Store
  Store
  Store
  Store
  Store
  Store

காதலை நிறைவேற்றும் ஆனி பெளர்ணமி


    சித்திரா பெளர்ணமி சிறப்பானது. வைசாக பெளர்ணமி புனிதமானது. ஆனிமாத பெளர்ணமியை பற்றி அதன் சிறப்புகளை பற்றி அதிகமாக பொதுமக்கள் பேசுவதில்லையே! அதனால் அதில் சிறப்புகள் இருக்காதோ? என்று பலரும் நினைக்கிறார்கள். பொதுவாகவே ஹிந்து சமய சாஸ்திரங்களின் படி, திதிகளின் சந்தி பொழுதான பெளர்ணமியும், அமாவாசையும் பல சிறப்புகள் கொண்டதாகும். ஜோதிட சாஸ்திரமும், மாந்திரீக சாஸ்திரமும் இந்த பொழுதுகளை மிக அதிகமாக சிலாகித்து பேசுவதோடு அல்லாமல் அன்றைய நாளில் மனிதன் பெறக்கூடிய புண்ணிய பேறுகளை பட்டியலிட்டு காட்டுகின்றன. 

அமாவாசை, பெளர்ணமி என்பது மாதா  மாதம் வந்து போகும் சாதாரண நிகழ்வுகள் தானே? எல்லா நாட்களை போலவும், இந்த நாளும் ஒரு நாள் தானே! அதில் இதை மட்டும் சிறப்பித்து கூறுவானேன் என்று யோசனை வருவது தவறு அல்ல. இந்த பூமிப் பந்தானது தனக்கு சொந்தமான ஈர்ப்பை மட்டும் வைத்து கொண்டிருக்க வில்லை. அண்ட வெளியில் உலா வருகின்ற மற்ற கிரகங்களின் ஈர்ப்பையும் தனக்குள் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும், பூமியை மிக நெருங்கி வருகின்ற அல்லது பூமிக்கு நேருக்கு நேராக வருகின்ற கிரஹங்களின் ஈர்ப்பு சற்று அதிகமாக இருக்கும். பெளர்ணமி, அமாவாசை தினங்களில் சந்திரனுடைய ஈர்ப்பு பூமியில் மிக அதிகமாக காணப்படுகிறது. 

ஜோதிட விதிகளின் படி சந்திரன் என்பவன் மனோகாரகன். அதாவது மனிதர்களின் எண்ணங்களை உருவாக்குபவன். எண்ணம் நல்லதாக இருந்தால் தான், அல்லது உறுதியாக இருந்தால் தான் மனிதனால் திறம்பட செயல்பட முடியும். உடம்பு ஆயிரம் திடகாத்திரமாக இருந்தாலும், புத்தி கெட்டு போய்விட்டால் அனைத்து சிறப்புகளும் ஓடி விடும். மனிதன், மனிதனாக நடமாட வேண்டுமானால் அவனுக்கு தெளிந்த புத்தி இருக்க வேண்டும். எப்போதுமே தெளிவாக இருக்கும் மனது கூட அமாவாசை, பெளர்ணமி தினங்களில் கடல் போல கொந்தளிக்கும் மிக நுணுக்கமாக நம்மை நாமே ஆராய்ந்தால் இந்த உண்மை தெரியவரும். 

மேலும் மனித எண்ணங்களை, சந்திர அலைகள் எப்படிவந்து மிக சுலபமாக அன்றைய தினங்களில் தாக்குகிறதோ அதே போலவே மனிதனது எண்ணங்களை மிக அதிகமான தூரங்கள் எடுத்து செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் தான் மற்றைய தினங்களில் நடத்தபடுகிற பூஜைகள் பிரார்த்தனைகளை விட இத்தகைய தினங்களில் செய்யபடுகின்றவைகள் சக்தி வாய்ந்தவைகளாக உடனடியாக நிறைவேறக்கூடியதாக இருக்கிறது. இதனால் தான் இந்த தினங்களை புனித தினங்களாக நமது முன்னோர்கள் கொண்டாடினார்கள். 

அந்த வகையில் ஆனிமாத பெளர்ணமி, மற்ற மாத பெளர்ணமிகளை போலவே சிறப்பு வாய்ந்தது என்பதை மறக்க கூடாது. தென்னிந்தியாவில் பரவலாக இல்லா விட்டாலும் வடஇந்தியாவில் "கோபத்ம விரதம்" என்ற ஒன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதம் உறுதியான நீடித்த சுமங்கலித்தன்மை வேண்டி மகாவிஷ்ணுவை நோக்கி பெண்களால் செய்யப்படும் விரதமாகும். ஒருவேளை மட்டும் உணவருந்தி மற்ற நேரங்களில் துளசி தீர்த்தத்தை மட்டுமே அருந்தி பகவான் விஷ்ணுவை பிரார்த்தனை செய்தால் கணவனின் ஆயுள் காலம் சிக்கலின்றி அமையும் என்பதோடு குளறுபடியான இல்லறம் நல்லறமாக மாறும் என்பதையும் அவர்கள் நம்புகிறார்கள்.

ஆனிமாத பெளர்ணமியில் வேறு சிறப்புகளும் உண்டு. தனது முன்னோர்களுக்கு ஏற்பட்ட சாபத்தை விலக்குவதற்காக சிவபெருமானின் திருமுடியிலிருந்து பல்வேறுபட்ட இடைஞ்சல்களை தாங்கி கங்கா தேவியை பகீரதன் பூமிக்கு அழைத்து வந்த நாள் இந்த நாள். எனவே இந்த நாளில் வைக்கப்படும் பிரார்த்தனைகள், துவங்கப்படும் காரியங்கள் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது சிறந்த நம்பிக்கை. மேலும் ஒரு சிறப்பு இந்த நாளுக்கு உண்டு. ஆயுள்காலம் முடிந்ததென்று மரணதேவனால் அழைத்து செல்லப்பட்ட சத்தியவான் என்ற தன் கணவனை எமதர்மனிடம் வாதிட்டு சாவித்திரி வெற்றி பெற்றாளே அதுவும் இதே பெளர்ணமி தினம் தான். நடராஜருக்கு திருமஞ்சனமும் இன்று தான் செய்யபடுகிறது. இன்னொரு விஷயத்தை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும். ஆனிமாத பெளர்ணமியில் கண்ணபெருமானை நினைத்து விரதமிருந்தால் காதல் கைகூடி வருமாம்.

எனவே ஆனிமாத பெளர்ணமி பிரார்த்தனையை நிறைவேற்றும் தினம், சுமங்கலித்தன்மையை அதிகரிக்கும் தினம், ஆயுள் பலத்தை அருளுகின்ற தினம். இந்த தினத்தில் முறைப்படி விரதமிருந்தால் தர்மப்படி கிடைக்க வேண்டியதை இறைவன் கிடைக்க செய்வான் என்பது ஐதீகம். இந்த ஐதீக வழியில் நாமும் செல்லலாம், நன்மை அடையலாம்.




Contact Form

Name

Email *

Message *