குருஜி அவர்களுக்கு என் உடம்பு எப்போது பார்த்தாலும் சூடாகவே இருக்கிறது. கண் எரிச்சல், நீர் கடுப்பு அடிக்கடி வருகிறது இது தீர எளிய மருந்து கூற முடியுமா?
இப்படிக்கு
சுஜாதா
வந்தவாசி
தலைக்கு குளிக்கும் வழக்கம் என்ற ஒன்று இருந்தது. அது இப்போது அரிதாகி கொண்டே வருகிறது. தலைக்கு குளிப்பது என்றால் தலையில் தண்ணீரை ஊற்றி கொள்வது மட்டுமல்ல நன்றாக எண்ணெய் தேய்த்து ஊற வைத்து அதன்பிறகு குளிப்பதாகும். இப்படி குளிப்பதனால் பல நோய்கள் நம்மை எட்டி பார்ப்பதே கிடையாது இதனால் தான் அன்று வைத்தியனுக்கு கொடுப்பதை விட வாணியனுக்கு கொடுப்பது மேல் என்று பழமொழி உருவானது.
அதே போல தலைக்கு தண்ணீர் ஊற்றினாலும் சோப்பு, ஷாம்பு என்பவைகளை பயன்படுத்தும் வழக்கமே அதிகம் இருக்கிறது இதனால் தலைமுடி மட்டுமல்ல நமது சருமமும் கூட பொலிவிழந்து விடுகிறது. எனவே இவைகளை தவிர்த்து விட்டு இயற்கை பொருள்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
உங்களுக்கு அதிகமான உடல் சூடு இருப்பதற்கு பல காரணங்களை கூறலாம் நேரடியாக பரிசோதனை செய்தால் மட்டுமே சரியான காரணத்தை கண்டுபிடிக்க இயலும். இருந்தாலும் தலைக்கு சீயக்காய் போடும் போது அதனோடு சற்று கருவேப்பிலையும் வைத்து அரைத்து தலையில் போட்டு குளித்து வாருங்கள் உடல் சூடு தனிய துவங்கும். நல்ல பலனை பெறலாம்.