பத்துபேர் மத்தியில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே? இந்த பத்துபேர் என்பது குறிப்பாக சிலரை மட்டும் கருதுவதா? அல்லது பொதுவாகவே நமது சொந்த பந்தங்கள் உட்பட அனைவரையுமே கருதுவதா? யார் அந்த பத்துபேர்?
இப்படிக்கு,
மணிவாசகம்,
கன்னியாகுமரி.
நமது தமிழ் மொழியில் வழக்கத்தில் உள்ள பல சொற்கள் அர்த்தமில்லாமல் உபயோகபடுத்தப்படுவது கிடையாது. ஒவ்வொன்றிற்குள்ளும் மிக ஆழமான வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்கள் பொதிந்து கிடக்கும் அவற்றை தேடி கண்டுபிடித்து அர்த்தங்களை ஆய்வு செய்து பார்த்தோமேயானால், மிகப்பெரிய வியப்பு ஏற்படுவதோடு நமது முன்னோர்களின் மேலே மரியாதை கலந்த மலைப்பும் ஏற்படும்.
இந்த பத்துபேர் சங்கதி இருக்கட்டும். நாலுபேர் மதிக்கிற மாதிரி நட, என்றும் கூறுவார்கள். யார் அந்த நாலுபேர்கள் நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிவிட்ட பெற்றோர்களா? இல்லை. அவர்கள் இரண்டுபேர் நமக்கு அறிவை தரும் ஆசிரியர்களா? பள்ளிகூடத்து ஆசான்கள் துவங்கி வாழ்க்கை நிகழ்வுகளில் நாம் அன்றாடம் சந்திக்கும் ஆசிரியர்கள் நிறையப்பேர் உண்டு எனவே அவர்களும் இந்த நாலுபேரில் இல்லை.
எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து அக்னி சாட்சியாக நமது கரம்பிடித்து வருகிற மனைவியா? அவள் மூலமாக நாம் பெறுகிற குழந்தைகளா? இவர்களும் அந்த எண்ணிக்கையில் வரமாட்டார்கள். சைவ சமயத்தை வளர்ப்பதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட அடியார்கள் நால்வர் உண்டே அவர்களாக கூட இருக்கலாமோ? என்றும் சிந்திக்க முடியாது. காரணம் அவர்கள் சமயம் என்ற ஒரு வட்டத்திற்குள் அடங்கி விடுகிறார்கள் இங்கு குறிப்பிடும் நால்வர் அவர்களாகவும் இருக்க முடியாது. பிறகு யார் அந்த நால்வர் இந்த கேள்விக்கு மிக அழகான பதிலை கவியரசு கண்ணதாசன் தனது கவிதை ஒன்றில் தந்திருக்கிறார்
இருபதிலையோ இருமி இளைத்து
அறுபதிலேயே ஆடி முடித்து
சூடு தணிந்து சுதியும் முடிந்து
கேடுரு கேண்மை நாடு துறந்து
சொல்ல நினைத்தும் சொல்லா தொழிந்து
வெல்ல விழைந்ததும் வெல்லா தழித்து
மெய்யே பொய்யாய் பொய்யே மெய்யாய்
கையொரு கட்டும் காலோர் கட்டும்
போட இறந்தவன் நாடக உடலை
தன்தோள் கொடுத்து தாங்கி எடுத்து
இடுகாட் டல்வரை ஏந்தி நடந்து
கடைக்கரு மஞ்செய கடைக்கா லூன்றும்
நால்வர் நால்வர் நன்றிக் குரியவர்
என்று அழகாக சொல்கிறார். இறந்த பிறகு நம்மை தூக்கி செல்லுகின்ற நாலு மனிதர்கள் நம்மை ஒரு பாரமாக சுமையாக தூக்க கூடாது. ஐயோ ஒரு நல்ல மனிதனை பறிகொடுத்து விட்டோமே என்ற பரிதவிப்பில் இதய பாரத்தோடு சுமக்க வேண்டும் என்பதற்காகவே நால்வர் மதிக்க நட என்றார்கள். எப்படி இந்த நாலுபேர்கள் நமது அந்தரங்க வாழ்க்கைக்கு சாட்சியாக இருக்கிறார்களோ அதே போலவே நாம் வாழுகிற போது பத்து பேர் ஒதுக்க படவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
தான் என்ற அகந்தை மிகுந்தவன், எதிலும் அஜாக்கிரதையாக செயல்படுகிறவன், நிலைமை தெரியாத பைத்தியக்காரன், உழைக்காமல் சோம்பேறித்தனமாக எப்போது பார்த்தாலும் களைப்போடு காணப்படுபவன், அகோர பசியுடையவன், அவசரக்காரன், கஞ்சன், எதற்கும் பயந்து கொண்டே இருப்பவன் மற்றும் உணர்ச்சிகளை அடக்க முடியாத காமூகன் ஆகிய பத்து நபர்களிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் அல்லது ஒதுக்க வேண்டும் இது தான் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்பது நமது முன்னோர்களின் அனுபவ உண்மை.