குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். எனது உடம்பு திடகாத்திரமானது அல்ல என்றாலும் பெரியளவில் நோய்கள் எதுவும் இதுவரை எனக்கு வந்ததில்லை. தூசி, அழுக்கு இவைகளின் பக்கம் போனால் தும்மல் வரும். இதில் ஒவ்வாமை இருக்கிறது எனவே அதன் பக்கம் போகவேண்டாம் என்று மருத்துவர்கள் சொன்னதனால் ஒதுங்கியே இருப்பேன். இருந்தாலும் சென்ற மார்கழி மாதம் முதல் எனக்கு மூச்சிரைப்பு அதிகமாக இருக்கிறது. மருந்து சாப்பிட்டாலும் பலன் எதுவும் இல்லை ஜாதகப்படி எனக்கு மூச்சு சம்மந்தப்பட்ட நோயோ அல்லது ஆஸ்துமாவோ வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? அது வராமல் தடுக்க நான் என்ன செய்ய வேண்டும்?
இப்படிக்கு,
அசோக்குமார்,
பாண்டிச்சேரி.
நவக்கிரகங்களும் மனிதர்கள் உடம்பில் வெவ்வேறு விதமான ஆற்றல்களை வெளிப்படுத்துகிறது. உதாரணமாக சூரியன் வெப்பத்தையும், சந்திரன் நீர்த்தன்மையையும் தருகிறது. அதனடிப்படையில் கேது வாய்வு தன்மையை நமது உடம்பில் இயக்குகிறது.
உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு சூரிய திசையில் கேது புத்தி இந்த நேரத்தில் நடந்து வருவதனால் மூச்சுக்கோளாறு நோய் வந்திருக்கிறது. கேது திசையோ, புத்தியோ நடக்கும் போது காசம் அல்லது சருமம் சம்மந்தப்பட்ட நோய் வந்து விலகும். இன்னும் இரண்டு மாதத்தில் உங்களுக்கு கேது புத்தி மாறுவதனால் நோயும் மறைந்து விடும்.
இருந்தாலும் மூச்சு பிரச்சனை, காசநோய் இருப்பவர்கள் சிவபெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வருவதும் ஊரில் வடமேற்கு மூலையில் சிவலிங்கம் இருந்தால் சென்று தரிசனம் செய்து வருவதும் மிக நன்று.