குருஜி அவர்களுக்கு வணக்கம். எனக்கு எப்போதுமே பண பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. உலகத்தில் முக்கால்பங்கு பேருக்கு அதுதானே பிரச்சனை. அது எனக்கும் இருக்கிறது அதிலிருந்து ஓரளவு விடுபட ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள். நிறைய பேருக்கு பயனுடையதாக இருக்கும்.
இப்படிக்கு,
கிறிஸ்டோபர்,
இடையன்குடி.
பொதுவாக திருப்பதி போகும் நண்பர்களில் பலர் நேரடியாக சென்று பகவானை தரிசனம் செய்து விட்டு வந்து விடுவார்கள். ஓரளவு விபரம் தெரிந்தவர்கள் அடிவாரத்தில் இருக்கின்ற தாயாரை வழிபட்டு வருவதும் உண்டு. அம்மையப்பனை வழிபடுவது தான் அணைத்து சிக்கல்களுக்கும் தீர்வு என்றாலும் அம்மையப்பன் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொன்றை தருபவர்களாக இருக்கிறார்கள் அவர்களை அந்த நிலையில் தரிசித்தால் நிச்சயம் நாம் விரும்பியதை தருவார்கள்.
திருப்பதி ஒரு பக்தி ஷேத்திரம் மட்டுமல்ல சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு ஷேத்திரமாக, பரிகார ஷேத்திரமாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை அடுத்த முறை திருப்பதி செல்லும் போது இப்போது நான் சொல்லும் வரிசை கிரமப்படி வழிபாட்டை நடத்துங்கள். மிக கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.
முதலில் திருப்பதி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கோவிந்தராஜ பெருமாளை தரிசனம் செய்யுங்கள். அதன் பிறகு அலர்மேல் மங்கை தாயாரை வணங்கி திருமாலின் திருப்பாத தரிசனத்தையும் செய்யுங்கள். அதன் பிறகு முடிவாக குறை தீர்க்கும் கோவிந்தனான திருவேங்கடவனை கண்ணாரக் கண்டு, நெஞ்சார துதியுங்கள் பொருளாதார தடை சூரியனை கண்ட பனிபோல விலகும்.