ஐயா, என் மகன் இந்த வருடம் தான் முதலாம் வகுப்பிற்கு செல்கிறான். அவனுக்கு படிப்பின் மீது ஆர்வம் வரமாட்டேன் என்கிறது. விளையாடிக்கொண்டே இருக்கிறான் படித்தால் தானே அவன் எதிர்காலம் நன்றாக இருக்கும் அவனை திருத்த எதாவது நல்ல வழிகள் சொல்லுங்கள். உங்களுக்கு நன்றி கடன்பட்டவளாக இருப்பேன்.
இப்படிக்கு,
கவிதா கிருஷ்ணமூர்த்தி,
இராமநாதபுரம்.
திருத்த வேண்டியது உங்கள் மகனை அல்ல. அவன் நன்றாகவே இருக்கிறான். உங்களைத்தான் முதலில் திருத்த வேண்டும். இந்த வயதில் விளையாடாமல் அறுபது வயதிலா விளையாட போகிறான்? விளையாட வேண்டிய வயதில் அவனை பிடித்து கால், கைகளில் விலங்கு பூட்டி படிக்க வைக்கும் கொடுமையை இந்த சமுதாயம் தொடர்ந்து செய்து கொண்டே வருகிறது. இதனுடைய விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருக்கும்.
ஐந்து வயதிற்கு மேல் தான் பாடசாலையில் குழந்தைகளை சேர்க்க வேண்டுமென்ற நியதி இருந்த போது இந்த நாட்டில் பெற்றோர்கள் யாரும் கைவிடப்படவில்லை அண்ணன், தம்பிகள் உறவுகள் இல்லாமலே பிரிந்து போனதில்லை. எப்போது தவழும் வயதில் குழந்தையை கொண்டு வகுப்பறைகளில் அடைத்தோமோ அப்போதே முதியோர் இல்லங்களில் கதவுகளை திறந்து வைக்க ஆரம்பித்து விட்டோம்.
விளையாட முடியாமல் சுதந்திரத்தை பறிகொடுக்கும் குழந்தைகள் சுயநலக் காரர்களாகவே வளர்கிறார்கள். தன் சுகம், தன் வளர்ச்சி இவைகள் மட்டுமே அவர்களின் இலக்காக இருக்கிறது. ஓடி விளையாடு, ஓய்ந்திருக்க கூடாது என்று குழந்தைகளை ஆடி பாட அனுமதித்த போது அவைகளுக்கு பத்து பேர்களோடு பழகி விட்டு கொடுக்கும் மனப்பாங்கும், கூடி வாழ்வதில் உள்ள சுகமும், தெரிந்திருந்தது அதனால் அவர்களிடம் சிறிதளவேனும் பொதுநலம் இருந்தது. இன்று அவைகள் அனைத்துமே தண்ணீர் இல்லாத குளத்து பறவைகள் ஆகிவிட்டன.
இன்று மிகப்பெரிய தீங்கு ஒன்று நாகரீகம் என்று பெயரிலும், சிக்கனம் என்ற பெயரிலும் நடந்து வருகிறது. ஆணோ, பெண்ணோ ஒரு குழந்தை போதும் அதை வளர்த்து ஆளாக்கினால் போதும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இப்படி தனிமையாக குழந்தைகள் வீட்டில் வளர்க்கபடுமேயானால் நிச்சயம் அந்த குழந்தைகள் வளர்ந்த பிறகு பரந்த மனமில்லாத மனநோயாளியாக இருப்பார்கள். இன்று சொல்கிறேன் எழுதி வைத்துகொள்ளுங்கள். இதே நிலைமை நீடித்தால் ஊருக்கு இரண்டு பைத்தியகார ஆஸ்பத்திரிகள் துவக்க வேண்டிய நிலை வரும்.
ஐந்தாம் வகுப்புவரை குழந்தைகள் எழுதபடிக்க கற்றுகொண்டால் மட்டும் போதும் மிக பிரமாதமாக படிக்க வேண்டிய அவசியமே இல்லை. சுதந்திரமாக விளையாடுவதும் நண்பர்களோடு சண்டை போடுவதும் கூட நடக்கட்டும் அப்படி நடந்தால் தான் அவர்கள் நல்ல குழந்தைகளாக வருங்கலத்தில் வருவார்கள் அதை விட்டு விட்டு சதா படி படி என்று வற்புறுத்தினால் படிப்பு ஏறாது அவன் மனதில் வெறுப்பு தான் ஏறும். ஐந்தாம் வகுப்பிற்கு மேல் அவனுக்கே ஆர்வம் தோன்றி படிக்க ஆரம்பிப்பான். நன்றாக வருவான் அதில் கவலைப்படவேண்டிய அவசியமில்லை.
இருந்தாலும் குழந்தைகள் படிப்பதற்கு பரிகாரம் சொல்லவேண்டிய கடமை எனக்கிருக்கிறது திருசெந்தூரில் குடிகொண்டிருக்கிறாரே முருகப்பெருமான் அவரது திருவுருவ படத்தை பூஜை அறையில் வைத்து தினசரி ஐந்து அகல்விளக்குகள் ஏற்றி கந்த சஷ்டி கவசம் முப்பத்தேழு நாட்கள் படித்து பூஜை செய்து வாருங்கள் குழந்தைகளுக்கு படிப்பின் மேல் ஆர்வம் கண்டிப்பாக வரும்.