சுவாமிஜி அவர்களுக்கு வணக்கம். உங்கள் பதிவுகளை இரண்டு மாதங்களாக படித்து வருகிறேன். பிரச்சினைகளுக்கு நீங்கள் கூறும் பரிகாரங்களும், வழிமுறைகளும் ஆறுதல் மொழிகளும் என் மனதை வெகுவாக கவர்ந்து விட்டது. உங்கள் வரிகளை படிக்கும் போது அனுபவம் வாய்ந்த பெரிய மனிதர் ஒருவர் வீட்டிலிருந்து புத்தி சொல்லி திருத்துவது போல எனக்கு தோன்றும். உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
ஐயா எனக்கொரு பெரிய மனக்குறை நீண்ட நாட்களாக இருக்கிறது. என் தங்கையின் மீது அளவு கடந்த பாசம் நான் வைத்திருக்கிறேன். அவளுக்கும் என் மீது பாசம் உண்டு. எங்கள் பிறந்த வீட்டில் நாங்கள் இருக்கும் போது அக்கா தங்கைகள் மாதிரி இல்லாமல் தோழிகள் போலவே இருப்போம். நல்லது, கெட்டது என்று ஒளிவு மறைவுகள் எதுவும் கிடையாது நான் திருமணமாகி புகுந்த வீடு வந்த பிறகும் தினசரி தொலைபேசியில் உரையாடுவோம், கடிதங்களையும் பரிமாறி கொள்வோம். எங்கள் பாச பிணைப்பை உணர்ந்த என் கணவர் கூட ஒருநாளும் என் தங்கையோடு பேசுவதை தடுத்ததில்லை.
ஆனால் என் தங்கையின் கதை வேறு விதமாக இருக்கிறது அவளுக்கு திருமணம் முடிந்து, கணவன் வீடு சென்ற ஒரு வருடத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவள் நாத்தனார் புகுந்த வீட்டில் சிக்கல் என்று இவர்களிடம் வந்து உட்கார்ந்தாள் அன்று முதல் என் தங்கையின் வாழ்வில் புயல் வீச துவங்கி விட்டது. எங்கள் உறவுகளுக்குள்ளும் சூறாவளி அடிக்க ஆரம்பித்து விட்டது. உன் அக்கா தங்கையோடு அம்மா அப்பாவோடு எந்த உறவும் வைத்து கொள்ள கூடாது மீறி வைத்தால் வெளியே போய்விடு என்று அவளது கணவன் கொடுமையான கட்டளை போடுகிறான்.
போடா நீயுமாச்சு, உன் உறவுமாச்சு என்று தூக்கி போட்டு விட்டு வந்துவிட அவளால் முடியும். வாழ்வின் யதார்த்தம் அதற்கு வழி விடவில்லை அவளுக்கு வேண்டுமானால் கணவன் தேவை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவள் குழந்தைகளுக்கு தகப்பன் கண்டிப்பாக தேவை அல்லவா? எனவே மனதை கல்லாக்கி கொண்டு அசோகவனத்து சீதை போல வாழுகிறாள். அவள் துடிப்பது எனக்கு புரிகிறது. என் வேதனை அவளுக்கு தெரிகிறது ஆனாலும் என்ன செய்ய? சூழல் என்பது எங்களை கட்டுப்படுத்தும் சிங்கமாக மிரட்டுகிறதே
எனவே ஐயா அவர்கள், என் தங்கையின் வாழ்விலும், எங்கள் உறவிலும் புதிய வசந்தம் வருவதற்கு வழி கூறுமாறு பணிவோடு வேண்டுகிறேன். இதை நீங்கள் செய்தால் பிரிந்து கிடக்கும் இரண்டு ரத்த சொந்தங்களை சேர்த்த புண்ணியம் உங்களை சாரும் கண்டிப்பாக வழிகாட்டுங்கள் ஆவலோடு காத்திருக்கிறேன்.
இப்படிக்கு,
விஜயா புருஷோத்தமன்,
குற்றாலம்
உங்கள் நீண்ட கடிதமே நெஞ்சை நெகிழ செய்யும் வண்ணம் அமைந்திருக்கிறது. எனவே இதற்கு மேல் ஆறுதல் சொல்லி உங்களை அழ வைக்க நான் விரும்பவில்லை. துவக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருக்கும். எனவே உங்கள் சிக்கலுக்கு மிக விரைவில் நல்ல தீர்வை இறைவன் தருவார், அவரை நம்புங்கள். நம்பினார் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு.
பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் சகோதர, சகோதரிகளின் மத்தியில் ஒற்றுமை ஏற்படவும் சிவபெருமானை வழிபடுவது சிறப்பு என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். எனவே நீங்கள் திங்கள் கிழமை தோறும் சிவாலயம் சென்று இறைவனை வணங்கி, அங்குள்ள வில்வ மரத்திற்கு தண்ணீர் விட்டு வணங்கி வாருங்கள். ஒன்றிரண்டு வில்வ இலைகளை வீட்டிற்கு எடுத்து வந்து கைகளில் வைத்துக்கொண்டு சிவபெருமானை நோக்கி உங்கள் குறைகளை சொல்லி முறையிடுங்கள் பிரார்த்தனை என்ற குண்டு எந்த கற்கோட்டையையும் தகர்த்து விடும். இறைவனின் மனம் கல் அல்ல, கனி. நிச்சயம் அருள்வான், துயர் தீர்ப்பான்.