வடநாட்டுக்காரன்தான் பிரதம மந்திரியா இருக்கனுமா? தெற்கில் உள்ளவன் பிரதம மந்திரியானா அந்த நாற்காலி உட்கார இடம் கொடுக்காதா? ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பதே வழக்கமாகி விட்டது இவர்களை எல்லாம் யார் வந்து திருத்தப்போகிறார்களோ தெரியவில்லை.
மிளகு ரசம் கொதிப்பது போல கோபத்தில் கொதிக்கிறீரே நீர் கொதிக்கிற அளவிற்கு இப்ப என்ன நடந்து போச்சி? தென்னாட்டில் உள்ளவன் பிரதமார் ஆகக் கூடாது என்று வடக்கத்தியான் சதி செய்கிறான் என்றால் நரசிம்மராவும், தேவகவுடாவும் எப்படி பிரதமாராகி இருக்க முடியும்? ஒரு வேளை இவர்கள் இருவரும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர்களா? வாய் புளித்தததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது நிதானமாக பேசினால் மூளை வேலை செய்யும்.
ஆமாம் எனக்குதான் மூளை கெட்டுபோச்சி உங்க மூளை அப்படியே தளுக்கா இருக்கு நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமர் என்று பேசுபவர்களும் ராகுல் காந்தி அடுத்ததாக வரவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவர்களும் இருக்கிறார்களே தவிர ஒருவராவது ஜெயலலிதா பிரதமரானால் என்ன? ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வாய்ப்பு கொடுத்து பார்ப்போமே என்று சிந்திப்பதற்கு கூட ஆள் கிடையாது. நரேந்திர மோடியை விட ராகுலை விட ஜெயலலிதா எதில் குறைந்து போய்விட்டார்? ராகுலிடம் இருக்கும் குடும்ப பாரம்பரியம் வேண்டுமானால் ஜெ யிடம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் மோடியிடம் இருக்கும் அனைத்து திறமைகளும் அம்மாவிடம் இருக்கிறதே? அதை ஏன் நாடு கவனிக்க மாட்டேன் என்கிறது.
மோடிஜீயும் ஒரு மாநிலத்தின் முதல்வர், அம்மாஜீயும் முதல்வர் தான் இருவருக்குமே சவால்களை எதிர்கொண்டு பழக்கம் இருக்கிறது. ஆனால் மோடிக்கும் இவருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதே அதையும் நாம் பார்க்க வேண்டும் அல்லவா? மோடி பிரதமரானால் அவரை வைத்து அவரது கட்சிக்காரர்கள் மட்டும் அதிகார பலத்தை ருசி பார்ப்பவர்களாக இருப்பார்கள் என்று சொல்லலாம். அம்மாவை பொறுத்தவரை அப்படி சொல்லிவிட முடியுமா? அவருக்கு பின்னால் இருக்கும் மன்னார்குடி உறவுகள் ஆட்டம் போட மாட்டார்களா? அவர்களை கட்டுக்குள் வைக்கும் எண்ணம் இவருக்கு உண்டா? இது ஒருபுறம் இருக்கட்டும் ஒரு அமைச்சரை ஒரு மாதமாவது ஒழுங்காக ஒரு இலாக்காவில் வைத்திருப்பாரா துக்ளக் தர்பாரில் நடப்பது போல இந்திய அரசு நடக்க ஆரம்பித்து விடுமே? இந்திய மொழிகள் அனைத்திலுமே அம்மாவை துதிபாட வேண்டிய நிலைமைக்கு உறுப்பினர்கள் வந்து விடுவார்களே
இப்போது மட்டும் சோனியாவை யாரும் துதி பாடவில்லையா? அவரை துதிபாடினால் அது இனிக்கிறது இவரை துதிபாடினால் அது கசக்கிறது என்ன ஐயா நியாயம் உங்கள் நியாயம். இப்போது சோனியா குடும்பம் பிரியங்கா குடும்பம் ஆடாத ஆட்டத்தை போடாத கூத்தை அம்மாவின் நண்பர்கள் போட்டுவிட போகிறார்களா? மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற கதையாக இருக்கிறது. உங்கள் கதை
தமிழ்நாட்டுக்காரர் தான் பிரதமராக வேண்டுமானால் அதற்கு ஜெயலலிதா மட்டும் தானா இருக்கிறார்? அவரை விட அனுபவத்தில் நிர்வாகத்திறமையில் மேம்பட்டவரான கலைஞர் கருணாநிதி இல்லையா? இந்த வயதான காலத்தில் அவரது அரசியல் சேவையை பாராட்டி பிரதமர் மந்திரி பதவியை அவருக்கு கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஜெயலலிதா, ராகுல், மோடி என்று மேட்டு குடிகளையே முன்னிறுத்த பார்க்கிறீர்களே கலைஞர் போல ஒரு ஒதுக்கப்பட்ட சமூகத்தவரை பிரதமராக்கினால் என்ன கேடு?
ஐயையோ தெரியாத்தனமாக ஜெயலலிதாவிற்கு சப்போர்ட் செய்து விட்டேன் தயவு செய்து மன்னித்து விடுங்கள். கருணாநிதியை இழுப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் வாயே திறந்திருக்க மாட்டேன். தள்ளாடுகிற வயதில் அவரை பிரதமராக்கி ஸ்டாலினை நிதி மந்திரியாக்கி கனிமொழிக்கு உள்துறை இலாகா கொடுத்து அஞ்சா நெஞ்சனுக்கு தென்மாநில மண்டல செயலாளர் பதவியை கொடுத்து தாங்காதையா நாடு தாங்காது தலைக்கு ஒருவராக இந்தியாவை கூறு போட்டு கொண்டு போகும் கொடுமையை பார்க்க என்னால் முடியாது. இன்று முதல் நான் அரசியலே பேசவில்லை என்னை விடுங்கள் எங்காவது ஓடிப்போய் பிழைத்துக்கொள்கிறேன்.