ஒரு ஜாதகத்தை கணித்து அதனுடைய பலன்களை அறிந்து கொள்வதற்கு லக்கினத்தை மைமயமாக வைத்து ஆய்வு செய்வதா? சந்திரன் இருக்கின்ற ராசியை மையமாக வைத்து ஆய்வு செய்வதா? என்ற குழப்பங்கள் ஆரம்பகாலம் தொட்டே இருந்து வருகிறது. இதற்கு காரணம் ஜோதிட சாஸ்திரத்தில் உயிராகிய ஜென்ம லக்கினம், உடலாகிய சந்திரா லக்கினம் என்ற ஒரு வாசகம் வருகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு உடம்பும், உயிரும் மிகவும் அவசியம். உடம்பு இல்லை என்றால் உயிர் தங்க முடியாது. உயிர் இல்லை என்றால் உடல் இயங்க முடியாது இவை இரண்டும் ஒத்துழைத்து போனால் தான் சரியான பாதையில் மனித பயணம் நடக்கும். எனவே லக்கினத்தை மட்டுமோ, ராசியை மட்டுமோ கவனத்தில் வைத்து கணிக்க கூடாது. இரண்டையுமே கவனத்தில் கொண்டு ஆராய வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள்.
அப்படி இரண்டையும் சேர்த்து ஆராய வேண்டியது இல்லை. வாழ்நாள் முழுவதும் எப்படி இருக்கும். கற்றிடும் கல்வி, பெற்றிடும் பேறு இவைகள் நல்ல விதத்தில் இருக்குமா? அல்லாத விதத்தில் இருக்குமா? என்பதை அறிந்து கொள்வதற்கு அதாவது ஒருவனுடைய தலைவிதி இது தான் என்பதை உணர்ந்து கொள்வதற்கு லக்கினத்தை அடிப்படையாக வைத்து பார்த்தால் போதும். அன்றாடம் நடக்கின்ற அல்லது மாதத்திற்கு ஒருமுறையோ வருடத்திற்கு ஒருமுறையோ ஏற்படுகிற நிகழ்வுகளை அறிந்து கொள்ள வேண்டுமானால் சந்திரா லக்கினமென்று கூறப்படுகிற ராசியை ஆதாரமாக கொண்டு கணித்து பார்க்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்
இதில் எது சரி? எது தவறு? என்று ஜோதிடத்தை முழுமையாக அறியாதவர்களுக்கு தெரிவதில்லை. ஜாதகத்தை எடுத்து கொண்டுபோய் ஜோதிடர்களிடம் காட்டுகிற போது லக்கினத்தை ஆதாரமாக வைத்து கூறுகிற பலன்களை ஏற்று கொள்கிறார்கள். தினசரி, மாதாந்திர, வருடபலன், குரு பெயர்ச்சி மற்றும் சனி, ராகு - கேது பெயர்ச்சிகள் போன்றவற்றை தெரிந்து கொள்வதற்கு ராசியை மையமாக வைத்து சொல்லுகிற கருத்தை நம்புகிறார்கள். இது உலகம் முழுவதும் பொதுப்படையாக இருக்கும் நடைமுறையாகும். பல நுணுக்கமான ஜோதிடர்களும், இந்த முறைகளை தான் பின்பற்றுகிறார்கள் என்று கூறலாம். ஆனால் இந்த முறைகள் மட்டுமே சரியானதா? இவற்றை மட்டுமே வைத்து பார்ப்பதனால் ஒரு மனிதனின் வாழ்நாள் பலனை முழுமையாக உறுதியாக தெரிந்து கொள்ள முடியுமா? என்பதையும் காணவேண்டும்.
நான் ஜோதிடம் கற்றுக்கொண்ட குருநாதர்களில் மிகவும் முக்கியமானவர் கோதண்டபாணிபுரம் சிதம்பரம் பிள்ளையாவார். இவரிடம் ஜோதிடம் கற்றுக்கொள்ள செல்லும் போது எனக்கு இருபத்தி ஏழு வயது இருக்கலாம். அவரோ தொண்ணூறை கடந்தவர் ஜோதிடம் தவிர ஆகமம், சில்ப சாஸ்திரம் போன்றவைகளையும் திறம்பட கற்றவர். நல்ல அனுபவஸ்தர் ஆனால் இவரிடம் பெரிய கெட்ட பழக்கம் என்னவென்றால் பேச்சு கொடுத்தால் மனிதர் உரைநடையில் பேச மாட்டார் யாப்பு இலக்கணத்தோடு கவிதை நடையில் பேசுவார் அதுவும் பெருவாரியான பதில்கள் தேவாரம், திருவாசகம் போன்றவற்றில் வரும் பாடல் வரிகளாகவே இருக்கும். அருணகிரி நாதரின் திருப்புகழை இவர் சொல்ல கேட்டால் எதோ திருவண்ணாமலை கிளி கோபுரத்திலிருந்து அருணகிரி நாதரே இறங்கி வந்து விளக்கம் சொல்வது போல் இருக்கும். திருப்புகழின் சந்த அமைப்புகளை அவர் பாடுகிற போது தொண்ணூறு வயதிலும் இந்த போடு போடுகிறாரே இளமை வயதில் இவர் பாடினால் ஊரில் பலரின் காது செவிடாகவே போயிருக்கும் என்று தோன்றும்.
அவர் எனக்கு ஜோதிட பாடம் எடுத்த விதம் மிகவும் நூதனமானது. ஆனால் அதை அந்தநேரத்தில் நான் அறிந்து கொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் இவரிடம் மாட்டி கொண்டோமே என்று கூட வருத்தபட்டிருக்கிறேன் காரணம் ஒரு கேள்வி கேட்டால் அதற்கான பதிலை நேரடியாக சொல்லவே மாட்டார். சற்றேற குறைய இரண்டுமணி நேரமாவது சுற்றி வளைத்து ஏதேதோ விஷயங்களை பேசுவார். அவை அனைத்தும் ஆன்மிகம் சம்மந்தப்பட்டதாக இருக்குமே தவிர தப்பி தவறி கூட உலகியல் விஷயமாக இருக்காது. அவர் கூற வேண்டியது எல்லாம் ஆசை தீர கூறி முடித்து கடைசியில் நாம் கேட்ட கேள்விக்கு இரண்டு வரியில் பதிலை சொல்லி விட்டு சரி பாடம் முடிந்தது, நாளைக்கு பார்ப்போம் என்று கிளம்பி விடுவார். ஒரு சிறிய விஷயத்தை கற்று கொள்ள வேண்டுமென்றால் கூட மாத கணக்கில் பொறுமையோடு காத்திருக்க வேண்டும் அவசரப்பட்டால் எதுவும் ஆகாது.
அவரிடம் ஒரு ஜாதகத்தை லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பார்க்க வேண்டுமா? ராசியை கொண்டு பார்க்க வேண்டுமா? என்று கேள்வி கேட்டேன். இதற்கு அவர் இரண்டு நாள் சுற்றி வளைத்து பேசிவிட்டு விதி, மதி, கதி ஆகிய மூன்றையும் கவனத்தில் கொண்டு தான் பலனறிய வேண்டும் என்று பதில் தந்தார். விதி, மதி, கதி என்றால் என்ன? எதற்காக அவர் அப்படி கூறுகிறார் என்பது எனக்கு விளங்கவில்லை அதற்கான காரணத்தை அவரிடமே கேட்டேன். ஒரு ஜாதகம் மூன்று வித கோணத்தில் அமைந்திருக்கும் அதாவது விதிவழி ஒன்று, மதிவழி மற்றொன்று, கதிவழி வேறொன்று என்று சொன்ன அவர், விதிவழி என்றால் லக்கினத்தை கணக்கிட்டு கூறுவது, மதிவழி என்றால் ராசியை கவனித்து கூறுவது மற்றும் கதிவழி என்றால் சூரியனின் தன்மையை கொண்டு கூறுவது என்றும் பதில் சொன்னார்.
கிரகங்களின் முதண்மை கிரகம் சூரியன் என்பது நமக்கு தெரியும். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரையில் பல ஜோதிடர்கள் சூரியனுடைய இருப்பை பிதுர் வழியின் பலன்களை அறிந்து கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆனால் நமது பண்டையகால ரிஷிகளும், சித்தர்களும் சூரியனை அவ்வளவு அசட்டையாக கவனிக்கவில்லை. சூரியன் எந்த ராசியில் இருக்கிறதோ அந்த ராசியை முதல் வீடாகவும் கொண்டு சில பலன்களை மிக துல்லியமாக கணித்து கூறியிருக்கிறார்கள் ஞான பிரதீபிகை என்ற மிக பழமையான வடமொழி ஜோதிட நூல் ஆகாயம் புருஷன் பிராணன் ஆகிய தத்துவங்களின் வெளிப்பாடாக இருப்பது சூரியன் என்றும் பூமி ஸ்திரி சரீரம் ஆகியவற்றின் வெளிப்பாடாக இருப்பது சந்திரன் என்றும் மிக தெளிவாக கூறுகிறது எனவே ஒரு ஜாதகத்தின் பலம் பொருந்திய தன்மையை கணக்கிடுவதற்கு சூரிய, சந்திர சஞ்சாரங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதை இன்னும் தெளிவாக சொல்வது என்றால், ஒரு மனிதனின் விதி இன்னது தான் இப்படி தான் என்பதை அறிந்து கொள்ள லக்கினத்தை கணக்கிட வேண்டும். அவனது புத்திசாலித்தனத்தை, மன தைரியத்தை, எண்ணங்களின் வேகத்தை தெரிந்து கொள்ள சந்திரனை கணக்கிட வேண்டும். அவனது செயல்பாடு, முயற்சிகள் போராட்டங்கள் சவால்களை எதிர்கொள்ளும் தன்மைகள் ஆகிய அனைத்தும் சூரியனை வைத்தே தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி மூன்றையும் கவனத்தில் கொண்டால் மட்டுமே ஒரு ஜாதகனின் உண்மையான பலனை புரிந்து கொண்டு அவனுக்கு வழி காட்டலாம். ராசி, லக்கினம் ஆகிய இரண்டை மட்டுமே கவனத்தில் கொண்டால் அவ்வளவாக பலன்கள் ஒத்திட்டு வராது. எனவே ஜோதிட பலன்கள் கூறுவோர்களும் அறிந்து கொள்ள முயற்சிப்போர்களும் கதிவழி, மதிவழி, விதிவழி என்ற வாசகத்தை நினைவில் வைக்க வேண்டும் என்பது என் அனுபவ ரீதியான உண்மையாகும்.