Store
  Store
  Store
  Store
  Store
  Store

இவர் தான் இந்தியாவின் பிரதமர்


மினி தொடர் பாகம் 2


    புறாவின் உயிரை காப்பாற்றுவதற்கு தனது உடம்பின் சதையை வெட்டி கொடுத்தவன் வாழ்ந்த நாடு இந்த நாடு. நீதி கேட்ட ஐந்தறிவு ஜீவனான பசுவிற்காக தனது மகனையே பலிகொடுத்தவன் வாழ்ந்த நாடு இந்த நாடு. தவறான தீர்ப்பு வழங்கி விட்டோமே? என்று தன் உயிரை மாய்த்து கொண்டவன் வாழ்ந்த நாடு இந்த நாடு. இப்படிப்பட்ட நாட்டில் தான் தனக்காகவும், தனது குடும்பத்திற்காகவும் பேரன், பேத்தி, நண்டு நசும்புகழுக்காகவும் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து புதையலை பூதம் பாதுகாப்பது போல வாழுகின்ற தலைவர்களும் இருக்கிறார்கள். இவர்களை பார்க்கும் போது நேர்மையான நாட்டுப்பற்று மிக்க மக்களை நேசிக்கிற தலைவர்கள் அக்காலத்தில் மட்டும் தான் வாழ்ந்தார்கள் இக்காலத்தில் அப்படி யாரும் இல்லை, இருக்கவும் முடியாது என்ற சிந்தனை நம்பிக்கை பலருக்கு இன்று வந்துவிட்டது. நாடு முழுவதும் நடக்கின்ற பெருவாரியான நிகழ்வுகளை அறிகிற போது நமக்கு கூட அந்த எண்ணம் வந்துவிடுகிறது.

ஆனால் நல்ல தலைவர்கள் அன்று மட்டுமல்ல இன்றும் நம்மோடு பலர் வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட தலைவர்கள் யாருமே இல்லை என்றால் நாட்டில் சிறிதேனும் இருக்கின்ற நியாய தர்மங்கள் என்றோ செத்துபோயிருக்கும். ஆளுமைமிக்க தலைவர்கள் புராண காலத்திலும், சரித்திர காலத்திலும் மட்டுமல்ல நேற்று கூட வாழ்ந்திருக்கிறார்கள். நமது கவனத்தையும், கருத்தையும் சிறிது பின்னோக்கி நகர்த்தி சென்றோம் என்றால் அற்புதமான பல தலைவர்களின் அடிச்சுவடுகளை காண முடியும்.

இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமமந்திரிகளின் ஒருவராக இருந்தவர் மொரார்ஜிதேசாய் என்பது நாம் அறியாதது அல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உணவு பொருள்களின் விலைகளில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒரே மாதிரியாக கொண்டுவந்து மக்கள் பலரின் சுமையை குறைத்தவர் அவர். தாலி செய்வதற்கு கூட தங்கம் வாங்க முடியாத அந்த காலத்தில் தங்கத்தின் விலையை பல மடங்காக குறைத்து ஏழையின் குடிசையிலும் தங்கம் குடியிருக்க முடியும் என்று காட்டியவர் இப்படிப்பட்ட மொரார்ஜிதேசாவிற்கு எத்தனை குழந்தைகள்? அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? எப்படி இருந்தார்கள் என்று யாருக்காவது தெரியுமா? அவர்களின் பெயர்களையாவது நம்மால் கூற முடியுமா? நிச்சயம் முடியாது. தேசாய் போன்ற தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்தார்களே தவிர தனது சொந்த மக்களுக்காக சுயநலத்தோடு வாழவில்லை. 

மொரார்ஜி தேசாய் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோது அவரது ஒரே மகள் பனிரெண்டாம் வகுப்பு பரீட்சை எழுதியிருந்தார். நன்றாக படித்திருந்தும் அந்த பரீட்சையில் அவர் தோற்றுவிட்டார். மறுகூட்டல் செய்து பார்த்தால் நிச்சயம் தான் வெற்றி அடைவோம் என்று நம்பி அந்த பெண் தனது தந்தையாரிடம் அதற்கு அனுமதி கேட்டார் தேசாய் அதற்கு சொன்ன பதில் அம்மா நீ ஒரு சாதாரண குடிமகனின் மகளாக இருந்தால் மறுகூட்டல் செய்தால் அதில் வெற்றி பெற்றால் யாரும் எதுவும் பேசமாட்டார்கள். ஆனால் நீ இந்த மாநில முதல்வரின் மகள் தப்பி தவறி மறுகூட்டலில் வென்று விட்டாய் என்று வைத்துக்கொள் தேசாய் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மகளை வெற்றியடைய செய்துவிட்டார் என்று எல்லோரும் பேசுவார்கள் எனவே நீ சிரமத்தை பார்க்காமல் இன்னொரு முறை படித்து பரீட்சை எழுது. இது தான் என் முடிவு என்று உறுதியாக கூறிவிட்டார்.

அந்த பெண் உலகம் அறியாத சிறிய பெண். வாழ்வில் அவளுக்கு அனுபவங்கள் எதுவுமே ஏற்பட்டது இல்லை. தாயில்லாத தனக்கு சகலமும் தந்தை என்று வாழ்ந்திருந்தவள் தான் உயிருக்கு உயிராக நம்பிய தந்தை கூட தன் மனதை புரிந்து கொள்ளாமல் தனது கஷ்டத்தை உணர்ந்து கொள்ளாமல் தன்னுடைய நிலையிலிருந்தே பேசிவிட்டார் என்பதை நினைத்து பார்க்கும் போது அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை. துக்கத்தை சொல்லி அழ யாருமே இல்லாத நிலையில் தூக்க மாத்திரைகளை துணையென்று நாடி தற்கொலை செய்துகொண்டார். தனது ஒரே மகளை துடிக்க துடிக்க பறிகொடுத்த மொரார்ஜி தேசாய் என்ன சொன்னார் தெரியுமா? நான் நேர்மையோடு வாழ்வதற்கு என் மகளை பலிகொடுத்து தான் ஆகவேண்டும் என்றால் என் மகளை கொடுப்பேனே தவிர நேர்மையை கைவிட மாட்டேன் என்றார். அந்த தலைவரையும் இன்றைய நமது தலைவர்களையும் ஒப்பிட்டால் உள்ளத்தில் எதோ ஒரு மூலையில் எரிமலை வெடிக்க சித்தமாக இருப்பதை அறிய முடிகிறது.

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி நான்காம் ஆண்டு, மார்ச் மாதத்தின் நடு பகுதி என்று நினைக்கிறேன் காலை நேரம் தினமணி பேப்பரை படிப்பதற்கு கையில் எடுத்தபோது முதல் பக்கத்தில் பிரசுரமாகி இருந்த ஒரு புகைப்படம் கண்ணை கவர்ந்தது. ஒரு முதியவர் தெருவில் நின்று கொண்டிருந்தார். அவர் காலடியில் சில மூட்டை முடிச்சுகள், பாத்திர பண்டங்கள் கிடக்கின்றன. ஒரு வீடு, பூட்டி பூட்டு தொங்கியபடி பின்னணியில் தெரிகிறது. புகைப்படத்திற்கு கீழே குல்ஜாரிலால் நந்தா வாடகை கொடுக்க முடியாததால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்ற ஒரு செய்தி எழுதபட்டிருக்கிறது யார் இந்த குல்ஜாரிலால் நந்தா?


இவர் பஞ்சாப் மாநிலம் சியால் கோட்டில் பிறந்தவர். மிகச்சிறந்த பொருளாதார நிபுணர். விடுதலை போரில் மகாத்மா காந்தியோடு பங்குபெற்று பலமுறை சிறை சென்றவர். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே இந்திய தொழிலாளர்களின் அவல நிலையை சர்வதேச அரங்கம் அறிந்து கொள்வதற்கு பல உலக மாநாடுகளில் கலந்துகொண்டு தனது சொல்லாற்றால், பல தலைவர்களை வசீகரித்தவர். விடுதலைக்கு பிறகு, இந்திய திட்டக்கமிஷனின் துணைத்தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த குல்ஜாரிலால் நந்தா தொழிலாளர் துறை அமைச்சராக இருந்திருக்கிறார். பிரதம மந்திரிக்கு சமமான அதிகாரம் படைத்த இந்திய உள்துறை மந்திரியாகவும் இவர் இருந்துள்ளார். ஆச்சரியப்படாதீர்கள் இரண்டுமுறை இந்தியாவின் பிரதம மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். இத்தனை சிறப்புமிக்க செல்வாக்கு மிக்க இவர் கடைசி வரையில் சுதந்திரபோரட்ட வீரர்களுக்கான பென்சன் தொகையான ரூபாய் ஐநூறிலேயே குடும்பம் நடத்தினார். தொன்னூற்றி ஐந்தாம் ஆண்டு, அதாவது தான் வாடகை வீட்டிலிருந்து விரட்டப்பட்ட பிறகு தியாகிகளுக்கான சலுகையாக சிறிய வீடு தரமுடியுமா என்று அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தார். கருனையே வடிவான இந்திய பேரரசு அந்த தியாகியின் கோரிக்கையை அவர் இறக்கும் வரையில் ஏற்றுகொள்ள வில்லை

ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள். பஞ்சாயத்து யூனியனில் கவுன்சிலராக பொறுப்பேற்ற இரண்டு வாரத்திலேயே ஆடி காரில் பயணம் செய்யும் மனிதர்கள் மிகுந்த இந்த நாட்டில் மந்திரியாகவும், பிரதம மந்திரியாகவும் இருந்த ஒருவர், ஐநூறு ரூபாய் பணத்திலே சாகும் வரை வாழ்ந்தார். தனது அதிகாரத்தை செல்வாக்கை பயன்படுத்தி ஒரு சல்லிக்காசு கூட தனக்கென்று சேர்க்காமல் நேர்மையாக இருந்தார் என்பதை நினைத்து பார்க்கும் போது உடம்பு சிலிர்க்காமல் இருக்கவில்லை. மொரார்ஜி தேசாய்களும், குல்ஜாரிலால் நந்தாக்களும் மாண்டு போயிருக்கலாம். ஆனால் அவர்கள் விதைத்து விட்டு போன மாண்புகள் இன்னும் மாண்டுவிடவில்லை. ஆயிரம் இடிமுழக்கங்கள், ஆயிரம் எரிமலைகள் தொடர்ந்து தாக்கினாலும் இந்தியாவின் ஆத்மா எந்த அதிர்வும் அடையாமல் இன்னும் ஜீவித்து கொண்டிருப்பது போல தேச தர்மம் என்பதும் இன்னும் உயிரோடேயே இருக்கிறது. அதன் நிழலில் சில தலைவர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காண வேண்டியது மட்டும் தான் நமது வேலை.




Contact Form

Name

Email *

Message *