அந்த பையனுக்கு பதினெட்டு வயதிருக்கும். முகத்தில் இன்னும் குழந்தைத்தனம் போகவில்லை. பூனை ரோமங்கள் போல அரும்பிய மீசை, தாடி, தனி அழகை கொடுத்தது. இன்னும் இரண்டு வருடம் போனால் நல்ல கம்பீர தோற்றத்தோடு அழகிய ஆண்மகனாக தென்படுவான் என்பதற்கு எல்லாவித அடையாளங்களும் அவனிடம் தெரிந்தது. ஆனால் இப்போது அவன் வைத்தகண் வாங்காமல் தரையை பார்த்துக்கொண்டிருந்தான் அடிக்கடி கை நகங்களை துடைப்பதும், அதில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா? என்று கூர்மையாக கவனிப்பதும் அவ்வப்போது நடந்தது.
அவனை அவனது தகப்பனார் என்னிடம் அழைத்து வந்திருந்தார். இவன் என் மகன் பனிரெண்டாவது வகுப்பு படித்தான். இப்போது ஒரு வருடமாக படிக்க முடியவில்லை படிக்க வேண்டுமென்று நினைத்தாலே படபடப்பாகி விடுகிறான். நீங்கள் தான் அவனை சரிபடுத்த வேண்டும் என்று சொன்னார். அவர் கூறியதற்கும், அவனது நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை என்னால் உணர முடிந்தது அவனுக்கு இதுமட்டும் தான் பிரச்சனை வேறு எதுவும் இல்லை என்று யார் கூறினாலும் யாரும் நம்ப மாட்டார்கள் காரணம் பையனை பார்த்தவுடனேயே அவன் சராசரியாக இல்லை என்பதை சொல்லிவிடலாம்.
நான் அவன் தந்தையிடம் தனியாக பேச விரும்பினேன் அவனை வெளியே அனுப்பி விட்டு இப்போது சொல்லுங்கள் உங்கள் மகனுக்கு நிஜமாகவே என்ன பிரச்சினை என்று கேட்டேன். சிறிது நேரம் மெளனமாக இருந்த அவர் ஐயா இவன் எனக்கு ஒரே மகன் இவன் பிறந்து மூன்று வருடத்திலேயே என் மனைவி வேறொருவனோடு தொடர்பு வைத்து கொண்டு போய்விட்டாள் ஒரு குழந்தையை தகப்பன் வளர்ப்பதை விட தாய் வளர்ப்பது தான் சிறந்தது என்று நினைத்து அவளை எத்தனையோ முறை மானத்தை விட்டு வாழ வரும்படி அழைத்தேன் மறுத்துவிட்டாள்
என்னோடு மனைவியாக வாழ வரவில்லை என்றாலும் பரவாயில்லை இந்த குழந்தையை வைத்துக்கொள் அவனது தேவைக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ அத்தனையும் செய்கிறேன் தாயாக இருந்து, வளர்த்து ஆளாக்கு என்று கெஞ்சி கேட்டேன். அதற்கும் அவள் உன் உறவும் வேண்டாம், உன்னால் பிறந்த குழந்தையும் வேண்டாம் என்று மறுத்து விட்டாள். பெண்களில் நல்லவர்களும் உண்டு, கெட்டவர்களும் உண்டு ஆனால் அவளே தாயாக வரும்போது நல்லவளாக மட்டுமே இருப்பாள் என்று நான் நம்பினேன். அந்த நம்பிக்கையும் என் மனைவியை பொறுத்தவரை வீணானது. வெறும் உடல் வெறிக்காக குழந்தையை இழந்து, தன்மானத்தை இழந்து, குடும்பத்தையும் இழந்து எங்கோ கண்காணாத திசையில் வாழ்கிறாள்.
போனால் போகிறது வேறொரு திருமணம் செய்து கொள் என்று பெரியவர்கள் சொன்னார்கள். ஆனால் நான் அதற்கு இடம் கொடுக்கவில்லை யாருமே இல்லாத இந்த குழந்தை, நாளை தகப்பனும் இருந்தும் இல்லாமல் அனாதையாகி விடக்கூடாது அவனுக்காக என்னை தியாகம் செய்து வாழ்வேன் என்று இதுவரை வாழ்ந்து வருகிறேன் சென்ற வருடம் வரை என் மகனுக்கு எந்த சிக்கலும் இல்லை ஒரு சராசரியான பையன் எப்படி இருப்பானோ அப்படி இருந்தான்
நான் அரசாங்கத்தில் வேலை செய்கிறேன் அடிக்கடி இடமாற்றம் என்பது வரும் என்பதனால் என் மகனை ஹாஸ்டலில் சேர்த்திருந்தேன் மாதா மாதம் என்னை பார்க்க வந்துவிடுவான். அப்படி ஒரு மாதம் வந்தவன் பித்து பிடித்தவன் போல அமர்ந்து விட்டான் பள்ளிக்கூடம் போ என்றால் மறுத்தான் கட்டாயப்படுத்தி கொண்டு போய் விட்டால் கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறான். பள்ளியிலும் விடுதியிலும் அவனை வைத்துக்கொள்ள முடியாது என்று கூறி விட்டார்கள்
அவனுக்கு என்ன நேர்ந்தது என்று எனக்கு தெரியவில்லை. மனநல மருத்துவரிடம் அழைத்து போனேன் அவரும் சிகிச்சை செய்து சில மருந்துகள் கொடுத்தார் பெரியதாக முன்னேற்றம் தெரியவில்லை. இந்த நிலையில் என்னோடு அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு நண்பர் மூலம் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் என் மகனை வந்து பார்த்தார் அவனுக்காக ஜபம் செய்தார்.
உங்கள் மகனை மிக கொடிய ஆவி ஒன்று பிடித்திருக்கிறது அதை அவனிடமிருந்து நீக்குவதற்கு நாற்பது நாட்கள் உபவாசமிருந்து ஜெபம் செய்ய வேண்டும். அதற்கு முன்னால் அவன் கர்த்தருக்கு பிள்ளையாக ஒப்புவிக்க படவேண்டும் என்று கூறினார் எனக்கு அழுகையும், ஆத்திரமும் வந்தது. நானும், என் மகனும் என்ன பாவம் செய்தோம். சம்மந்தமே இல்லாத ஒரு ஆவி, என் மகனை பிடிக்கவேண்டிய அவசியம் என்ன? அவன் வாழ்வை கெடுக்க வேண்டிய காரணம் என்ன? என்றெல்லாம் தோன்றியது.
எது எப்படியானாலும் பரவாயில்லை. என் மகன் நல்ல நிலைக்கு வரவேண்டும் அதற்கு எந்த விலையும் கொடுக்க தயார் என்று அவனுக்கு கிறிஸ்தவ போதகர் சொன்னபடி ஞானஸ்தானம் செய்து வைத்தேன் அவரும் நாற்பது நாட்கள் என் மகனோடு இருந்து தொடர்ந்து ஜெபம் செய்தார். அவர் ஜெபித்தது சரியோ, தவறோ எனக்கு தெரியாது. ஆனால் மனம் உருகும் வண்ணம் இறைவனிடம் அவர் வைத்த விண்ணப்பங்கள் கல்லையும் கரையச்செய்யும். அவர் ஜெபத்தை கேட்டு நான் எத்தனை முறையோ கதறி அழுதிருக்கிறேன்.
யார் அழுது ஜெபம் செய்து என்ன? விதியை மாற்றுவது அவ்வளவு சீக்கிரம் நடக்குமா என்ன? ஜெபம் செய்யும் காலம் முழுவதும் மாத்திரைகள் கூடாது என்று போதகர் சொன்னதனால் மருந்துகளை நிறுத்தி வைத்திருந்தேன் ஜெபம் துவங்கிய பாதி நாட்களிலேயே என் மகனின் நடவடிக்கை மிகவும் விபரீதமாக மாறிவிட்டது வீட்டு பொருட்கள் அனைத்தையும் போட்டு உடைத்தான். எல்லோரையும் மரியாதை இல்லாமல் பேசினான். அடிக்கவும் செய்தான் சில நேரங்களில் தற்கொலை முயற்சியில் கூட ஈடுபட ஆரம்பித்தான்.
இத்தனை நடந்தபிறகும் அந்த போதகர் இது அந்த ஆவியின் கடைசி கால சேட்டை. போகும் போது இப்படி எதையாவது செய்துவிட்டு போகும் என்று என்னை சமாதனப்படுத்தினார் நானும் பத்து நாட்கள் பொறுத்து பார்த்தேன் அதன்பிறகு என்னால் முடியவில்லை மருத்துவரிடம் அழைத்துச்சென்று மீண்டும் அவனுக்கு மருந்து கொடுக்க துவங்கி விட்டேன். இப்போது அவன் ஓரளவு சாந்தியாக இருக்கிறான்.
எனக்கு தெரிய வேண்டியது ஒரே ஒரு விஷயம் மட்டுமே என் மகனுக்கு வந்திருக்கும் பிரச்சனை மருத்துவர் கூறுகிறபடி மன நோயா? போதகர் சொன்னபடி ஆவியின் தொல்லையா? இரண்டில் எது பிரச்சனை என்று தெளிவாக தெரிந்தால் அந்த மார்க்கத்தை மட்டுமே கடைபிடித்து பையனை கரை சேர்க்கலாம் அல்லவா? என்று என்னிடம் கண்ணீர் மல்க கேட்டார்.
அவர் வேதனை எனக்கு புரிந்தது. ஆசை கனவுகளோடு வளர்க்கும் குழந்தை பைத்தியக்காரனாக கண்முன்னே நடமாடினால் எந்த தகப்பனால் சகித்துக்கொள்ள முடியும்? பிள்ளை இறந்து போய்விட்டால் கூட எனக்கு இறைவன் கொடுத்த பேறு இவ்வளவு தான் என்று மனதை தேற்றிக்கொள்ளலாம். ஆனால் உயிர் இருந்தும் எந்த உணர்சிகளுமே இல்லாத ஜடமாக பெற்ற மகனை பார்க்கும் துணிச்சல் யாருக்கு வரும்?
அந்த பையனை தனிமையில் அழைத்து பேசி பார்த்தேன். அவனிடமிருந்து பல கேள்விகளுக்கு மெளனமே பதிலாக வந்ததே தவிர உருப்படியான எந்த விபரத்தையும் பெற்றிட முடியவில்லை ஆனால் அவனது உடம்பில் உள்ள சில அறிகுறிகள் சாமுத்ரிகா சாஸ்திரத்தின் அடிப்படையில் மிக தீவிரமான மன நோய்க்கு ஆட்பட்டிருப்பதாக காட்டியதே தவிர ஆவி மற்றும் பேய்களின் பாதிப்பினால் அவனுக்கு இடையூறு இல்லை என்பதை தெளிவாக்கியது.
நாம் பல நேரங்களில் நமக்கு விடை கிடைக்காத, காரணம் புரியாத விஷயங்கள் பலவற்றிற்கு அமானுஷ்யமான சக்திகளே காரணமாக இருக்கும் என்ற முடிவிற்கு வந்துவிடுகிறோம். வந்தவுடனே இந்த காரியம் ஆவியின் பாதிப்பால் ஏற்பட்டது என்ற தவறுதலான பல செயல்களை செய்கிறோம். முதலில் ஒரு விஷயத்தை மிக நன்றாக கவனத்தில் கொள்ள வேண்டும் பேய்பிடித்தல், ஆவியின் தொல்லை என்பதெல்லாம் எல்லோருக்கும் வந்துவிடக் கூடியது அல்ல.
உதாரணமாக அனைவரையும் பேய் பிடித்து விடாது, பிடிக்கவும் முடியாது. ஆயிரம் மனிதர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் ஒருவரையோ, இருவரையோ தான் ஆவிகளால் தொட முடியும். காரணம் ஆவிகளால் தொடப்படுவதற்கு சில விசேஷமான ரசாயன பொருட்கள் மனித உடலில் சுரக்க வேண்டும் எண்டோ பிளாசம் என்று ரசாயன பரிபாஷையில் சொல்லப்படுகிற சுக்கிர வீரியம் என்ற சக்தி யார் உடம்பில் குறைவாக இருக்கிறதோ அவர்களை ஆவிகள் தீண்டும். அதிகமாக இருப்பவர்களை தெய்வீக சக்திகள் நெருங்கும் இவைகள் இரண்டுமே அவ்வளவு சுலபமாக மனிதர்களுக்கு அமையாது.
சாமுத்ரிகா சாஸ்திரப்படி உடலில் ஏற்படுகிற அடையாளங்களை வைத்து எப்படி ஒரு மனிதனுக்கு ஆவிகளின் தொல்லை இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள முடியுமோ அதைப் போலவே ஜாதகத்தில் ராகு, சந்திரன் செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒரே வீட்டில் சேர்க்கை பெற்று இருந்தாலும், ஒன்றுக்கொன்று ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய திரிகோணங்களில் இருந்தாலோ மிக கண்டிப்பாக தீய ஆவிகளின் தொல்லை உண்டு என்று சொல்லிவிடலாம்.
நல்லவேளையாக இந்த பையனுக்கு அப்படி ஏதும் பிரச்சனைகள் இல்லை விடுதியிலோ, பள்ளியிலோ ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் அல்லது உறவினர்கள் மத்தியில் உருவான கசப்பான விமர்சனங்கள் இவனை இப்படி மாற்றியிருக்கலாம் என்னுடைய கணக்குப்படி உறவினர்களிடம் ஏதோ ஒருவகையில் இவன் மனவேதனையை சந்தித்திருக்க வேண்டும் அதன் காரணமாகவே இப்படி இருக்கலாம் என்று கருதி மனநல மருத்துவர் சொன்னபடி சிகிச்சையை தொடருங்கள். மிக விரைவில் கிரகங்கள் நல்ல நிலைக்கு வருகிறது. பையன் கண்டிப்பாக குணமடைவான். குணமடைந்த பிறகு, ஒருமுறை திருச்செந்தூர் முருகனை சென்று வழிபடுங்கள் என்று அனுப்பி வைத்தேன்.
இந்த விஷயத்தை இங்கே நான் கூறவந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. இனம்புரியாத நோய்கள் என்றவுடன் அவைகள் கண்டிப்பாக பேய், பிசாசுகளால் தான் வந்திருக்க வேண்டும் என்று நினைப்பது மிகவும் தவறு. அனைவரையும் ஆவிகள் பிடிக்கும் என்றால் ஒருமனிதனை கூட ஆரோக்கியமாக காணமுடியாது இவனுக்கு இன்ன காலத்தில் ஆவிகளால் தொல்லை ஏற்பட வேண்டும் என்ற விதி இருக்க வேண்டும். அப்போது தான் பேய்பிடிக்கும். அதுவரையில் சுடுகாட்டில் படுத்து கூட நிம்மதியாக உறங்கலாம்.