மேதகு குருஜி அவர்களுக்கு லாவண்யா சுந்தரராமன் நமஸ்காரத்தோடு எழுதும் கடிதம். எனது அக்காவின் மகள் மூத்தவளுக்கு சென்ற வருடம் திருமணம் முடித்து கொடுத்தோம். புகுந்த வீடு சென்ற இரண்டு மாதத்திலேயே அந்த பெண்ணின் கணவர் விபத்து ஒன்றில் காலமாகி விட்டார். எங்களது குடும்பமே இப்போது கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது. வயதில் மிகச்சிறிய பெண்ணிற்கு தனிமரமாக நிற்கவேண்டிய விதியை இறைவன் கொடுத்து விட்டாரே என்று நினைக்கும் போது கடவுள் இரக்கம் இல்லாதவரோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் நடப்பதை ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும். என் அக்கா மகளின் ஜாதகத்தை இணைத்துள்ளேன் அவளது வருங்கால வாழ்வு எப்படி அமையும்? இரண்டாவது ஒரு வாழ்க்கை இருக்கிறதா? என்பதை தயவு செய்து கணித்து கூறவும்.
இப்படிக்கு,
லாவண்யா சுந்தரராமன்,
பட்டுக்கோட்டை.
சில நேரங்களில் மனிதர்களின் செயல்களுக்கே அர்த்தம் கண்டுபிடிக்க நம்மால் முடிவதில்லை. நமது அறிவும், திறமையும் கையளவே எனும் போது கடவுளின் செயலுக்கான காரணத்தை முற்றிலுமாக அறிந்து கொள்ள முடியுமா என்ன? நீங்கள் சொல்லுகின்ற சம்பவத்தை பார்த்தால் ஏதோ ஒரு நன்மைக்காக நடந்திருக்கும் என்று பொதுவான வார்த்தை சொன்னால் அது இரக்கமற்ற தன்மையாகும். நம் விதி அவ்வளவு தான் தாங்கி கொள்ள மனதை தேற்றி கொள்ளுங்கள் என்று சொல்வதை தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.
ஒருவர் நீண்ட ஆயுளோடு இருப்பதும், ஒரு பெண் சுமங்கலியாக வாழ்நாள் முழுவதும் இருப்பதும் நிச்சயம் நமது கையில் இல்லை. கணவன் இல்லாத ஒரு வாழ்வை பெண் ஏற்றுக்கொள்கிறாள் என்றால் அது அவள் முதுமை காலத்தில் மட்டுமே இருக்கும். வயதான காலத்தில் அவரை விட்டு விட்டு நான் போய்விட்டால் கவனிக்க ஆள் இன்றி அவர் கஷ்டப்படுவார் எனவே நான் இருக்கும் போதே அவர் போகட்டும் என்று கூறுகிற எத்தனையோ தாய்மார்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் எந்த இளம் வயது பெண்ணும் அப்படி ஒரு காரியத்தை மனதால் கூட நினைத்து பார்க்க மாட்டாள் இருப்பினும் அப்படி ஒரு நிகழ்வு அவள் வாழ்வில் நடக்கும் போது தைரியம் கொடுக்க வேண்டிய நாமே கலங்கி நின்று விட்டால் பேதை பெண்ணிற்கு யார் ஆறுதல் சொல்வார்கள்?
உங்கள் அக்கா மகளின் ஜாதகப்படி அவருக்கு நல்ல படிப்பு இருக்கிறது சிறிது முயற்சி செய்தால் அரசாங்க வேலை கிடைப்பதற்கும் யோகம் இருக்கிறது. அத்தோடு லக்கினத்திற்கு பனிரெண்டாம் இடத்தில் இருக்கும் குருவோடு, செவ்வாய் சேர்ந்திருப்பதனால் மறு விவாகம் கண்டிப்பாக உண்டு. ஆனால் அது இன்னும் மூன்று வருடத்திற்கு பிறகு தான் அதுவரை காத்திருக்கவும். நல்லது நடக்கும்.