குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். சொந்தமாக தொழில் செய்கிறேன். வருவாய் என்பதும் இல்லாமல் இல்லை ஆனால் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் கையில் பணமே தங்கமாட்டேன் என்கிறது. உங்கள் ஜாதகப்படி நிச்சயம் சொத்து, சுகம் உண்டு என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள். ஆனால் அதற்கான அறிகுறியே தென்படவில்லை. சொன்னால் நம்ப மாட்டீர்கள் தினசரி ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்தாலும் கூட சொந்தமாக ஒரு இரு சக்கரவாகனம் வாங்க இன்னும் முடியவில்லை. என் ஜாதகத்தில் தவறு இல்லை எனும் போது வாஸ்து படி ஏதாவது தவறு இருக்குமோ நான் பண பெட்டியை வைக்க கூடாத இடத்தில் வைத்திருக்கிறேனோ என்று தோன்றுகிறது. தாங்கள் எனக்கு அது சம்மந்தமான அறிவுரைகள் தந்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.
இப்படிக்கு,
முத்துபாண்டியன்,
காரைக்குடி.
வாஸ்து சாஸ்திரம் என்பது நமது வாழ்க்கைக்கு பல விதத்திலும் உதவியாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. மிக நுணுக்கமான சின்ன சின்ன காரியங்களை கூட இப்படி செய்தால் தான் நன்றாக இருக்கும், நலம் பெற முடியும் என்று நமக்கு தெளிவாகவே உணர்த்துவதில் வாஸ்துவை விட்டால் வேறு எதுவும் இல்லை என்று உறுதியாக சொல்லலாம்.
வாஸ்து என்பதை ஒரு ஜோதிட கலை கண்ணுக்கு தெரியாத மாய பொருளோடு உறவாடுகிற கலை என்று நினைக்க வேண்டிய அவசியமே இல்லை. நேருக்கு நேராக பரிசோதனை செய்து சரியா தப்பா என்று உடனடியாகவே முடிவு செய்து விடலாம்.
உதாரணமாக ஒருவர் நன்றாக சம்பாதிக்கிறார் நிறைய வருமானம் வருகிறது என்று வைத்து கொள்வோம். ஆனால் அவர் குடும்பத்தில் மருத்துவ செலவு மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளில் ஒருவருக்கு கூட பொறுப்பில்லை என்ற நிலை இருக்குமானால் நிச்சயம் அந்த வீட்டில் பணம் வைத்து புழங்குவது வடகிழக்கு மூலையில் இருக்க வேண்டும். இதை அந்த வீட்டிற்கு சென்றுதான் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை சம்பவங்களை சொன்னவுடன் தெரிந்து கொள்ளலாம்.
இதே போல தென்கிழக்கு மூலையில் பணப்பெட்டி இருந்தால் விரய செலவுகளும் கொடுத்தகடன் திரும்பிவராத நிலையும் இருக்கும். வடமேற்கில் இருந்தால் பணம் வரும் போகும் ஆனால் நிரந்தரமான கடன்காரனாக வைத்து அல்லல்படுத்தும் இவைகள் சாஸ்திரங்கள் அல்ல கண்ணெதிரே பார்க்கின்ற நிஜங்கள்.
தென்மேற்கு மூலை அதாவது குபேர மூலையில் வடக்கு திசையை பார்த்த மாதிரி பணப்பெட்டி இருந்தால் கண்டிப்பாக பணத்தட்டுப்பாடு ஏற்படாது செலவுகளை திட்டமிட்டு செய்து விரயத்தை குறைக்கலாம். அதே பகுதியில் கிழக்கு பார்த்து பணப்பெட்டி இருந்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் பல நல்ல காரியங்களும் நடந்து கொண்டே இருக்கும்.