ஐயா எனக்கு தொழில் வகையிலும், தனிப்பட்ட வகையிலும் எதிரிகள் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்களால் எனது அன்றாட வாழ்க்கை கூட பாதிப்படைகிறது சமாதானமாக சென்றால் கூட சண்டையை அவர்கள் நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. வழக்கு, நீதிமன்றம் வக்கீல் என்று காலம் வீணாக கடந்து கொண்டே இருக்கிறது. எதிரிகளின் தொல்லையிலிருந்து மீள நான் என்ன செய்ய வேண்டும். எனக்கு வழிகாட்ட வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
வின்சென்ட் ஜெபராஜ்,
திருநெல்வேலி.
எதிரிகளை முற்றிலுமாக நீக்கி கொள்ள, “சத்ரு சம்ஹார ஹோமம்” செய்வது நல்லது என பலர் சொல்வார்கள். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. சத்ரு சம்ஹாரம் என்றால் எதிரிகளை முற்றிலுமாக அழித்தல் என்பது பொருளாகும். எதிரி நமக்கு காரணத்தோடோ, காரணம் இல்லாமலோ தொல்லை தருகிறார் அதனால் நாம் வருத்தப்படுகிறோம், வேதனைப்படுகிறோம். அதற்காக அவனை இல்லாமல் செய்து விட்டால் நிம்மதி அடைந்து விடலாம் என்பது கற்பனை.
எப்போது ஒருவனை அழிக்க நினைக்கிறோமோ, அப்போது துயரம் என்பது வேறு வழியில் வரப்போகிறது என்று உறுதியாக எடுத்து கொள்ளலாம். எதையும் இல்லாமல் செய்வதற்கு நமக்கு அதிகாரம் கிடையாது. அதை செய்ய துணிந்தால் வீணான பாவம் நம்மையும் நமது குடும்பத்தாரையும் வந்து சேரும்.
ஆனாலும் எதிரிகளிடமிருந்து, நம்மை தற்காத்து கொள்வதற்கு நமக்கு பரிபூரண உரிமை உண்டு. அந்த செயல் நிச்சயம் பாவம் தராது. எனவே எதிரிகளின் தொல்லையை குறைக்கும் அல்லது அவர்களுக்கு மனதில் மாற்றம் ஏற்பட வழி செய்யும் சுதர்சன ஹோமத்தை மூன்று அமாவாசைகள் தொடர்ந்து செய்ய வேண்டும் செய்தால் கண்டிப்பான பலன் உண்டு.