நான் அமெரிக்காவில் இருக்கிறேன் இங்கு முறைப்படியாக சந்தியாவந்தனம் செய்ய முடியவில்லை அதற்கு எளிதாக மாற்று பரிகாரம் எதாவது இருந்தால் வழி கூறுங்கள் கண்டிப்பாக செய்கிறேன்.
இப்படிக்கு,
ராஜேஷ்கண்ணா,
அமெரிக்கா
இரவு பொழுதும், காலை பொழுதும் சந்திக்கும் நேரம், மாலையும், இரவும் சந்திக்கும் நேரம் இவைகள் தான் சந்தி பொழுதுகள். இவற்றில் பகல், இரவு என்ற நேர வித்தியாசங்கள் இருக்குமே தவிர பொழுது வித்தியாசங்கள் இருக்காது. உலகம் முழுவதும் ஒன்று தான் என்று நேற்றுவரை நினைத்திருந்தேன். இன்று உங்கள் கடிதத்தை பார்த்த பிறகு தான் அமெரிக்காவில் சந்தி பொழுதே கிடையாது என்ற உண்மை தெரிகிறது.
பிறகு எப்படி உங்கள் கேள்விக்கு பதில் கூறுவது என்று யோசித்து பாருங்கள். அமெரிக்காவில் நேரமில்லை, அதற்காக சாப்பிடவில்லை, துணிமணிகள் மாற்றி கொள்ள முடியவில்லை, உறங்குவதற்கு நேரம் கிடையாது, உல்லாசமாக பொழுது போக்குவதற்கு ஓய்வே கிடையாது என்று உங்களால் மனசாட்சி படி கூற இயலுமா? நிச்சயம் முடியாது. காரணம் இவைகள் அனைத்திலும் உங்களது சுயநலம் மறைந்திருக்கிறது. அதனால் தட்டாமல் செய்ய முடிகிறது
சந்தியாவந்தனம் செய்வதில் என்ன லாபம் இருக்கிறது அதனால் என்ன வந்துவிட போகிறது என்ற அசட்டையினால் தான் இதற்கு பரிகாரம் கேட்கிறீர்கள். சந்தியாவந்தனம் செய்யாமல் இருப்பது கூட குற்றம் கிடையாது. அதற்காக பரிகாரம் செய்து தப்பித்து கொள்ள பார்க்கிறீர்கள் பாருங்கள் அது பெரிய பாவமாகும்.
உங்களை போன்றவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறுவது என் வழக்கமில்லை என்றாலும் உங்களை போல பல சோம்பேறிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காகவே பதில் எழுதுகிறேன் எனவே சந்தியாவந்தனம் செய்வதற்கு பரிகாரங்களை தேடாமல் ஒழுங்கு மரியாதையாக அதை செய்யுங்கள். பாவத்திலிருந்து விடுபடுங்கள். இது அறிவுரை அல்ல எச்சரிக்கை.