குருஜி அவர்களுக்கு வணக்கம். நான் இப்போது உங்களிடம் கேட்கப்போகும் கேள்வி வேடிக்கைக்காகவோ, விளையாட்டாகவோ கேட்கவில்லை தயவு செய்து அதே போல கேள்வி கேட்டு உங்களை அவமானப்படுத்துவதாக நினைக்க வேண்டாம். உங்களது திருப்பாதங்களை தொட்டு மிக்க பணிவோடு இந்த கேள்வியை கேட்கிறேன்.
எனக்கு நாற்பது வயதாகிறது. இதுவரையில் ஐந்துமுறை எனது கனவில் கலைஞர் கருணாநிதி அவர்கள் வந்திருக்கிறார். தினசரி பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சியிலும் அவரை பார்ப்பதினால் அவரை பற்றி அன்றாடம் மற்றவர்கள் பேசுவதை கேட்பதனால் இப்படி கனவு வந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம் நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் அந்த கனவு வந்த காலத்தையும் அதன் பிறகு என் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் ஆழ்ந்து சிந்திக்கும் போது இந்த கனவிற்கும், என் வாழ்விற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கலாமோ என்ற எண்ணம் வருகிறது.
ஆரம்பத்தில் ஒரு மளிகை கடையில் கணக்கு எழுதுபவனாகத்தான் எனது வாழ்க்கை துவங்கியது. அப்போது கலைஞரை கனவில் முதல் முறையாக பார்த்தேன் அந்த கனவு வந்த இரண்டு மாதத்தில் வெளிநாடு சென்று வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. இரண்டாவது முறை கனவு வந்த போது ஊரில் சொந்த வீடு கட்டினேன் மூன்றாவது முறை சொந்த தொழில் துவங்கினேன் இப்படி ஒவ்வொரு முறையும் பல வித ஏற்றங்களையே காண்கிறேன் என் கேள்வி என்னவென்றால் இந்த கனவிற்கும், என் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? அல்லது நான் நினைப்பது வெறும் கற்பனை தானா? தயவு செய்து குருஜி அவர்கள் விளக்கம் தருமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
ஹரிகிருஷ்ணன்,
இராமநாதபுரம்.
கலைஞர் கருணாநிதியை பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதிப்பீடு இருக்கலாம். அவரை தலைவராக ஏற்பவர்களும், ஏற்காதவர்களும் நிறைய பேர் உண்டு. ஆனாலும் தமிழக அரசியல் நிலை என்பது கடந்து ஐம்பது வருடமாக அவர் ஒருவரையே மையமாக வைத்து அதாவது அவரை எதிர்த்தும், ஆதரித்தும் நடப்பதே தமிழ்நாட்டு அரசியல் என்ற நிலை இருக்கிறது.
அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, நாம் ஏற்கிறோமோ இல்லையோ நெப்போலியனை போல, அலெக்சாண்டரை போல கலைஞரும் ஒரு வரலாற்று புருஷர். இந்த மாநிலத்தின் அரசு தலைவராக பலமுறை இருந்திருக்கிறார். அந்த வகையில் சாஸ்திரப்படி அவர் ஒரு சத்ரியர். அரசு தலைவர் அரசர் என்று சொன்னால் அதில் தவறு இல்லை.
கனவு சாஸ்திரத்தில் அரசனை கனவில் கண்டால் வாழ்வில் பலவித உயர்வுகளும் ஐஸ்வர்யங்களும் ஏற்படும் என்றும், மணமாகாத ஒரு பெண் இத்தகைய கனவை கண்டால் நல்ல கணவன் அமைவான் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் அரசனின் குடும்பத்தாரோடு கலந்து பழகுவதாக கனவு வந்தால் நண்பர்களின் மூலமாக பெரிய அளவில் பொருள் உதவி ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே நீங்கள் கண்ட கனவின் பலன் இது தான் இதை வேடிக்கையாக நான் எடுத்து கொள்ளவில்லை.