குருஜி அவர்களுக்கு வணக்கம். எனக்கு முப்பது வயதாகிறது. என்னைவிட மூத்தவர்கள் இன்னும் இரண்டு பேர்கள் எங்கள் வீட்டில் உண்டு. எங்கள் யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமண முயற்சிகள் தட்டிபோவதும் கூடிவந்த வரன்கள் கடைசி நேரத்தில் வெட்டிக்கொள்வதும் சகஜமாக இருக்கிறது. வாஸ்துப்படி வாழுகிற வீட்டில் குறை இருப்பதாக சொன்னார்கள் அதையும் நீக்கி சரிசெய்து வருடம் ஒன்றாகிறது. இன்னும் நல்லகாரியம் எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை எங்கள் குடும்பத்திற்கு சாபம் ஏதாவது இருக்குமா? என்று சந்தேகப்படுகிறேன் எங்கள் அனைவரின் ஜாதகங்களையும் உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். தயவு செய்து கணித்து பார்த்து நல்ல பரிகாரம் சொல்லும்படி பணிவோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
லாரன்ஸ் ஜெயக்குமார்,
வில்லிவாக்கம்
குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் திருமணம் தள்ளிப்போவது விதிவசம் என்று கூறமுடியாது. இப்படிப்பட்ட விவகாரங்கள் அனைத்துமே விதிவிலக்காக யாரோ ஒருவருக்கு மட்டுமே நடைபெற கூடியதாக இருக்கிறது. இதற்கான காரண காரியங்களை தேடி கண்டுபிடித்து பார்க்கும் போது விசித்திரமான பல பதில்கள் நமக்கு கிடைத்து வியப்படைய வைக்கிறது. நீங்கள் அனுப்பிய அனைத்து ஜாதகங்களையும் ஒருமுறைக்கு பலமுறை அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டேன் யாருக்கும் திருமண தோஷமோ அல்லது நீங்கள் குறிப்பிடுகிற படி சாப தோஷங்களோ இல்லை.
உங்கள் தந்தையாரின் ஜாதகத்தை பார்க்கும் போது அவர் இடைக்காலத்தில் அதாவது இளமை பிராயத்தில் மதம் மாறியதாக தெரியவருகிறது. அதாவது இவராக இல்லாமல் இவரின் தந்தையின் முயற்சியால் மதம் மாறி இருக்க வேண்டும் என்பதை அறியமுடிகிறது. அப்படி மதம் மாறுகிறபோது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக கடைப்பிடித்து வருகிற பல ஆச்சாரங்களை கைவிட வேண்டிய நிலைமை வரும். அதனடிப்படையில் உங்கள் குடும்பத்தில் குலதேவதை வழிபாட்டை கைவிட்டு இருக்கிறீர்கள். தொன்றுதொட்டு செய்துவரும் பூஜை புனஷ்காரங்களை வேண்டாமென்று விட்டுவிடுவது கூட ஒருவித தோஷம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
எனவே உங்களுக்கு குலதேவதை குறைபாடு மிக அதிகமாக இருப்பதனால் வீட்டில் சுபகாரியங்கள் எதுவும் நடைபெறாமல் தடைபட்டு வருகிறது. எனவே தற்போது உள்ள மதத்தில் உங்களுக்கு ஆழமான பிடிப்பும் நம்பிக்கையும் இல்லை என்பதை என்னால் அறிந்துகொள்ள முடிகிறது. எனவே அக்கம் பக்கத்தார் பேசுவதை கவனிக்காமல் உங்கள் குலதேவதைக்கு சரியான முறையில் வழிபாடு நடத்துங்கள் அதன்பிறகு மிக விரைவிலே உங்கள் குடும்பத்தில் நல்லது நடக்கும் இதை உறுதியாக என்னால் சொல்ல முடியும்.