அன்புள்ள குருஜி அவர்களுக்கு, வணக்கம். நான் மிக தீவிரமான சிவ பக்தை சைவ சமயம் ஒன்றே சிறந்தது என்பது என் கருத்து. அதனடிப்படையில் திருமணம் ஆகாத என் மகளுக்கு திருமணம் நடப்பதற்கு சைவ திருமுறையினாலான பரிகாரங்கள் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் செய்கிறேன்.
இப்படிக்கு,
மீனாட்சி சிவநாதன்,
கோலாலம்பூர்.
சைவ சமயம் சிறந்தது என்பதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது. ஆனால் அது ஒன்றே தான் சிறந்தது என்பதை ஏற்று கொள்வது மிகவும் தவறு. ஒரு ஊருக்கு பயணமாக செல்வதற்கு பாதைகள் இருப்பது போல, இறைவனை அடைவதற்கு பல மதங்கள் இருக்கிறது. அதில் இது உயர்ந்தது, அது தாழ்ந்தது என்று வாதம் புரிகிற எவனும் தான் பிறந்த லட்சியத்தை மனித வாழ்க்கையின் இறுதி நோக்கத்தை அடையவே முடியாமல் புறப்பட்ட இடத்திலேயே பயணத்தை நடத்தி கொண்டிருப்பவனாக கருதப்படுகிறான்.
சைவ, வைஷ்ணவ பேதங்கள் பாராட்டுவது மிகவும் மூடத்தனமானது. வைஷ்ணவம் ஒரு வகையில் சிறந்தது என்றால் சைவம் வேறு வகையில் சிறந்ததாகும். ஏனென்றால் கடவுளான ஸ்ரீ நாராயண மூர்த்தி ராமன் வடிவில் சிவ பூஜை செய்கிறார் கடவுளான சிவபெருமான் ஒரு விநாடி கூட ஓய்வெடுக்காமல் ராம நாமம் ஜெபித்து கொண்டிருக்கிறார். இப்படி கடவுளுக்கு மத்தியில் பேதங்கள் இல்லாத போது இல்லாத பேதத்தை மனிதன் ஏற்படுத்தி கொள்வது வளர்ச்சிக்கு அடையாளமானது அல்ல.
முத்தன் மிகு மூவிலை நல் வேலன் விரி நூலன்
அத்தன் எமையாளுடைய அண்ணலிடம் என்பர்
மைத்தழை பெரும் பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே
என்ற திருஞான சம்மந்தரின் திருப்பதிகத்தை மனம், மொழி மற்றும் மெய் சுத்தத்தோடு பாராயணம் செய்து வாருங்கள். நீங்கள் நினைத்தபடி திருமணம் நடக்கும்