ஆடைகள் இல்லாமல், அம்மணமாக அலைவதை விட அறிவில்லாமல் வாழ்வது மிகவும் கேவலமாகும். இறைவனது படைப்பில் மற்ற உயிர்களை போல, மனிதனும் ஒரு மிருகமாகத்தான் படைக்கபட்டிருக்கிறான். ஆனாலும் அவனுக்கும் மிருகத்திற்கும் ஒரு சிறிய இடைவெளி இருக்கிறது என்றால், அது அறிவால் ஏற்பட்ட வளர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் நமது முன்னோர்கள் உயிர் இயங்குவதற்கு எப்படி சுவாசம் அவசியமோ, அப்படியே அறிவும் அவசியமென்று என்று சொன்னார்கள்.
அறிவை வளர்த்து கொள்ள நாம் பலவகையிலும் பாடுபட்டு உழைக்கிறோம். தெளிவாக சொல்வது என்றால் ஒவ்வொரு நாளும் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் நமது அறிவை பட்டை தீட்டி கொண்டே செல்கிறது. காலம் வளர்வதை போல அறிவும் வளர்கிறது. மனித சமுதாயமும் வளர்கிறது. நாம் பல வகையாலும் அறிவை பெறுகிறோம். படிப்பது, கேட்பது உணர்வது என்று பல வழிகள், அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கின்றன. இந்த வழிகளில் மிகவும் சிறந்தது இறைவழிபாடு என்பது.
உடல் முழுவதும் எண்ணெய் பூசிக்கொண்டு, மண்தரையில் உருண்டாலும், ஓட்டுவது தான் ஓட்டும் என்பார்கள். எனவே ஆயிரம் கற்றாலும், பெற்றாலும் இறைவனால் தரப்படுகிற அறிவு தான் நிரந்தரமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். இதனால் அறிவை பெறுவதற்கு நாம் பலவகையில் முயற்சித்தாலும் அதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதை தவிர்க்க கூடாது.
அறிவு வளர்ச்சிக்கான பிரார்த்தனையை கடவுளிடம் வைப்பதற்கு மிகவும் ஏற்ற நேரம் வைகாசி மாத பெளர்ணமி தினமாகும். காரணம் வைகாசி பெளர்ணமி விசாக நட்சத்திரத்தில் வருகிறது. விசாக நட்சத்திரம் இறைவனாகிய முருகனின் அவதார நட்சத்திரமாகும். அதனால் தான் முருகனுக்கு விசாகன் என்ற திருப்பெயரும் உண்டு. முருகப்பெருமான் அறிவுக்கடல் ஞானமலை உயிர்கள் பெற்று இருக்கும் அறிவு அனைத்தும் முருகனிடமிருந்தே வருகிறது.
வைகாசி பெளர்ணமி அன்று முருகனை வழிபட்டால், ஞானத்தை வாரி வழங்குவான் என்பது ஐதீகம் இந்துக்களுக்கு மட்டும் வைகாசி பெளர்ணமி சிறந்தது அல்ல. புத்த மதத்தினருக்கும், அந்த நாள் மிக புனிதமான திருநாளாகும். அன்று தான் புத்தபெருமான் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார். எனவே வைகாசி பெளர்ணமி புத்த பூர்ணிமா என்றும் கொண்டாடப்படுகிறது. புத்தர் பிறந்தது ஞானம் பெற்றது பரிநிர்வாணம் என்ற முக்தி அடைந்தது எல்லாமே வைகாசி பெளர்ணமியே ஆகும்.
இந்த தினத்தில் சிவமைந்தனான முருகனை, வணங்கி புனித நீர்நிலைகளில் நீராடி தயிர் சாதம், பானகம், நீர் மோர் முதலியவற்றை தானம் கொடுக்க வேண்டும். படிக்க விருப்பமிருந்தும், வசதி இல்லாத குழந்தைகளுக்கு படிப்பிற்கு பணம் கட்டலாம் குறைந்தபட்சம் நோட்டு புத்தகமாவது வாங்கி கொடுக்கலாம். இப்படி செய்தால் வைகாசி பெளர்ணமி அறிவை வாரி வணங்கும் முழு நிலா பொழுதாக திகழும்.