எனக்கும், எனது மனைவிக்கும் ஆறுமாதங்களுக்கு முன்பு விவாகரத்து நடந்து விட்டது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாமா? எப்போது செய்து கொள்ளலாம்?
இப்படிக்கு,
சரவணபெருமாள்,
இராதாபுரம்.
இப்போதெல்லாம் அவசரமாக திருமணம் முடிவதும், அதைவிட அவசரமாக விவாகரத்து ஆவதும் சர்வ சாதாரணமாகி விட்டது. பார்த்தால், பிடித்தால் அப்பா அம்மா சம்மதிக்கிறார்களோ, இல்லையோ திருமணம் செய்து கொள்ளுங்கள். நாளைக்கே பிடிக்காவிட்டால் இருவரும் சட்டப்படி பிரிந்து விடலாம் என்று அறிவுரை கூறுகிற அதி மேதாவிகளும் அதிகரித்து விட்டார்கள். இதை காலத்தின் கோலம் என்பதா? அல்லது கலி முத்திவிட்டது என்பதா?
இந்த கேள்வியை கேட்ட மனிதரின் ஜாதகத்தில், புதனுக்கு ஒன்பதாவது வீட்டில் கேது இருக்கிறான். எனவே இவர் நிச்சயம் காதலித்து தான் திருமணம் செய்திருக்க வேண்டும். ஆனால் காதலை வெகு சீக்கிரத்தில் மறந்து அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டார். பழைய காதலின் சிறிய வடு கூட இவர் பேச்சில் தெரியவில்லை. மென்மையான உணர்வு என்று சொல்ல கூடிய காதல் கூட இன்று உணர்ச்சி அற்ற பட்ட மரம்போல ஆகி விட்டதை உணருகிறேன்.
விவாகரத்திற்காக மல்லுகட்டுகிற ஆண் பெண் இருவருக்குமே நான் நீங்கள் கணவன் மனைவி என்ற நிலையிலிருந்து சிந்திக்காதீர்கள். ஒரு குழந்தைக்கு தாய், தகப்பன் என்ற வகையில் சிந்தியுங்கள். ஆயிரம் கஷ்டங்களையும் சகித்து கொள்ளுகிற மனப்பக்குவம் வந்துவிடுமென்று கூறுவேன். அதை யாரும் காதில் வாங்கி கொண்ட நிலையாக தெரியவில்லை.
இந்த ஜாதகத்தில், குருவிற்கு ஐந்தில் சுக்கிரனும், ஒன்பதில் சந்திரனும் இருக்கிறார்கள். எனவே இரண்டாவது திருமணம் கண்டிப்பாக நடக்கும் இந்த திருமண வாழ்விலாவது விட்டு கொடுத்து போக கற்றுகொள்ளுங்கள். கடவுள் துணை செய்வான்.