அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்
உங்கள் ஒவ்வொருவரின் இதய கமலத்திலும் வீற்றிறுக்கும் கிருஷ்ணசைதன்யத்தை வணங்கி மகிழ்கிறேன்
நமது இணையத்தளம் துவங்கி இன்று இது ஆயிரமாவது பதிவாக வருகிறது நினைத்து பார்ப்பதற்கே பரவசமாக இருக்கிறது ஆரம்பத்தில் இணையதளத்தில் எழுதுவதில் எந்த ஆர்வமும் இல்லாத நான் நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளிலும் கொடுக்கின்ற ஊக்கத்தினால் மட்டுமே ஆயிரம் பதிவுகளை செய்திருக்கிறேன் இது என்னால் நடந்தது என்பதை விட உங்களால் நடந்தது இறைவனால் நடந்தது என்பது தான் சரியாக இருக்கும்
எழுத துவங்கிய ஆரம்ப நாட்களில் சில பத்துபேர்கள் படித்திருக்கிறார்கள் என்று உதவியாளர்கள் வந்து சொல்லும் போது சந்தோசமாக இருக்கும் நாம் எழுதுவதை பத்துபேராவது படிக்கிறார்களே என்ற ஆறுதல் இருக்கும் ஆனால் இன்று ஆயிரக்கணக்கான வாசகர்கள் படிக்கிறார்கள் எனும்போது மகிழ்வாகவும் இருக்கிறது அதே நேரம் இன்னும் சரியாக செய்யவேண்டுமே என்ற அச்சமும் வருகிறது எது எப்படியோ என்னை நேசிக்கிற என் எழுத்தை நேசிக்கிற நீங்கள் இருக்கும் போது எனக்கு கவலை இல்லை
பெரியதாக எழுதி என்ன சாதித்து விட்டாய்? என்று என்னை யாரும் கேள்விகள் கேட்க முடியாது காரணம் படிக்கும் உங்களின் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பால் நடந்திருக்கிற காரியங்களை நினைத்து பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது என் வாசகர்கள் கொடுத்த அன்பாலும் அன்பளிப்பாலும் ஆயிரம் பேர்களுக்கு இதுவரை ஆடைகளை தானமாக வழங்கி இருக்கிறோம் நூறு முதியவர்களுக்கு மேலாக இரண்டு மாதங்களுக்கும் அதிகமான நாட்களுக்கு உணவு பொருள்களை வழங்கி இருக்கிறோம் இவை எல்லாவற்றையும் விட ரயிலில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும் ஒருவருக்கு பசுதானம் வழங்கி அவரையும் சுய கவுரவத்தோடு ஒரு தொழில் செய்து வாழ வைத்திருக்கிறோம் இன்று கண்ணில்லாத ஒருவருக்கு வீடுகட்டி கொடுக்கும் ஏற்பாடுகளையும் செய்துவருகிறோம் இத்தனையும் என் எழுத்தை நீங்கள் படித்ததனால் உங்கள் ஒத்துழைப்பால் நடந்தது என்றால் இது ஒரு சாதனை அல்லாமல் வேறு என்ன?
பொதுவாக எனது மனதில் தன்னம்பிக்கை போராட்டகுணம் என்பவை மிக அதிகம் வெறும் கையால் முழம்போட முடியாது என்று சொல்வார்கள் நான் உண்மையாகவே வெறும் கையால் முழம் போட்டவன் அதாவது கையில் நாலணா கூட இல்லாமல் லட்சகணக்காண செலவில் பள்ளிக்கூடம் உருவாக்கி அதை நல்லவிதத்திலும் நடத்தி அருமையனமுரையில் நஷ்டப்பட்டு கடன்பட்டு மக்களிடம் பணம் வசூலிக்க தெரியாமல் துன்பப்பட்டு பிறகு கடனையும் வட்டியையும் அன்பர்களின் சிலரின் ஒத்துழைப்போடு அடைத்துவிட்டு பள்ளிக்கூடமும் போதும் அதில் படித்த பாடமும் போதுமென்று ஒதுங்கி இருக்கிறேன்
எவ்வளவுதான் சூடுபட்டாலும் பூனைக்கு பாலின்மேல் உள்ள ஆசை போகாது என்பார்கள் அதை போல எனக்கு நஷ்டபட்டாலும் கஷ்டபட்டாலும் பொது சேவையின் மீதுள்ள ஆசை இன்னும் போகவே இல்லை இனியும் போகபோவதும் இல்லை பள்ளிக்கூடம் நடத்துவதற்கு கட்டிய கட்டிடம் அப்படியே இருக்கிறது இன்னும் சொல்லபோனால் பழையமுகமாக இல்லாமல் மரமும் செடியுமாக இடமே பச்சை பசேலென்று ரம்மியமான சூழலில் இருக்கிறது இதை அப்படியே விட்டு வைப்பதற்கு அதாவது யாருக்கும் பயனில்லாமல் பட்டிபெற்ற தெங்கம் பழம் போல் வைப்பதற்கு நான் ஆசைப்படவில்லை அதில் எதையாவது ஒன்றை நாலுபேருக்கு நன்மை செய்வதுபோல செய்யவேண்டுமென்று விரும்புகிறேன் இதனால் மனதைபோட்டு என்னது செய்வது என்று குடைந்து கொண்டிருந்த போது நமது உஜிலாதேவி வாசகர் ஒருவர் முதியோர் இல்லம் நடந்ததினால் என்ன என்று ஒரு ஆலோசனை சொன்னார் எனக்கும் அது சரியாகபட்டது
பெற்றோர்கள் குழந்தைகளை குப்பையில் வீசியது அந்தகாலம் இன்று குப்பைதொட்டிகளில் கிடப்பது குழந்தகைள் அல்ல பெற்றோர்கள் வயதாகி நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து போய் அடுத்த வேளை சோற்றுக்கு வழி இல்லாமலும் மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்குவதற்கு கூரை இல்லாமலும் எத்தனையோ முதியோர்கள் வாடி வதங்கி போய் கிடக்கிறார்கள் இளமையில் தான் வறுமை கொடியது என்று ஒளவை பாட்டி சொன்னாள் இளமையில் வறுமை வந்தால் கூட ஓடி ஆடி சென்று வயிற்று பசியை போக்கி கொள்ளலாம் நடப்பதற்கு கூட திராணியற்று போனபிறகு சோற்றுக்கு அலைவது எப்படி முடியும்? எனவே அப்படிப்பட்ட பாவ மனிதர்களை அழைத்து வந்து அவர்களுக்கு இளைப்பாறுதல் கொடுத்து வாழ்க்கையின் இறுதி பகுதியிலாவது பசியில்லாமல் இருக்க செய்யலாமே என்று தோன்றுகிறது.
இதுமட்டும் அல்ல பசியால் மரிப்பவன் கடவுளை அறியமாட்டான் வயிற்று பசியில் கிடப்பவனிடம் வேதம் படிக்காதே சாதம் படை என்று சுவாமி விவேகனந்தர் சொல்கிறார் சிறிது வயிற்ருக்கு உணவு வந்தபிறகு தான் மனிதன் எதை பற்றியும் யோசிக்க முடியும். எனவே முதியவர்களின் பசியாற்றி அதன்பிறகு அவர்களுக்கு அவரவர் விரும்புகிறபடி இறைவழிபாட்டிற்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் அவர்களுக்கும் புண்ணியம் அதற்கு ஒத்தாசை செய்யும் நமக்கும் புண்ணியம். எனவே முதியவர்களை பராமரிப்பது மிகவும் சரியென்று தோன்றுகிற அதே நேரம் ஆதரவற்ற குழந்தைகளையும் விட்டு விடுவதற்கு என் மனது இடம்தரவில்லை எனவே பிச்சை எடுத்தாவது வாழ வழியில்லாத முதியவர்களையும் குழந்தைகளையும் வாழ வைப்பது என்று உங்களை நம்பி முடிவு செய்துவிட்டேன் அதற்க்கான ஆரம்பகட்ட பணிகளையும் துவங்கி விட்டேன் அரசாங்கத்திடம் அங்கிகாரம் பெறுவது மிகவும் முக்கியமல்லவா? அந்த வேலையை இப்போது செய்து வருகிறேன்
அவ்வபோது பலதரப்பட்ட சேவைகளை செய்வது நல்லது தான் என்றாலும் நிரந்தரமாக ஒரு சேவையை செய்தால் தான் சமூகத்திற்கான நமது பங்குபணி சரியாக இருக்கும் என்பது என் எண்ணம். அதுவும் குழந்தைகளின் பசியை போக்கி அவர்களை படிக்க வைப்பதும் முதியவர்களையும் பசி மறக்க செய்து ஆன்மீக முன்னேற்றத்தில் ஈடுபட வைப்பதும் ஆயிரம் யாகங்கள் ஹோமங்கள் பூஜைகள் செய்வதை விட சிறப்பானது என்று எனது குருதேவர் சொல்வார் எனவே நமது ஸ்ரீ குருமிஷன் அறக்கட்டளை மூலமாக அடுத்ததாக அவைகளை செய்ய துவங்க போகிறோம் அதற்க்கான முறைப்படியான அறிவிப்பை இன்னும் சில நாளில் செய்வேன்
நமது இணையதளம் ஆயிரம் பதிவுகளை கண்டது போலவே பல நல்ல இதயங்களையும் கண்டிருக்கிறது பல்வேறு நேரங்களில் என் எழுத்துக்களுக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை பதிவு செய்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு பெரிய பெயர் பட்டியலே போட வேண்டும். அதற்கு இங்கு இடம் போதாது என்பதனால் பெயர் குறிப்பிடாமலே அனைவருக்கும் என் நன்றியை செலுத்துகிறேன் எப்போதும் போல உங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்களை படிப்பதற்கு நான் ஆசையோடு இருக்கிறேன் அடிக்கடி எழுதுங்கள் மீண்டும் ஒரு நல்ல நாளில் உங்களை சந்திக்கிறேன் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.