குருஜி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் எழுதிவரும் கட்டுரைகள் ஒவ்வொன்றையும் தவறாமல் படிக்கும் பலரில் நானும் ஒருவன் நீங்கள் ஒரு பதிவில் பிராமணன் என்பது பிறப்பால் வருவது அல்ல குணத்தால் வருவது என்று சொல்லியிருக்கிறீர்கள் உங்களின் ஒவ்வொரு வார்த்தையையும் வேத வாக்காக எடுத்துக்கொள்ளும் நான் பிராமணனாக பிறந்தாலும் பிராமணத்தன்மையோடு இல்லை என்பதை புரிந்து கொண்டு அப்படி முழுமையான பிராமணனாக மாறுவதற்கு முயற்சி செய்து வருகிறேன் இந்த நேரத்தில் எனக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது
ராவனணன் அரக்கனாக இருந்தாலும் அறம் மறுத்த செயல்களை செய்தவனாக இருந்தாலும் அவனொரு பிராமணன் அவனை கொன்றதனால் ஸ்ரீ ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது என்று படித்தேன் பிராமணத்தன்மை என்பது உடம்பில் அல்ல புத்தியில் அறிவில் எனும் போது ராவணனை எப்படி பிராமணனாக ஏற்றுக்கொள்ள முடியும்? அவனை கொன்றால் பிரம்மஹத்தி தோஷம் எப்படி ஏற்படும்? தயவு செய்து எனக்கு புரியவையுங்கள்.
இப்படிக்கு,
திருமலை வாசன் நம்பி,
லண்டன்.
திராவிட சிந்தனையாளர்கள் தமிழ் தேசியவாதிகள் என்று கூறிக் கொள்கிற பலரும் ராவணன் திராவிடன், ராமன் ஆரியன் என்றும் இராமாயண சண்டையே திராவிடத்தின் மீதான ஆரிய படையெடுப்பு என்று முற்றிலும் முரணான தகவல்களை பரப்பி வருகிறார்கள் இதில் வேடிக்கை என்னவென்றால் ஆரியன் என்றால் அவன் பிராமணன். ஆரிய படையெடுப்பு என்றால் அது பிராமண படையெடுப்பு என்றும் மிக உறுதியாக தாங்களும் நம்பி மற்றவர்களையும் நம்பவைத்து பேசி வருகிறார்கள் இவைகளை பார்க்கும் போது சில சமயம் வேடிக்கையாகவும் சில சமயம் வேதனையாகவும் தெரிகிறது.
ஆரியன் என்றாலே பிராமணன் என்றால் ராமன் பிராமணனா? அல்லது அவனது மூதாதையரில் யாராவது ஒருவன் பிராமணனாக இருந்தானா? வால்மீகி துவங்கி கம்பன் வரையிலும் எழுதிய எந்த ராமாயணங்களிலும் அப்படி ஒரு சிறிய குறிப்பு கூட கிடையாது. ராமனும், ராமனது முன்னோர்களும் சத்ரிய வம்சத்தை சேர்ந்தவர்கள் அதில் யாருக்குமே சந்தேகம் இல்லை பிறகு எப்படி ராமனின் படையெடுப்பை ஆரிய படையெடுப்பு என்று கூறுகிறார்கள் என்பது நமக்கு புரியவில்லை
ஒரு சமயத்தில் புலிகளின் குரல் என்ற விடுதலை புலிகளின் வானொலி கூட ராமாயணம் என்பது ஆரிய படையெடுப்பே என்ற தகவலை வெளியிட்டது அதற்கு இசைந்தார் போல புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ராம ராவண யுத்தம் ஆரிய திராவிட யுத்தமாக பார்க்கப்பட வேண்டிய நிலை இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். இதை இங்கு எதற்காக கூறுகிறேன் என்றால் ஒரு தவறான தகவலை மீண்டும் மீண்டும் உரக்க கூறினால் அதை சாதாரண மக்கள் மட்டுமல்ல பெரிய தலைவர்களும் கூட நம்பிவிடுகிற அவலம் ஏற்படுகிறது.
இப்போது பிரம்மஹத்தி தோஷம் என்ற பகுதிக்கு வருகிறேன் பிராமணனை கொன்றால் இந்த தோஷம் ஏற்படுவதாக சில சாஸ்திர நூல்கள் கூறுகின்றன கொல்லுதல் என்பது கொலை செய்வது உயிரை பறிப்பது என்பது தான் உயிரை பறித்தல் என்பதே பாவமான காரியம் எனும் போது பிராமணனை கொன்றால் மட்டும் விசேஷ பாவமா? அது எப்படி உயிர்கள் அனைத்தும் சமம் என்பதற்கு ஆதாரமாகும் எனவே நிச்சயம் பிரம்மஹத்தி தோஷம் என்றால் அந்த பொருள் மட்டுமே அதற்கு இருக்காது வேறு பொருளும் இருக்க வேண்டும். இந்த சொல்லுக்கான உண்மையான பொருள் மற்ற நூல்களில் கிடைப்பதை விட மஹாபாரதத்தில் மிக தெளிவாக கிடைக்கிறது அதை பார்த்த பிறகு இந்த கேள்விக்கான பதில் சந்தேகமே இல்லாமல் தீர்வாகி விடும்.
வீட்டுக்கு தீ வைப்பது, விஷம் கொடுத்து உயிர்களை கொல்வது, மனைவியை விபச்சாரம் செய்ய வைத்து அதன் மூலம் ஜீவனம் நடத்துவது, பொதுக்காரியங்களுக்கான பொருள்களை சுயலாபங்களுக்கு விற்பது, கொலை செய்யும் நோக்கத்தில் ஆயுதங்கள் தயாரிப்பது, கோள் சொல்வது, நண்பனுக்கு துரோகம் செய்வது, மாற்றான் மனைவியை விரும்புவது, குருவின் மனைவியோடு தகாத உறவு வைப்பது, தன்னையும் தனது சுற்றுப்புறத்தையும் அசுத்தமாக வைப்பது, முன்னோர்களை நிந்தனை செய்வது, ஆபத்தில் இருக்கும் ஒருவனை காக்கும் வழி இருந்தும் காப்பாற்றாமல் போவது, கடவுளின் அருளையோ தனது சுய பலத்தையோ நம்பாமல் வாழ்வது எல்லாமே பிரம்மஹத்தி தோஷம் வேதம் கற்று வேத மந்திரங்களை சுருதி தவறாமல் உச்சரிக்க தெரிந்து இருப்பவனையும் கொலை செய்தாலும் அதுவும் மேற்படி தோஷமே என்பது மஹாபாரதத்தின் கருத்தாகும்.
இதில் கவனிக்க வேண்டியது வேத மந்திரங்களை சுருதி தவறாமல் உச்சரிப்பவனையும் கொன்றால் பிரம்மஹத்தி தோஷம் உண்டு என்பதே ஆகும். வேதத்தை யார் வேண்டுமானாலும் தெரிந்து வைத்திருக்கலாம் ஆனால் வேதத்தின் ஜீவநாதத்தை எல்லோராலும் அறிந்து வைத்திருக்க முடியாது அப்படி அறிந்து வைத்திருப்பவன் வேத நெறிகளின் படி வாழாதவன் என்றாலும் கூட தான் அறிந்த சந்தத்தை மற்றவர்களுக்கு கற்று கொடுப்பதற்கு உகந்தவன் ஆவான். அப்படிபட்டவன் கொலை செய்யப்பட்டால் நாலு மாணவனாவது வேத சந்தத்தை அறியாமல் அவதிப்படுவான். எனவே அவனையும் கொல்லாதே அதுவும் பாவம் என்பதே இங்கு முக்கிய பகுதியாகும்.
உண்மையில் இராமாயணப்படி ராவணன் தான் பிராமணன் சாம வேதத்தை கல்லும் கனியும் படி இசைக்க வல்லவன் தமிழ் தேசிய வாதிகள் ஆரியன் என்று சொல்வதாக இருந்தால் ராவணனை தான் சொல்ல வேண்டுமே தவிர ராமனை அல்ல ராவணன் கொடுமையனவனாக இருந்தாலும் வேதம் அறிந்தவன் வித்தை தெரிந்தவன் கல்வியாளன் எனவே அவனுக்காக ராமன் தோஷ நிவர்த்தி செய்ததில் தவறு இல்லை...