கிளி ஜோசியத்தை நம்பலாமா? கூடாதா?
இப்படிக்கு,
ஜானகி,
அமெரிக்கா.
எலி ஜோதிடம், கிளி ஜோதிடம், கரடி ஜோதிடம் என்று எத்தனையோ ஜோதிடங்கள் உலகத்தில் இருக்கிறது. ஆக்டோபஸ் மூலம் பார்க்கும் ஜோதிடம் கால்பந்தாட்டம் முடிவுகளை துல்லியமாக சொன்னதாக சிலரும் கூறுகிறார்கள். இப்படி நாட்டுக்கு ஒரு ஜோதிட முறை, தெருவுக்கு தெரு ஜோதிட முறை என்று நிறைய இருக்கிறது. இவற்றில் மிகவும் பழமையானது கிளி ஜோதிடம்.
சில பண்டிதர்கள் கிளி ஜோதிடத்தை மட்டரகமானது என்று ஒத்துக்கொள்கிறார்கள் அதற்கு காரணம் அந்த ஜோதிடத்தை தொழிலாக கொண்ட மக்கள் மிகவும் ஏழைகள் என்பதனாலேயே இருக்குமென்று நான் நினைக்கிறேன். காரணம் பட்சி சாஸ்திரம் சகுனம், நிமித்தம், ஆரூடம் என்ற வரிசையில் மிக சிறப்பான இடத்தில் இருக்கிறது.
கிளியை மிகவும் சாதாரணமான பறவையாக நாம் நினைக்கிறோம். ஆனால் நமது சாஸ்திர நூல்கள் அப்படி நினைக்கவில்லை சுகபிரம்ம மகரிஷி என்பவர் கிளியின் வடிவாகவே கருதப்படுகிறார் கிளிகள் வெளியிடுகிற பல சத்தங்களில் மந்திர அதிர்வுகள் இருப்பதாக நம்பப்படுகிறது. கிளிகளின் செயல்களுக்கும், ரிஷிகளின் செயல்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் நம்பிக்கை இருக்கிறது. அதனால் தான் கிளி எடுத்து தரும் ஜோதிட பலன்களை மக்கள் நம்புகிறார்கள்.
இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. கிளி ஜோதிடம் என்பது கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து கணக்கு போடுவது அல்ல. ஜோதிடம் கேட்பவனை அவனது மன அதிர்வுகளை வைத்து பலன் கூறும் ஆரூட முறையே கிளி ஜோதிடம் ஆகும். இதன் பலன்கள் மூன்று நாள், மூன்று வாரம், மூன்று மாதம் வரை மட்டுமே பொருந்தும். அதற்கு மேல் இந்த பலன்கள் நடைமுறைக்கு பொருந்தாது. மனிதர்கள் கூறுகிற ஜோதிடத்தை விட கிளிகள் கூறுகின்ற ஜோதிடம் சிறந்தது என்பதே என் கருத்து.
ஆனால் கிளியை ஜோதிடத்திற்கு பழக்குபவர் கால் கட்டை விரலை அசைத்து கிளிக்கு கட்டளை போடுவார் அதனடிப்படையிலேயே கிளி சீட்டு எடுத்து கொடுக்கும் இந்த முறை மிகவும் தவறுதலானது கிளி தானாக சீட்டு தரவேண்டுமே தவிர நாமாக பெறக்கூடாது எனவே கிளி ஜோதிடம் பார்ப்பவர்கள் அந்த மனிதரின் கால் விரல் அசைவையும் கைவிரல்களில் நெல் மணிகளை வைத்து அசைப்பதையும் கவனத்தில் கொண்டு அதை தடுத்து ஜோதிடம் பார்க்கலாம்.