ஐயா எனக்கு முப்பது வயதாகிறது. வர வர என் கண் பார்வை குறைந்து கொண்டே வருகிறது. மருத்துவர்கள் ஒரு காலகட்டத்தில் முழுமையாக பார்வை போய்விடுமென்று சொல்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது என் ஜாதகப்படி அப்படி ஏதாவது நடக்க வாய்ப்புள்ளதா? என்பதை தயவு செய்து கணித்து கூறுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
அப்துல்ரகுமான்,
துபாய்.
மனித உடம்பிற்கு சிரசே பிரதானம் என்று நமது முன்னோர்கள் கூறுகிறார்கள். அந்த சிரசில் விளக்காக இருப்பது விழிகள். விழிகள் இல்லையென்றால் வாழ்வில் உள்ள பல வழிகள் அடைபட்டு விடும். எனவே எந்த வகையிலாவது கண்களை காக்க வேண்டும் என்பது கட்டாயமாகிறது. ஆனால் நம்மில் பலருக்கு கண்களின் முக்கியத்துவம் தெரிவதே இல்லை. மணிக்கணக்காக கணினி முன் உட்கார்ந்திருப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, மிகவும் பிரகாசமான விளக்கு வெளிச்சத்தில் வேலை பார்ப்பது, என்று கண்களை கெடுக்கும் அனைத்து வேலைகளும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
குழந்தையின் அருமை, குழந்தை இல்லாதவனுக்கு தான் தெரியும் என்பது போல கண்களின் அருமையும் அது கெட்டபிறகு தான் தெரியவரும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?
ஒருவர் ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் லக்கினாதிபதி ஆகிய கண்களின் அதிபதிகள் ஒன்றாக கூட ஆறு அல்லது எட்டு அல்லது பனிரெண்டாவது இடத்தில் இருந்தாலும் அல்லது அந்தந்த கிரகங்களின் ஆட்சி வீடுகளில் அமர்ந்து மேலே சொன்ன இடங்களை பார்த்தாலோ கண்களுக்கு ஊனம் ஏற்படுவது உறுதி என்றும் அல்லது முன்பே ஏற்பட்டு விட்டது என்றும் துணிந்து சொல்லலாம்.
உங்கள் ஜாதகத்தில் சூரியன் மிக அதிகமான பலத்தோடு இருப்பதனால் கண்ணுக்கு பிரச்சனை இருக்கிறதே தவிர அது குருடு என்ற நிலைக்கு உங்களை கொண்டு போய் விட்டு விடாது என்று உறுதியாக சொல்லலாம். இருந்தாலும் முறைப்படி சூரிய நமஸ்காரம் செய்யவும். கண்களை அதிக வேலை கொடுக்காமல் ஓய்வில் வைக்கவும் பழகுங்கள். ஆயுள் முழுவதும் பார்வையோடு வாழலாம்.