விழுப்புரம் பகுதியில் கதம்ப சாம்பார் என்று ஒன்று வைப்பார்கள் இன்ன காய்கறி என்று வரைமுறை கிடையாது கையில் கிடைத்தவைகளை நறுக்கி போட்டு மணக்க மணக்க சாதத்தில் ஊற்றி தருவார்கள் என்ன சாம்பார் சாப்பிட்டோம் என்னதான் இதன் சுவை என்று மண்டையை போட்டு உடைத்தாலும் கண்டுபிடிக்கவே முடியாது அந்த மாதிரி தான் இப்போதைய நாட்டு நிலவரமும் இருக்கிறது
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் மாதிரி சொல்றீங்க டெல்லியில் ஆட்சி அமைக்க மக்கள் கிட்ட எஸ்.எம்.எஸ் மூலம் கருத்து கேட்க போறாங்களாம் இது என்ன விளையாட்டுத்தனம் தேர்தல் என்பது டிவியில் நடக்கும் பாட்டு போட்டியா? எஸ்.எம்.எஸ் போட்டு போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு ஐ.ஆர்.எஸ் அதிகாரிக்கான செயல் மாதிரியே தெரியலேயே
இந்த லட்சணத்தில் இந்த மாகானுபவரிடம் பாடம் கற்க போகிறாராம் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியை நேற்று துவங்கிய தேமுதிக என்று நினைத்தாரா? அதன் வரலாறு என்ன? பாரம்பரியம் என்ன? அதை உருவாக்க தலைவர்கள் செய்த தியாகங்கள் தான் என்ன? ஒரு பேராசிரியர் மாணவனிடம் வந்து பாடம் படிக்க போகிறேன் என்று சொல்வது போல ராகுல் காந்தியின் பேச்சு இருக்கிறது. நரேந்திர மோதி தான் படிக்காதவர் அவருக்கு வரலாறு தெரியாது என்று வாய் கிழிய கத்துகிற காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் வரலாறு தெரிந்திருக்கிறதா என்ன? இதை எல்லாம் பார்க்க வேண்டும் என்பது நம்ம தலையெழுத்து
இந்த கூத்தை கூட மன்னிக்கலாம் நம்ம தமிழ்நாட்டில் நடக்கும் கூத்தை நினைத்து பார்த்தாலே நெஞ்சமெல்லாம் அதிருது தமிழ்நாட்டை மின்சார தட்டுபாட்டிலிருந்து காப்பாற்றுவதற்கு இன்னும் வழி தெரியவில்லை அரசாங்க பள்ளிகளின் கல்விதரம் படுபாதாளத்திற்கு போய்க்கொண்டே இருக்கிறது அதை மீட்க தெரியாமல் அரசு பள்ளிகளை மூடி கொண்டுவரும் நேரத்திலேயே மதுக்கடைகளை திறக்கிறார்கள் மக்கள் பணி திட்டங்களை செய்வதற்கு பதிலாக ஓட்டல் நடத்துவது குடிநீர் விற்பனை செய்வது என்று உருப்படாத காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்கள் இந்தியாவின் பிரதம மந்திரியாகி நாட்டை வழிநடத்த போகிறார்களாம்? நினைத்து பார்க்கவே தமாசாக இருக்கிறது
ஏன் ஜெயலலிதா பிரதமராக வரக்கூடாதா? அவறுக்கந்த தகுதி இல்லையா என்ன? பலமே இல்லாத சரண் சிங் பிரதமராகலாம் நாலுபேரை வைத்து கொண்டு சந்திரசேகர் ஆட்சியை பிடிக்கலாம் குஜரால் கவுடா போன்றோர்கள் கூட பிரதமர் நாற்காலியில் உட்காரலாம் ஒரு தமிழர் உட்கார கூடாதா? நரேந்திர மோதி மட்டும் ஜெயலலிதாவை விட எந்த வகையில் உயர்ந்தவர் நரேந்திர மோதியை உப்பளத்தில் உப்பு எடுப்பவரோடு ஒப்பிட்டால் ஜெயலலிதாவை உப்பே இல்லாத பாலைவனத்தில் உப்பு எடுப்பவராக சொல்ல வேண்டும் அவர் வளர்ந்த குஜராத்தை வளமாக ஆக்கினார் இவர் வறண்ட தமிழகத்தை தானே முன்னேற்றுகிறார் அந்த வகையில் மோடியை விட ஜெயலலிதாவிற்கு அதிகமான தகுதி இருக்கிறது. இதில் சிரிப்பதற்கு ஒன்றுமே இல்லை
பிரதமர் பதவிக்கு தமிழர் வரலாமா? நரிக்குறவர் வரலாமா? என்றெல்லாம் பேசவில்லை வெறும் நாற்பது தொகுதிகளை கூட பிடிக்க முடியுமோ? முடியாதோ? என்ற ஊசலாட்டத்தில் கண்டிப்பாக ஊரு இரண்டு பட்டுவிடும் கூத்தாடிகள் கொண்டாடலாம் என்று போடுகிற கணக்கை நினைத்தால் தான் சிரிப்பு வருவதாக சொன்னேன்
ஜெயலலிதாவை விட்டு தள்ளுங்கள் சென்ற சட்டசபை தேர்தலை போலவே இந்த நாடுளுமன்ற தேர்தலிலும் நம்ம கேப்டன் தான் கிங் மேக்கராக தமிழ் நாட்டை பொறுத்தவரையில் இருக்கிறார் என்கிட்டே உள்ளது இவ்வளவு தான் இதற்கு மேல் எதுவுமே கிடையாது அடிப்பதும் குடிப்பதும் தான் எங்களது சித்தாந்தம் என்று அவர் மேடை போட்டு கூப்பாடு போட்டாலும் அதிஷ்ட காற்று என்னவோ அவர் பக்கம் தான் வீசுகிறது. ஒரு காதலியின் வரவுக்காக காதலன் காத்திருப்பது போல கோபாலபுரத்தில் ஒரு காவிய காதலர் காத்திருக்கிறார் காவி நிறத்து காதலர்களோ தாமரை இல்லத்தில் வழி மீது விழி வைத்து காவல் கிடக்கிறார்கள் சத்தியமூர்த்தி பவனின் சத்திய கீர்த்திகள் கேப்டன் வருவார் ஆறுதல் தருவார் என்று கால்கடுக்க தவம் செய்கிறார்கள் ஆனாலும் கேப்டனின் நரசிம்ம பார்வை இன்னும் யார் மீதும் விழவில்லை அவர் மீதே விழுந்திருக்கிறதா? என்றும் தெரியவில்லை
கண்டிப்பாக அவர் தன்னை கண்ணாடியில் பார்த்திருப்பார் என்று சொல்ல முடியாது எதோ ஒருவித கனவு உலகிலேயே சஞ்சாரம் செய்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் முதல் முதலில் இலங்கை தமிழரின் விவகாரத்தை சர்வேதேச மன்றத்திற்கு எடுத்து செல்ல தகுதியும் திறமையும் வாய்ந்தவர் யாரென்று கணக்கு போட்டு பார்த்ததில் பண்ருட்டி ராமச்சந்திரன் தான் ஏற்றவர் என்ற முடிவுக்கு வந்து இந்திராகாந்தி அம்மையாரே அவரை ஐநா மன்றத்தில் உரையாற்ற அனுப்பி வைத்தார் அப்படிப்பட்ட மூளைக்காரர் தனக்கு கிடைத்த போது கூட அவரை பயன்படுத்த தெரியாமல் வெளியே அனுப்பி விட்டு கவலை இல்லாமல் இருக்கும் கேப்டனை பார்த்தால் வைரகல்லை வைத்து கொண்டு பாத்திரத்திற்கு ஈயம் பூசியவனை தான் நினைக்க முடிகிறது.
டெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி பெற்று விட்டதனால் இந்தியா முழுவதும் அதன் அலை இருக்குமென்று எதிபார்ப்பது எந்த அளவிற்கு தவறானதோ அந்த அளவிற்கு விஜயகாந்தை நம்புவதும் தவறாகும் அவர் காங்கிரசோடு போகட்டும் என்று விட்டு விட்டு பாமக, மதிமுக போன்றவரோடு அணி சேர்ந்து தேர்தலை சந்தித்தால் நிச்சயம் நல்ல பலன் மோடியின் விசுவாசிகளுக்கு கிடைக்கும்.
ஒவ்வொருவரும் தானே தலைவர் என்று நினைக்கும் வரை எல்லாமே கதம்ப சாம்பாரே ஆகும் கதம்ப சாம்பாரை உண்ணுவதும் கஷ்டம் உருவாக்குவதும் கஷ்டம் நல்ல சாம்பாரை கொடுக்க நினைப்பவனே இப்போது நல்ல சமையல் காரன் அவனே முதல் விருந்தாளியாகவும் அழைக்க படுவான் நம் தமிழ் நாட்டிலும் பாரதத்திலும் அப்படிப்பட்ட நல்ல சமையல் காரன் யார்? ஆயிரம் சமையல் காரர்கள் வரிசையாக நமக்கு உணவு பரிமாறினால் யார் சமைத்ததை தனித்து சுவை பார்த்து தக்கவனை தேர்ந்தெடுப்பது அதுவரை கதம்ப சாம்பார் தான் விதி!