குருஜி அவர்களுக்கு வணக்கம். எங்கள் குடும்பத்திற்கு “பித்ரு தோஷம்” இருப்பதாக கூறுகிறார்கள். “பித்ரு தோஷம்” என்பது எதனால் ஏற்படுகிறது? அதை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுமாறு பணிவோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
நீலமேகன்,
கனடா.
“சத்ரு” என்றால் விரோதி. “மித்ரு” என்றால் நண்பன். “பித்ரு” என்றால் நமது முன்னோர்கள் என்று எல்லோருக்கு தெரியும். ஆனால் பித்ரு என்ற வார்த்தை முன்னோர்களை பொதுவாக குறிப்பிடுவது அல்ல. தந்தை வழி முன்னோர்களை மட்டுமே இந்த வார்த்தையால் அழைக்கலாம். தாயார் வழியில் உள்ளவர்களை மாத்ரு வர்க்கம் என்று அழைப்பார்கள். நமக்கு தந்தை வழி சமூகம் பலகாலமாக அமைந்திருக்கிறது என்பதனால், தகப்பனாரின் சொந்த பந்தங்களுக்கு மட்டுமே கர்மா செய்கின்ற முழு உரிமை இருக்கிறது. தாயார் வழியில் உள்ளவர்களுக்கும் செய்யலாம் அப்படி செய்ய அங்கே யாரும் இல்லாத போது தந்தை வழியோ, தாய் வழியோ எந்த முன்னோருக்கும் கர்மாக்கள் தொடர்ந்து செய்யப்படவில்லை என்றால் பித்ரு தோஷம் என்பது ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதனால் மட்டும் அந்த தோஷம் ஏற்படுவது இல்லை. முன்னோர்களை உயிரோடு இருக்கின்ற போது சரிவர கவனிக்காமல் விட்டு விட்டு அவர்கள் மரணத்திற்கு பிறகு சாஸ்திரப்படி காரியங்கள் செய்தால் கூட பித்ரு தோஷம் கண்டிப்பாக உண்டு. அதனால் மிக முக்கியமாக மூத்தவர்களை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உண்டு.
மேலே சொன்ன இரண்டு காரணங்கள் இல்லாமல் வேறு சில காரணங்களும் இருக்கிறது. முறைப்படியான சடங்குகளை செய்து தர்ப்பணத்தை நடத்தாமல் கடமைக்காக என்று செய்தாலும் தர்ப்பணத்திற்கு பக்கத்துணையாக இருக்கின்ற “புரோகிதன்” சரியான முறையில் மந்திரங்களை சொல்லவில்லை என்றாலும், அந்த தோஷம் ஏற்படுகிறது. எனவே தர்ப்பணம் செய்வதில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறதோ அதைவிட பத்து மடங்கு கவனம் புரோகிதனை தேர்ந்தெடுப்பதில் இருக்க வேண்டும். தவறான மந்திர உச்சரிப்பு நமது முன்னோர்களை அவர்கள் உலகத்திலிருந்து கீழ் நிலைக்கு தள்ளிவிடுவதோடு மட்டுமல்லாது அவர்களது தன்மையையும் பைசாச நிலைக்கு கொண்டுவந்து விட்டு விடும்.
அதனால் “கர்மா” செய்ய அழைக்கப்படும் புரோகிதன் நன்றாக மந்திரம் தெரிந்தவனாக இருக்க வேண்டும். திருமண மந்திரங்களை கூட தவறான முறையில் சொன்னால் அந்த நிகழ்வில் பெரியவர்களின் ஆசிர்வாதம் இருப்பதனால் எதுவும் ஆகாது. ஆனால் கர்மா செய்யும் வீடு அப்படி அல்ல, சவுண்டி சாஸ்திரிக்கு மந்திர ஞானம் என்பது கண்டிப்பாக அவசியம். மந்திரங்களை வடமொழியில் சொல்கிறோம் யாருக்கு புரிய போகிறது வாய்க்கு வந்ததை சொல்லலாமே என்று பல சாஸ்திரிகள் கிரிகைகளின் போது சூக்தங்களை பாதி பாதியாக சொல்வதை கேட்டிருக்கிறேன். அப்படி இல்லாமல் பொறுப்புணர்ச்சியோடு சாஸ்திரிகள் நடந்து கொண்டால் யாருக்கும் பாதகமில்லை.
தொடர்ச்சியாக இந்த தோஷத்தால் அவதிப்படுபவர்கள், லஷ்மி நரசிம்மரையோ, அதர்வண பத்திரகாளி என்ற பிரத்தியங்கரா தேவியையோ தொடர்ந்து வழிபட்டு வந்தால் ஆவேசத்தோடு இருக்கும் முன்னோர்களின் ஆத்மா மனம் குளிர்ந்து நமக்கு அனுகிரஹங்களை தருவார்கள். அவர்களின் வடிவங்களாக நம் முன்னே நடமாடுகிற வயோதிகர்களையும், நோயாளிகளையும் கருணையோடு பராமரித்தாலும் பித்ரு தோஷத்திலிருந்து தப்பிக்கலாம். .