சுவாமிஜி அவர்களுக்கு நமஸ்காரம். சில மாதங்களாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன் உண்மையில் சொல்வது என்றால் இவ்வளவு அறிய தகவல்கள் இருக்கிறதா? இப்படியும் எழுத முடியுமா? என்று பெரிய வியப்பே எனக்கு வருகிறது. மிக முக்கியமான சந்தேகம் ஒன்று உங்களிடம் கேட்க வேண்டும் சந்திராஷ்டமம் என்றால் என்ன? அந்த நாளில் நன்மைகள் எதுவும் செய்யக்கூடாது என்பது சரியா? என்று உங்களிடம் கேட்க விரும்புகிறேன் இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்
இப்படிக்கு
கன்னியப்பன்சுகுமார்
மலேசியா
நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிப்பிட்ட கால அவகாசம் தனித்தனி ராசியில் இருப்பதற்கு எடுத்துக்கொள்ளும். உதாரணமாக குரு மீன ராசியில் இருக்கிறது என்றால் சரியாக பனிரெண்டு மாதம் கழித்தே அடுத்த ராசிக்கு அதாவது மேஷத்திற்கு நகர்ந்து வரும் சனி இரண்டரை வருடம் ஒரு ராசியில் இருக்கும் இதே போலவே சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை நாட்கள் வாசம் செய்யும்
இப்படி சந்திரன் நகர்ந்து வரும் ராசி நமது ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசி என்றால் அங்கே சந்திரன் இருக்கும் இரண்டரை நாட்கள் காலம் என்பது நம்மை பொறுத்த வரையில் சந்திராஷ்டம காலமாகும். சந்திரன் என்றாலே அவனை புத்திகாரகன் மனோகாரகன் என்று தான் அழைப்பார்கள். நமது புத்தியும் மனமும் மறைந்து விட்டால் செயல்பாட்டில் எப்படி தெளிவு இருக்கும்?
அதனால் தான் சந்திரன் எட்டாமிடத்திற்கு வருகின்ற நேரத்தில் புதிய காரியங்கள் எதையும் துவங்க வேண்டாமென்று பெரியவர்கள் கூறுகிறார்கள். இது புதிய காரியம் நல்ல காரியம் என்பவைகளை மட்டுமே குறிக்குமே தவிர உண்பது உறங்குவது போன்ற அன்றாட காரியங்களை குறிக்காது எனவே அதை தடை இன்றி செய்யலாம்.