யார் ஞானி 2
அந்தி சாய்ந்து விட்ட நேரம் ஆசிரமத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டுவிட்டன. காலம், நேரம் நீண்டுகொண்டு போவதை சட்டை செய்யாமல் குருஜி எங்களோடு பேசிகொண்டிருந்தார். அவரிடம் ஆதிசங்கரர் அத்வைத தத்துவத்தை உருவாக்கினார். காரல்மார்க்ஸ் கம்யூனிசிய தத்துவத்தை உருவாக்கினார். அதை போல காந்தி எதாவது புதிய தத்துவங்களையோ, சித்தாந்தங்களையோ உருவாக்கினாரா? என்று கேட்டோம்.
குருஜி
ஆதிசங்கரர் உருவாக்கிய அத்வைத கருத்து என்று நாம் பேசுகிறோம். ஆனால் அது உண்மையில் ஆதிசங்கரரால் உருவாக்க பட்டதா? அவருக்கு முன்பு அந்தமாதிரியான சிந்தனைகள் எங்குமே இல்லையா? என்பதை பார்க்கும் போது இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. சங்கரருடைய முன்னோடிகளாக கெளடபாதர் போன்றர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பே கூட உபநிஷதங்கள் அத்வைதத்தை பற்றி மிக விரிவான தெளிவான கருத்துக்களை சொல்லி இருக்கின்றன. கம்யூனிச தத்துவமும் ஏறக்குறைய அப்படித்தான் காரல்மாக்ஸ் காலத்திற்கு முன்பே பொதுவுடைமை சித்தாந்தம் பலராலும் சிந்திக்க பட்டது உபதேசிக்க பட்டது.
காந்தியம் என்று நாம் இன்று பேசுகிற கருத்துக்கள் கூட காந்திக்கு முன்பே இருந்தவைகள் தான். இதை நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை காந்தியே சொல்கிறார் என்னுடைய கருத்துக்கள் புதியன அல்ல, மிகவும் தொன்மையான இந்திய ஞானிகளின் தத்துவங்களை எனது அன்றாட வாழ்க்கையில் நடைமுறை படுத்தினேன். எனது பேச்சுக்களையும், எழுத்துக்களையும் அப்படியே அந்த பாதையிலேயே செலுத்தினேன். புதியதாக எதையும் நான் உருவாக்கவில்லை, உருவாக்க விரும்பவும் இல்லை. காந்தியின் கருத்துக்கள் காலத்தால் முற்பட்டது என்பதற்கு இதைவிட வேறு எந்த ஆதாரமும் நமக்கு தேவையில்லை.
சீடர்:-
காந்தி உருவாக்காத கருத்துக்களை காந்தியின் தத்துவங்கள் என்று அழைக்க வேண்டிய அவசியமென்ன? இந்திய மரபுகள், இந்திய சிந்தனைகள் என்றே அழைக்கலாமே?
குருஜி:-
நீ சொல்வது சரிதான். ஆனாலும் உண்மை அதுவல்ல வைரங்கள் மண்ணிற்குள் பல இடங்களில் பறந்து கிடக்கிறது ஆனாலும் வெட்டி எடுக்கப்பட்ட வைரத்திற்கு தனியாக ஒரு பெயர் வைப்பதில்லையா? அதே போலதான் பறந்து கிடக்கும் இந்திய சிந்தனைகளின் ஒரு பகுதியை காந்தியின் சிந்தனை என்று நாம் சொல்கிறோம் இதில் இன்னொரு விஷேசமும் இருக்கிறது இந்திய சிந்தனைகளின் எண்ணிக்கை ஆயிரம் என்றால் காந்தி அவைகளில் அனைத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை எதை எடுத்து கொண்டால் தனது வாழ்க்கையிலும் மற்றவர்களின் வாழ்விலும் பயன்படுத்தி பரிசோதனை செய்து பார்ப்பதற்கு சுலபமாக இருக்குமோ, சுகமாக இருக்குமோ அதை மட்டுமே எடுத்து கொண்டார். சிலவற்றை மட்டும் அடையாளப்படுத்தி அனுபவித்து அதை நமக்கு காட்டியதனால் காந்தியின் சிந்தனை என்று தனியான பெயரில் அழைப்பதில் எந்த தவறுமில்லை என்பது என் கருத்து.
கருத்தளவில் மட்டுமே ஏடுகளில் உறங்கி கொண்டிருந்த தத்துவங்களை நடைமுறைப்படுத்தி தனிமனித வாழ்க்கை சமூக வாழ்க்கை அரசியல் செயல்பாடுகள் ஆன்மீக பரிசோதனைகள் ஆகிய அனைத்து துறைகளிலும் அனுபவப்பூர்வமாக உருவாகும் சிக்கல்களுக்கு பயன்படுத்துகிற திறமை பெற்றவரை தத்துவ ஞானி என்றோ, அறிஞர் என்றோ உலக சிக்கல்களுக்கு மறுத்து போட வந்த சான்றோர் என்றோ அழைப்பதில் எந்த தவறுமில்லை. அது அவர்களை சிறுமைப்படுத்துவதும் ஆகாது. உலகில் இதுவரை தோன்றியுள்ள சமய பெரியோர்கள், தத்துவ அறிஞர்கள் அரசியல் விற்பன்னர்கள், எடுத்துரைத்த கருத்துக்கள் அனைத்தையும் படித்து சுவைத்து விட்டு மேடைகளில் பாராட்டிவிட்டு பிறகு மறந்து போவதற்காக உள்ளது அல்ல என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
நல்ல தத்துவங்களை படிக்கவும், வாதிடவும் மட்டுமல்ல அவைகளை மனித வாழ்க்கையில் பயன்படுத்தி பலன்பெறவும் வேண்டும் என்ற நோக்கத்தோடு மகாத்மா காந்தி பண்டையகால கருத்துக்களில் தனக்கு ஏற்புடையது என்று கருதத்தக்க சில கருத்துக்களை தன் வாழ்நாள் முழுவதும் பரிசோதனை படுத்திப்பார்த்தார். உண்மை, வாய்மை, நேர்மை மற்றும் சத்தியம் இவைகள் அனைத்தும் வேறு வேறு பெயர்களில் இருந்தாலும், மாறுபட்டது போல தோன்றினாலும், அனைத்துமே ஒழுக்கமென்ற இயற்கை விதிக்குள் அடங்கி விடுகிறது என்று தனது ஆழ்ந்த அனுபவத்தால் உணர்ந்து ஒழுக்கம் என்ற தண்டவாளத்தில் வாழ்க்கை என்ற ரெயில் வண்டி ஓடினால் மட்டுமே தனிமனித வாழ்வும், சமூக வாழ்வும் சிக்கலற்ற நீரோடை போல தெளிவாக இருக்கும். என்பதை காந்தி மிக உறுதியாகவே சொன்னார். அவர் சொன்ன வகைகளில் பலவற்றை அல்ல ஒரு சிலவற்றை கடைபிடித்தவர்களே ஆச்சார்யா கிருபாளினி, வினோபாஜி, ஜெயபிரகாஷ் நாராயணன், காமராஜர் போன்ற மாபெரும் தலைவர்களாக உருவானார்கள் என்றால் அவர் கூறிய அனைத்தையும் கடைபிடித்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்பதை ஒருநிமிடம் சிந்தித்து பாருங்கள். காந்தியின் பெருமையும் நமது நாட்டில் வாழ்ந்த ஞானிகளின் அருமையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல நன்றாகவே தெரியும்.
சீடர்:-
பண்டையகால அரசியல் அறிஞன் சாணக்கியன் தந்த கருத்துக்களை வலியுறுத்தவும், வருங்கால தலைமுறை அறிந்து கொள்ளவும் அர்த்தசாஸ்திரம் என்ற நூலை எழுதி வைத்தார். நமது வள்ளுவனும் அப்படியே செய்திருக்கிறார். தற்கால அறிஞர்கள் கூட தங்களது கருத்துக்களை நெறிப்படுத்தி நூல்களாக சமைத்து வைத்திருக்கிறார்கள். காந்தியும் தனது கருத்துக்களுக்காக நூல்கள் எழுதியிருக்கிறாரா?
குருஜி:-
மகாத்மா காந்தி கருத்துக்களை உபதேசம் செய்ய பிறந்தவர் அல்ல கருத்துக்களின்படி வாழ்ந்து காட்ட வந்தவர். எனவே தான் அவர் அரசியல் பற்றியோ ஆட்சிகளை பற்றியோ, பொருளாதாரம், சமூகம் மற்றும் ஆன்மிகம் ஆகியவகைளை பற்றியோ தனியொரு நூலாக எதையும் எழுதவில்லை. ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட இந்தியன் ஒப்பினியன் என்ற வார இதழ் முதற்கொண்டு யங் இந்தியா, ஹரிஜன் போன்ற இதழ்களிலும் அவர் எழுதிய தலையங்கங்களும், கட்டுரைகளும் வாழ்நாள் முழுவதும் பேசிய பேச்சுக்களும் மிகப்பெரும் தொகுப்புகளாக வெளிவந்திருக்கிறது. அவைகள் நமது தமிழில் கூட சுமார் இருபதாயிரம் பக்கங்களாக இன்றும் நாம் படிக்கும் வண்ணம் இருக்கிறது. இதுதவிர தனது வரலாற்றை கூறுகிற சத்திய சோதனை, பகவத் கீதைக்கு விளக்கம் போன்ற சிறிய நூல்கள் எழுதி இருக்கிறாரே தவிர ஒரே நூலில் தனது கருத்தை முற்றிலும் முடிவாகவும் அவர் எழுதவில்லை. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
திட்டமிட்டு ஒரு கருத்தை உருவாக்குகிற போது தான் அதற்கென்று தனி நூல் தேவை. ஆனால் முன்பே உள்ள கருத்துக்களை பரிசோதனை செய்து பார்ப்பதற்கு நூல்கள் தேவையில்லை வாழ்க்கைதான் தேவை. இறைவன் தனக்கு கொடுத்த வாழ்நாளை நம்மை போல காந்தி வீணடித்து கொள்ளவில்லை. தனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்தே வாழ்வை உற்று நோக்க ஆரம்பித்திருக்கிறார் அப்படி செய்வது சரியா? தவறா? இதனால் என்ன பயன் என்பது தெரியாத பருவத்திலிருந்தே இதை அவர் செய்திருக்கிறார். விவரம் தெரிந்த பிறகு ஆழ்ந்த அறிவோடு தன் வாழ்வை அவதானித்து அதில் வருகின்ற ஒவ்வொரு நிகழ்வையும் சத்தியத்தோடு சம்பந்தபடுத்தி அலசி ஆராய்ந்திருக்கிறார். அதனால் தான் அவரால் உள்ளேயும் வெளியேயும் ஒளிவு மறைவு இல்லாமல் வாழ்ந்திருக்க முடிகிறது.
சீடர்:-
காந்தியின் அரசியல் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கு முன்பு அவரது ஆன்மீக கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. காரணம் அவரது அரசியல் கருத்து ஓரளவு அனைவரும் அறிந்ததே! ஆனால் காந்தியின் ஆன்மீக சிந்தனை பரவலாக இளைய தலைமுறையினருக்கு கற்பிக்கப்பட வில்லை எனவே காந்தியின் கடவுள் சிந்தனையை பற்றி எங்களுக்கு கூறுங்கள்.
குருஜி:-
இலங்கை அரசாங்கத்தால் மனிதகுலத்திற்கு பல தீமைகள் நடந்திருப்பது நமக்கு தெரியும். ஆனாலும் ராவணனிடம் பல தீமைகள் மண்டிகிடந்தாலும் கூட இசை கலைஞன் என்ற ஒரு தனி சிறப்பு இருந்தது போல இலங்கை அரசாங்கமும் சில நன்மைகள் செய்திருக்கிறது அவற்றில் ஒன்று அந்த நாட்டு அமைச்சரவை பிரிவுகளில் ஒன்றான இந்துசமைய திணைக்களம் என்ற அமைப்பு இந்துக் கலைக்களஞ்சியம் என்ற பனிரெண்டு தொகுதி நூலை வெளியிட்டு இருக்கிறது. அந்த நூலில் முன்னுரையில் ஒரு அறிஞர் அழகான ஒரு கருத்தை எச்சரிக்கும் விதத்தில் சொல்கிறார் இந்தியாவில் சமய சார்பின்மை என்ற போலி சித்தாந்தத்தின் அடிப்படையில் நாத்திகத்தை வளர்க்கின்ற அபாயகரமான செயல் செய்யப்பட்டு வருகிறது என்பதை வருத்தத்தோடு சுட்டிக்காட்டுவதை படித்த போது நிஜமாகவே நம்மிடமிருந்து தூரத்தில் இருப்பவர்கள் நம்மை பற்றி மிக நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்களே என்ற எண்ணம் வந்தது.
சமய சார்பின்மை என்பது உண்மையாகவே எந்த ஒரு தனிப்பட்ட மதத்தையும் சலுகைகாட்டி வளர்க்காமல் இருப்பதே தவிர பெருவாரியான மதத்தை தவிர மற்ற மதங்களை வளர்ப்பது என்ற கருத்தில் அமையாது. ஆனால் நமது நாட்டில் இந்து மதத்தை எதிர்ப்பது மட்டுமே சமய சார்பின்மை என்பதாகி விட்டது. அந்த போலியான கருத்தாக்கத்திற்கு காந்தியின் சிந்தனைகளும் பலியாகி கொண்டு வருகிறது என்றால் அது மிகையில்லை நிஜமாக சொல்ல வேண்டும் என்றால், காந்தியிடம் எந்த மதத்தின் மீதும் துவேஷம் கிடையாது அதே நேரம் அவர் தன் மதம் மட்டுமே உயர்ந்தது, மற்ற மதங்கள் தாழ்ந்தது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்துவோ, முஸ்லீமோ அவனவன் இருக்கும் மதத்தில் விசுவாசமாக இருந்தால் அதுவே சிறப்பு என்ற உயர்ந்த கருத்துக்களே அவர் கொண்டிருந்தார். ஆனாலும் அவர் ராம நாமத்தை உச்சரித்தார் கீதைக்கு விளக்கம் எழுதினர் என்பதனால் ஒரு இந்துமத வாதியாகவே கருதப்படுகிறார். அது காந்தியை அரசாங்கமே இழிவு படுத்துவதாகும் உண்மையில் அரசாங்கம் காந்தியை அவர் கொள்கைகளையும் மதிக்கிறது என்றால் பாடசாலைகளில் காந்தியின் சிந்தனைகளை கட்டாயப்பாடங்களாக கொண்டு வரவேண்டும்.
ஒருமுறை மகாத்மா காந்தியிடம் சத்தியத்தையும், தர்மத்தையும், உண்மையையும், ஒழுக்கத்தையும் நீங்கள் ஏன் கடவுளாக கருதுகிறீர்கள். கடவுளும், சத்தியமும் ஒன்றா? சத்தியம் என்பது மனிதன் கடைபிடிப்பது, மனிதன் கடைபிடிக்கும் ஒரு பழக்கத்தை கடவுளோடு ஒப்பிடுவது அவரை இழிவு படுத்துவது ஆகாதா? என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது இந்த கேள்வி காந்தியிடம் மட்டும் கேட்கப்பட்டதாக யாரும் நினைக்க வேண்டாம் இன்று கூட பலரிடம் கேட்கப்படுகிறது. ஒழுக்கமாக சத்தியவானாக வாழுகிற ஒருவரை இவர் கடவுளின் அவதாரம்! இவர் செயலும் கடவுளின் செயலும் ஒன்றாக இருக்கிறது. கடவுளை வணங்குவது போலவே இவரையும் வணங்கலாம் என்று யாரவது சொன்னால் கடவுளின் மனிதனும் ஒன்றா? மனிதன் அழுக்கில் பிறந்து, அழுக்கில் வாழ்ந்து அழுக்கிலேயே மடிகிற ஒரு அற்ப ஜீவன் அல்லவா? அவனை போய் கடவுளோடு ஒப்பிடலாமா? என்று சிலர் கேட்கிறார்கள் அதற்கு காந்தியின் பதில் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டாலே நமக்கு நல்ல பதில் கிடைத்தது போல இருக்கும்.