று தெய்வம் என்ற நிலைக்கு உயர்ந்து விடுவான். தன்னால் எதுவும் முடியாது என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மூலையில் சுருட்டி படுத்திருப்பவன் இவர்கள் மத்தியில் தெய்வ சாந்நித்தியத்தை பார்க்கவே முடியாது. தெய்வ அருள் பெற்ற நல்லவன் மக்கள் மத்தியில் நின்று செயல்படுவான் கட்டிலில் படுத்துக்கொண்டு கனவு காண மாட்டான் மனதில் வளைபோட்டு திருட்டுத்தனமாக வாழ நினைக்கும் ஆசை என்ற பெருச்சாளியை தூக்கி வெளியில் எவன் எறிகிறானோ அவன் மத்தியில் தெய்வம் இருக்கும்...
பேட்டி – வெங்கட்டரமணன்.