குருஜி அவர்களுக்கு வணக்கம். நானும் என் மனைவியும், காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஜாதக பொருத்தம் எல்லாம் அப்போது பார்க்க முடியவில்லை. இன்று எங்கள் ஜாதகத்தை பார்ப்பவர்கள் பொருத்தம் அவ்வளவாக இல்லாமல் இருக்கிறது, எதாவது பரிகாரம் செய்து கொள்ளுங்கள் என்கிறார்கள். எங்கள் வாழ்க்கையில் எங்களுக்குள் இதுவரை பெரிய சிக்கல்கள் எதுவும் உருவாகவில்லை. எங்களை பொறுத்தவரை நன்றாகவே இருக்கிறோம். ஆனாலும் ஜோதிடர்கள் இப்படி கூறுவது பயமாக இருக்கிறது. வருங்கலத்தில் எதாவது நடக்க கூடாதது நடந்து விடுமோ என்று என் மனைவி அச்சப்படுகிறாள். எனவே தாங்கள் தயவு செய்து எங்களுக்கான பரிகாரங்களை என்னவென்று சொல்லி வழிகாட்ட வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
ராக்கேஷ் குமார்,
புள்ளம்பாடி.
இன்று கணவன் - மனைவியாக வாழுகின்ற எத்தனை பேர் கருத்தொருமித்த தம்பதிகளாக வாழுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள். நூற்றுக்கு தொன்னூறு பேர் வைத்ததை வைத்து வாழ்வோம் என்று இருக்கிறார்களே தவிர நினைத்தது கிடைத்தது என்ற திருப்தியில் பலரும் இல்லை. இது புதியதாக இன்று நேற்று தோன்றிய பிரச்சனைகள் அல்ல. காலம் காலமாக தாம்பத்யம் என்பது இந்த மாதிரி தான் அமைந்திருக்கிறது. புண்ணுக்கு புணுகு பூசுவது போல அழகான வார்த்தைகளில் தாம்பத்திய இடர்பாடுகளை மறைத்து கொண்டு வாழ்கிறார்கள் விஷயம் அவ்வளவு தான். அதனால் என் வாழ்க்கை அப்படி அமையவில்லை, இப்படி அமையவில்லை என்று அங்கலாய்ப்பது வீண் வேலை. அதுவும் நாளைக்கு வருமோ? வராதோ என்ற உறுதி இல்லாத கஷ்டத்தை இன்று நினைத்தே அது வந்துவிடுமோ என்று பயப்பட்டு வாழ்வது கொடுமையிலும் கொடுமை. ஜாதக பொருத்தங்கள் பார்த்து நடைபெறும் திருமணங்களில் துயரங்களே இல்லையா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் விதி என்ற நதியின் வழியில் நம் வாழ்க்கை உருண்டு, புரண்டு ஓடுகிறது. இதில் இன்பமும், துன்பமும் சரிபாதியாகவோ, சமம் இல்லாததாகவோ கிடைத்து கொண்டே இருக்கிறது. இது வேண்டாம் என்று நம்மால் ஓடி ஒளிந்து கொள்ள முடியாது வருவதை அனுபவித்தே ஆகவேண்டும்.
எதிர்காலத்தை நினைத்து தேவையில்லாமல் பயப்படுவது முட்டாள்தனம். அதனால் தான் நான் அடிக்கடி சொல்வது வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும். முடிந்தவரையில் எதிர்த்து போராடுவோம். முடியாவிட்டால், தலை தாழ்த்தி ஏற்றுக் கொள்வோம் என்று நினைப்பதே சந்தோசமாக வாழ்வதற்கு உள்ள ஒரே வழியாகும். உடம்பை வேண்டாம் என்று உதறி தள்ளினால் தான் உலகம் தருகின்ற பலன்களிலிருந்து தப்ப முடியும். உடம்பை உதறினால் உயிரும் போய்விடும் எனவே ஆகவேண்டியதை நினைத்து சந்தோசப்படுவதே மேல் என்பது என் கருத்து.
பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொள்ள வில்லையா? அதற்காக வீணாக கவலைப்படவேண்டிய அவசியமில்லை. வருடத்தில் ஒருமுறை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். கண்டிப்பாக இருக்கும் தோஷங்கள் எதுவாக இருந்தாலும் வெளியேறி விடும். நான் வெகு தொலைவில் இருக்கிறேன், வெளிநாட்டில் இருக்கிறேன் என்னால் வருடம் தோறும் வரமுடியாதே அதற்கு என்ன செய்வது என்று கவலைப்படுகிறீர்களா? அதற்கும் வழி இருக்கிறது. திருப்பரங்குன்ற மலையை நம்மால் தூக்கி போக முடியாதே தவிர முருகப்பெருமானின் வாகனமான மயிலுடைய இறகை கண்டிப்பாக வீட்டிற்கு எடுத்து செல்லமுடியும். உங்களுக்கு கிடைக்கும் எதாவது ஒரு மயிலிறகை முருகனின் புனிதப் பொருளாக நினைத்து பூஜை அறையில் வையுங்கள். அதில் ஒரே ஒரு இறகை மட்டும் உள்ளங்கைகளில் வைத்து கொண்டு என் திருமண வாழ்க்கையை நல்லபடியாக வை முருகா என்று பிரார்த்தனை செய்யுங்கள். மயில் வாகனனான முருகன் உங்களை கண்டிப்பாக காப்பாற்றுவான்.