குழந்தைகளின் பிறந்தநாள் விழா, திருமணநாள் போன்றவற்றை ஆங்கில தேதி முறைப்படி கொண்டாடுவது சிறந்ததா? தமிழ் தேதி கணக்குப்படி கடைபிடிப்பது சிறந்ததா?
இப்படிக்கு,
தனஞ்செழியன்,
செஞ்சி.
இந்துக்களாகிய நாம் ஆங்கில முறைப்படி விழாக்களை கொண்டாடுவதோ இறைவழிபாடு நடத்துவதோ நமது சொந்த நிகழ்வுகளை கடைபிடிப்பதோ சிறந்தது அல்ல என்று நியாயப்படி நான் சொன்னால் அதற்கு மறுப்பு சொல்ல நிறையப்பேர் உண்டு. ஆங்கில புத்தாண்டு அன்று திருப்பதியில் சிறப்பு வழிபாடு நடத்துவது ஏன்? ஸ்ரீரங்கத்து ரங்கநாதரின் அனந்தசயனத்தை பக்தர்களின் மிதமிஞ்சிய பக்தி அன்று மட்டும் அதிகமாக தொல்லைப்படுத்துவது ஏன்? சமயபுரத்து மாரியம்மனை கும்பல் கும்பலாக சென்று தரிசனம் செய்வது ஏன்? என்றெல்லாம் கேள்விகள் கேட்பார்கள் இதற்கு பதில் சொல்ல நிச்சயமாக நம்மிடம் சரியான உண்மையான பதில்கள் இல்லை.
வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு என்றோ போய்விட்டான். ஆனால் நம் மனுஷாளிடம் ஒட்டிக்கொண்டிருக்கின்ற வெள்ளைக்காரத்தனம் சிறிது கூட மறையவில்லை மாறாக வளர்ந்திருக்கிறது. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்ததை போல நமது ஆங்கில விசுவாசம் இன்று ஆலயத்தின் கருவறை வரையில் புகுந்துவிட்டது என்பது தான் சகிக்க முடியாத வேதனை. நான் ஆங்கிலத்தை ஆங்கில கண்டுபிடிப்புகளை குறைகூற வரவில்லை அவைகள் தாழ்ந்தவைகள் என்று சொல்லவும் தயாரில்லை. ஆனால் அவரவர் தளத்தில் அவரவர் நின்றால் தான் சொந்த பலம் கிடைக்குமென்று கூறவருகிறேன்.
ஆற்றிலிருப்பதும் மீன்தான் கடலில் இருப்பதும் மீன்தான் இரண்டுமே தண்ணீரில் வாழ்கிறது என்பதற்காக கடல் மீன் ஆற்றிலும் ஆற்றுமீன் கடலிலும் வாழ முடியுமா? ஆங்கிலேயரின் காலக்கணிதம் அவர்கள் தேசத்திற்கு அவர்கள் சீதோஷனத்திற்கு ஏற்றதே தவிர நமக்கானது அல்ல. நமக்கென்று சில வரன்முறை கணக்குகள் உண்டு. அதன்படி செயல்பட்டால் தான் நமக்கு நல்லது.
நமது பிறந்தநாள், நாம் பிறந்த அன்று எந்த நட்சத்திரம் இருக்கிறதோ அந்த நட்சத்திரத்தையே நமது பிறந்த தினமாக கொண்டாட வேண்டும். ஒருவரது நினைவு தினத்தை கடைபிடிப்பதற்கு இந்த நட்சத்திர கணக்கு உதவாது. அதற்கு திதி முறையை தான் கையாள வேண்டும் அதே போல திருமண நாளை நட்சத்திர தினத்தில் கொண்டாடுவதா? திதி தினத்தில் கொண்டாடுவதா என்று நமது சாஸ்திர நூல்கள் எதுவும் கூறவில்லை. காரணம் திருமண நாளை கொண்டாடுவது நமது பண்பாட்டிற்கு வெளியிலிருந்து வந்ததாகும்.
திருமணமாகி குழந்தை பெற்று பேரன், பேத்திகளை கண்டு நிறைவான இல்லறம் நடத்திய பிறகு அறுபதாவது வயதில் ஒரு திருமண விழாவும், எழுபது மற்றும் எண்பது வயதுகளில் இன்னொரு திருமண விழாவும் கொண்டாடி வாழையடி வாழையென நாங்கள் வாழ்ந்தது போல நீங்களும் வாழ்ந்து சிறப்போடு இருங்கள் என்று ஆசிர்வாதம் செய்வது தான் நமது முறையே தவிர வருடம் தோறும் திருமண நாளை கொண்டாடுவது நமக்கு உகந்தது அல்ல.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் நமது பண்பாட்டு இலக்கணம் ஒருவனோ ஒருத்தியோ வெற்றிகரமாக ஒருவருடம் இணைந்து வாழ்ந்து விட்டார்கள் என்று வியப்போடு பாராட்டுவது ஐரோப்பிய பண்பாட்டின் லட்சணம் அங்கே இருந்து இங்கே வந்த எத்தனையோ பழக்கங்களில் இதுவும் ஒன்று.