குருஜி அவர்களுக்கு வணக்கம். எனக்கு ஐந்து அண்ணன், மூன்று அக்கா, நாங்கள் பெரிய குடும்பம். ஆனால் இதுவரையில் எங்களுக்குள் ஒற்றுமை என்பதே கிடையாது. யாராவது ஒருவர் மற்றொருவர் மீது சண்டை மனக்கசப்பு என்று இல்லாத நாளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் நான் எங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருக்க விரும்புகிறேன் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் தயவு செய்து வழிகாட்டுங்கள்.
இப்படிக்கு,
சிவராமன்,
கோபிசெட்டிபாளையம்.
இப்போதெல்லாம் ஒரு குழந்தைக்கு மேல் பெற்று கொள்வதற்கே பலர் யோசிக்கிறார்கள். சங்கடப்படுகிறார்கள். வருகிற வருவாயில் ஒரு குழந்தையை நல்லபடியாக உருவாக்கினால் போதாதா? என்று நினைக்கிறார்கள். பொருளாதார ரீதியான சிந்தனையின் படி இந்த கருத்து சரியானதாக தோன்றும் ஆனால் இது முற்றிலும் தவறுதலானது அபாயகரமானது .
ஒற்றைக்குழந்தையாக வளர்க்கப்படும் போது பல இடர்பாடுகள் இருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகளில் அநேகம் பேருக்கு பகிர்ந்து கொடுக்கும் தன்மையே இல்லாமல் போய் விடுகிறது. தனிமையில் வாழ்ந்து வாழ்ந்து நாலு மனிதர்களை கண்டால் வெறுக்க தோன்றிவிடுகிறது. இது அவர்களின் திருமணத்திற்கு பிறகு மிகப்பெரிய பிரச்சனையாக விசுவரூபம் எடுத்து விடுகிறது.
அதனால் சில குழந்தைகளாவது குடும்பத்தில் இருக்க வேண்டும். அதுவும் உங்கள் குடும்பத்தில் இத்தனை பேர் இருப்பதை கேட்பதற்கே சந்தோசமாக இருக்கிறது. நாலுபேர் இருக்கும் இடத்தில் கூச்சல் குழப்பங்கள் இருப்பது சகஜமே. ஒருவகையில் அது சந்தோசமே அண்ணன் தம்பிகளுக்கு மத்தியில் உருவாகும் பகையை குடும்பத்து பெண்கள் ஊதி பெரியதாக்காமல் இருந்தால் நாளடைவில் சண்டைகள் சமாதானமாகி விடும் எதிர்மறையாக இருந்தால் வழக்கு வம்பு, வெட்டு குத்து தான்.
சகோதர ஒற்றுமைக்கு இலக்கணமாக இருப்பவன் அண்ணல் ராமபிரான் அவனை வழிபட்டால் குடும்ப தகராறுகளை நிச்சயம் தீர்த்து வைப்பான். தினசரி ராமனுக்கான காயத்திரி மந்திரத்தையும், அவனது தூதன் ஹனுமனுக்கான காயத்திரியையும் பக்தி சிரத்தையோடு பராயணம் செய்து பாருங்கள். குடும்ப ஒற்றுமை விரைவில் கூடிவரும்.