குருஜி அவர்களுக்கு ஸ்தோத்திரம். ஏசு சாமி உங்களுக்கு நன்மை செய்ய மன்றாடுகிறேன் நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழுகிற ஒரு மீனவ கிறிஸ்தவ பெண். இங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். ஆண்டவர் என் குடும்பத்தின் மீது ஏனோ கருணைகாட்ட தாமதம் செய்கிறார் எனது அண்ணன் துபாய் நாட்டில் வேலை செய்கிறார் அவர் சம்பாத்தியம் எல்லாம் அப்பா அம்மா இருவருக்கும் மருத்துவ செலவிற்கே சரியாகி விடுகிறது எனக்கும் என் அண்ணனுக்கும் இன்னும் திருமணம் நடக்கவில்லை எங்கள் குடும்பம் பல காலமாகவே முன்னேற்றம் இல்லாமல் கிடக்கிறது. என் அப்பா சொல்கிறார் எங்கள் வீடு இப்போது இருக்கும் இடத்திற்கு எதிர்பக்கம் ஒரு சுடலைமாட சாமி கோவில் இருந்தது காலபோக்கில் அது அழிந்து விட்டது அந்த தெய்வத்தை கவனிக்காததாலும் நாங்கள் வேற்று மதம் என்பதாலும் அந்த தெய்வம் எங்களை வாழ விடவில்லை என்கிறார் அது உண்மையாக இருக்குமா? அப்படி இருந்தால் நாங்கள் தப்பிப்பதற்கு என்ன வழி தயவு செய்து சொல்லி எங்களை காப்பாற்றுங்கள்
இப்படிக்கு,
சலேட்மேரி,
கன்னியாகுமரி.
இந்து கடவுள்களுக்கு மதம் மாறியவர்களை பிடிக்காது மீறி மாறினால் அவர்களை எப்படியும் பழிவாங்கி விடும் என்று சொன்னால் இந்தியாவில் இன்று நிறைய மனிதர்கள் இருக்கவே மாட்டார்கள் நீங்களும் நானும் வைத்திருக்கிற மதம் நமக்கு தானே தவிர தெய்வங்களுக்கு இல்லை
மனிதனாக இருப்பவனே சக மனிதன் தவறு செய்தால் அவனை மன்னிக்க வேண்டுமென்று இந்து தர்மம் சொல்கிறது மனிதனுக்கே இந்த நியதி என்றால் தெய்வங்களுக்கு இந்த நியதி பொருந்தாதா என்ன? மேலும் கடவுள் என்பவர் நமது நன்மை தீமைகளை பார்த்து தண்டனையோ பரிசோ தருகிற நீதிபதி அல்ல. அவர் அதையும் விட மேன்மையானவர், மென்மையானவர், அன்பானவர். அதனால் தான் அவர் கடவுள் மன்னிக்க தெரியாமல் இருப்பதனால் தான் நாம் மனிதன்
உங்களது கஷ்டங்களுக்கு காரணம் சுடலைமாட சாமி அல்ல உங்கள் வீட்டை வாஸ்துபடி நீங்கள் அமைக்காததே காரணம் என்று நினைக்கிறேன் காரணம் பெற்றவர் இருவரும் நோயாளி. பிள்ளைகள் இரண்டும் துரதிருஷ்டசாலி என்றால் ஒன்று முன்னோர்களின் சாபம் பாவம் என்று இருக்க வேண்டும் அல்லது வாஸ்து தோஷம் இருக்க வேண்டும் அதை பார்த்து சரி செய்யுங்கள் உங்கள் வீட்டுக்கு எதிரே இருக்கும் சுடலைமாட சாமியே நல்லதை நடத்தி வைப்பார்.