குருஜி ஐயா அவர்களுக்கு பழனியிலிருந்து பாலசுப்பிரமணியன் பணிவான வணக்கத்தோடு எழுதும் கடிதம். நான் சில வருடங்களாக உங்களது எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன் உங்களிடம் எனக்கு பிடித்தது பிரம்மாண்டமான விஷயங்களை கூட மிக சுலபமான முறையில் புரிந்து கொள்ள வைத்து விடுகிறீர்கள் அதில் தான் உங்களது வெற்றி அடங்கி இருக்கிறது ஐயா நான் இப்போது பழனியில் இருந்தாலும் எனது சொந்த ஊர் பொள்ளாச்சி பக்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் அங்கு எனக்கொரு வீடு இருக்கிறது அந்த வீட்டிற்குள் அடிக்கடி பாம்பு வந்துவிடுகிறது அதை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று எனக்கு தெரியவில்லை நீங்கள் தயவு செய்து விளக்கம் சொல்லி நிவாரணம் தர வேண்டும்.
இப்படிக்கு
பாலசுப்ரமணியம்
பழனி
கோடைகாலத்தில் வறண்டு போய் கிடக்கிறது என்பதற்காக ஏரி, குளங்களில் வீடுகளை கட்டி விட்டு மழைக்காலத்தில் ஐயோ வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டதே! வெள்ளத்தினால் என் வாழ்க்கை தரம் சூறையாடப்பட்டு விட்டதே என்று வருத்தபடுவது இன்று கிராமம் நகரம் என்றில்லாமல் பல இடங்களிலும் வாடிக்கையாகி விட்டது. இது கூட பரவாயில்லை சில கடற்கரை ஓர கிராமங்களில் வீட்டு முன்னால் கார் மற்றும் ஸ்கூட்டரை நிறுத்துவது போல படகுகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் அந்த அளவிற்கு கடலோடு நெருங்கி வீட்டை கட்டி வைத்து விட்டு கடலரிப்பு ஏற்படுகிறதே என்று வருத்த்படுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது.
யானைகள் வாழுகிற பகுதிகளை விவசாய நிலமாக மாற்றிவிட்டு ஊருக்குள் யானை வந்து அட்டகாசம் செய்கிறது என்று யானைகளின் மீது பழியை போடுவது போல நாம் பாம்புகளின் இடங்களை ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டு அவற்றின் மீது தேவை இல்லாமல் குற்றம் கூறுகிறோம்.
முன்பெல்லாம் வீட்டிற்கும், புதர்களுக்கும் அதிக தூரம் இருக்கும். இதனால் பாம்புகள் மனிதனுடைய தொல்லைகள் இல்லாமல் அமைதியாக வாழ முடிந்தது. இப்போது மனிதன் புதர்களையும் வீடுகளாக்கி விட்டான். இது மட்டுமல்ல பழையகாலத்தில் எலிகள் வீடுகளுக்கு சென்று வேட்டையாடி விட்டு விரைவில் வெளியில் வந்துவிடும் இப்போது காலம் கெட்டு விட்டதனால் வீட்டுக்குள் போன எலிகள் வெளியில் வருவதே இல்லை பிறகு பசியாக இருக்கும் பாம்புகள் என்ன செய்யும் வீட்டை நோக்கி படை எடுத்து தான் ஆகவேண்டும். ஆனாலும் பாம்புகள் பசியாக வருகிறதா? இல்லையா? என்று நமக்கா தெரியும் பாம்பை கண்டால் படையே நடுங்கும் போது பழனி பாலசுப்பிரமணியம் மட்டும் நடுங்கமலா இருப்பார் அவரும் மனிதர் தானே பாம்பை பற்றிய பயம் அவருக்கும் இயற்கையாகவே இருக்கும்.
பாம்புகளை இறை தேட விடாமல் தடுப்பது குற்றம் என்றாலும் அவரிடமிருந்து தப்பித்து கொண்டு உயிர் வாழ்வது அவசியமாக இருக்கிறது. எனவே யார் வீட்டிற்குள் அதிகமாக பாம்புகள் வருகிறதோ அவர்கள் தங்களது வீட்டை சுற்றி உப்பையும் மிளகு தூளையும் கலந்து தெளித்து வர வேண்டும் உப்பு என்றால் மாவு உப்பு (பொடி உப்பு ) அல்ல, கல் உப்பு அதாவது ரசாயனம் கலக்காத இயற்கையான உப்பு இப்படி உப்பை தூவி விட்டால் நாளடைவில் அந்த பகுதிக்கு அடிக்கடி வருவதை பாம்பு நிறுத்தி கொள்ளும். நாமும் அநியாயமாக அதற்கு தொல்லை கொடுக்காமல் நல்லபடியாக வாழலாம் இதை சுலபமாக செய்யலாமே வீட்டிற்கு அழையாத விருந்தாளி போல பாம்புகள் வருவது கண்டிப்பாக தடைபடும்.