சுவாமிஜி அவர்களுக்கு பாத நமஸ்காரம். எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் பஞ்சாங்கத்திலும், காலண்டர்களிலும் கரிநாள் என்று போட்டிருக்கிறார்களே அந்த நாட்களில் நல்ல காரியம் எதுவும் செய்யக் கூடாது என்கிறார்களே அது சரியா?
இப்படிக்கு,
வைஷ்ணவபிரியா,
விஜயவாடா.
நீங்கள் குறிப்பிடும் கரிநாளை "மாத தியாஜ்யம்" என்று அழைப்பார்கள். அதாவது மாதத்தில் விலக்க வேண்டிய நாள் என்பது இதன் பொருளாகும். இந்த நாளில் பொதுவாக எந்தவொரு நல்ல காரியத்தையும் துவங்க மாட்டார்கள். முன்பே துவங்கி இருந்தால் அதை இந்த நாளில் தடை இல்லாமல் செய்யலாம் என்றாலும் துவக்கம் என்பதை இன்று வைத்து கொள்ள கூடாது என்கிறார்கள்.
எனக்கு இதில் அடிப்படையாக ஒரு சந்தேகம் உண்டு மாதத்தில் ஒரு நாளை கரிநாள் என்று பஞ்சாங்கத்தில் போடுகிறார்கள். வேறொரு பஞ்சாங்கத்திலோ அந்த நாளை அப்படி குறிப்பது கிடையாது. ஆனால் அவர்களும் இதற்கு முற்றிலும் மாறுபட்ட வேறொரு நாளை கரிநாள் என்று சொல்கிறார்கள். இதில் எதை நாம் எடுத்து கொள்வது? என்பது விளங்கவில்லை.சில பஞ்சாங்கங்களிலோ அப்படி ஒரு நாளே சொல்லப்படுவது இல்லை. எதற்காக இந்த விஷயத்தில் இத்தனை குழப்பம் என்று புரியமாட்டேன் என்கிறது. அதனால் என்னை பொறுத்தவரை நான் சொல்வது என்னவென்றால் இந்த கரிநாளை பெரிய முக்கியமாக எடுத்துகொள்ள வேண்டாம் அதை விட்டு விடலாம் என்று தோன்றுகிறது.