குருஜி அவர்களுக்கு வணக்கம். நான் விரும்புகிற பெண் எதிலும் திட்டமிட்டு வாழ வேண்டும், தேவை அறிந்து செயல்பட வேண்டும் தகுதிக்கு மீறி ஆசைப்படக்கூடாது என்கிறாள். அவள் கூறுவது சரியா? தவறா? இந்த கருத்துக்களை மையமாக வைத்து பார்க்கும் போது அவளது குணாதிசயம் என்ன? அவளோடு சிக்கலின்றி வருங்காலத்தில் வாழ முடியுமா? என்று யோசிக்கிறேன். தயவு செய்து எனக்கு நல்ல தெளிவை தாருங்கள்.
பெயர் வெளியிட விரும்பாத
உஜிலாதேவி வாசகர்,
சென்னை.
திட்டமிட்டு வாழ வேண்டும் என்று கூறுவதை தவறு என்று சொல்லிவிட முடியாது. வாழ்வில் நடக்கும் சம்பவங்களை எதிர்கொண்டு அனுபவப்படுத்தி கொள்வதற்கு திட்டமிடுதல் என்பது அவசியமே. ஆனால் நான் முன்பே இது இப்படித்தான் நடக்க வேண்டுமென்று திட்டமிட்டு விட்டேன் அதன்படிதான் நடக்க வேண்டுமே தவிர வேறு மாதிரியாக நடந்தால் ஒத்துக்கொள்ள முடியாது என வாதிடுவதும், பிடிவாதம் செய்வதும் புத்திசாலித்தனமாகாது.
பெரிய வெள்ளத்தில் சிக்கி கொண்ட ஒருவன் மரக்கிளை ஒன்றை பிடித்து ஊசலாடி கொண்டிருந்தான் அந்த வழியாக வந்த மீட்பு படகு ஒன்று அவனை ஏறி கொள்ள சொன்னது. ஆனால் அவன் நான் கடவுளை நம்புகிறேன் நிச்சயம் அவர் வந்து என்னை காப்பாற்றுவார் நீங்கள் போங்கள் என்று அனுப்பி விட்டான்.
இப்படியே ஒன்றிரண்டு மீட்பு படகுகள் வந்தும், அவன் ஏறி கொள்ளவில்லை கடவுள் வருவார் காப்பாற்றுவார் என்று இருந்து விட்டான் முடிவில் வெள்ளம் அதிகரித்து அவன் தவறி விழுந்து மறித்து போனான். மேலுலகம் போனவுடன் கடவுளிடம் உன்னை நம்பினேனே என்னை காப்பாற்றாமல் விட்டு விட்டாயே இது சரியா என்று சண்டை போட்டான்.
கடவுள் சொன்னார் நான் ஒருமுறை அல்ல, மூன்று முறைக்கு மேலே உன்னை காப்பாற்ற வந்தேன் நீதான் ஏறிக்கொள்ள வில்லை என்று பதில் சொன்னார் அப்போது தான் அந்த புத்திசாலிக்கு புரிந்தது கடவுள் வருகிறார் என்றால் ஆதிசேஷனோடு சங்கு சக்கர தாரியாக மட்டுமே வருவார் என்று எதிர்பார்ப்பது தவறு படகாகவும் கூட அவர் வரலாம் என்பது விளங்கியது. திட்டமிடுதலும் தீர்மானித்தலும் இலக்கை அடைவதும் ஏறக்குறைய இப்படித்தான்
ஆற்றங்கரையில் உள்ள நாணல் வளைந்து கொடுத்து வாழ்வது போல வாழத்தெரிந்தவனே இந்த உலகில் ஜீவித்திருக்க முடியும். மற்றவர்களால் முடியாது. மேலும் நீங்கள் குறிப்பிடுவது படி இந்த பெண்ணினுடைய வார்த்தைகளை வைத்து அவளது இயல்பை கணக்கு போடுவதாக இருந்தால் சிக்கனம் மிகுந்த பெண் என்று கூறலாம்.
இதே நேரம் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள் திருமணம் முடிந்த பிறகு இத்தனை குழந்தைகள் போதும் என்று நினைத்தால் அதன் பெயர் சிக்கனம். திருமணமே நடக்காத போது வாழ்க்கை துணை யாரென்றே முடிவு செய்யாத போது இத்தனை குழந்தைகள் போதும் என்று நினைப்பதும் பேசுவதும் சிக்கனத்திற்கு அடுத்தகட்ட பெயரான கருமித்தனத்தை குறிக்கும்
இறைவன் கொடுத்த பாதையில் நடந்து செல்வதே வாழ்க்கையாகும் என் இலக்கு இது, என் ஆசை இது, என் நோக்கம் இது என்று உறுதிப்படுத்தி கொண்டு அதற்க்கான தகுதியை வளர்த்து கொண்டே நடந்து சென்றோம் என்றால் கண்டிப்பாக சரியான நிலைபாட்டை இறைவன் தருவான். அதை விட்டு விட்டு எல்லாவற்றிற்கும் நான் தான் அதிகாரி அனைத்தையும் நானே செய்து முடிப்பேன் என்றால் வீணான கஷ்டங்கள் மட்டுமே மிஞ்சும்.