சில ராசிகளில் பிறந்தவர்கள், அமைதியானவர்களாகவும் வேறு சில ராசிகளில் பிறந்தவர்கள் கோபக்காரர்களாகவும் இருப்பார்கள் என்று கூறப்படுவது எத்தனை சதவிகிதம் உண்மை?
இப்படிக்கு,
ஆண்டாள் பிரியதர்ஷினி,
ஏற்காடு.
புளி வைத்த பானையில் பாலை ஊற்றினால் அது திரிந்து போகும். இது பாலின் குற்றமல்ல, பானையின் குற்றமாகும். எந்த பொருளுமே அது வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப மாறிவிடுவது இயற்கையின் விதி.
இதே போல மனித உடம்பிற்கு என்று பொதுவான விதிகள் சில உண்டு. உயிர் என்பது சாத்வீகமானது என்றாலும், அது தான் வாழுகிற உடம்பை பொறுத்து தாமசமாகவோ, அதாவது மந்தமாகவோ, ராஜசமாகவோ அதாவது துரித கதியிலேயோ மாறக்கூடியது சரீர தோஷமே உயிர்களின் கோபதாபங்களாக மாறுகிறது.
அதனால் மனிதனாக பிறந்தவன் ஒவ்வொருவனுக்கும், தனித்தனி சுபாவங்கள் இருந்தாலும் உணர்ச்சிகள் என்பது பொதுவானதாகவே இருக்கிறது. நபர்களின் வாழ்க்கை சூழலை பொறுத்து அதன் வெளிப்பாடுகள் நல்லதாகவோ, கெட்டதாகவோ அமையும். அதன் அடிப்படையில் சில ராசிகளுக்கான குணாம்சங்களை இந்திய ஜோதிடவியல் பகுத்து கூறுகிறது.
மீனம், தனுசு, துலாம், கன்னி, கடகம், மிதுனம் மற்றும் ரிஷபம் இந்த ராசிகளில் பிறந்தவர்கள் நிதானமான போக்குடையவர்களாகவும், கோபம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதே போல மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள், கோபக்காரர்கள் என்றும் கூறப்படுகிறது.
இது ஜோதிட சாஸ்திரத்தின் பொது விதியே தவிர மிக கட்டாயமான விதி அல்ல. ஏனென்றால் அமைதியான ராசிகளில் பிறந்த நபர்கள் கூட கொலை செய்கிற அளவிற்கு கோபவசம் கொண்டிருக்கிறார்கள். காரணம் ஒருவன் நல்லவனா? கெட்டவனா? என்று தீர்மானிப்பது ராசிகள் அல்ல. கிரகங்களின் அமைப்பே ஆகும்.