குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம். எனக்கு முன்னோர்கள் சொத்துக்கள் என்று எதுவும் கிடையாது. இனிமேல் தான் என் சுய சம்பாத்தியத்தில் சொத்துக்கள் வாங்க வேண்டும். சுய சம்பாத்தியம் விருத்தி அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை தயவு செய்து கூறுங்கள் நன்றியோடு இருப்பேன்.
இப்படிக்கு,
நடராஜமாணிக்கம்,
காட்டுமன்னார்கோவில்.
அப்பன்-பாட்டன் சம்பாதித்து வைத்ததை வைத்து வாழ்வதும், துருப்பிடித்து போவதும் ஒன்றுதான். எவனொருவன் சுய சம்பாத்தியம் இல்லாமல் இருக்கிறானோ அவன் பிணத்திற்கு சமம் என்று நான் நினைக்கிறேன். அதாவது சுயமாக சம்பாதிக்க நினைத்து முடியவில்லை என்றால் அவனை மன்னிக்கலாம். ஏனென்றால் அது விதிவசம். பாட்டன்-பூட்டன் சொத்து இருக்கிறது அதை விற்று உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவேனே தவிர சம்பாதிக்க போக மாட்டேன் என்பவனை தான் பிணமாக நினைக்க வேண்டியது உள்ளது.
முன்னோர்கள் சொத்து இல்லை என்பது நம் பாவம் அல்ல. அதற்காக முன்னோர்களை கூட குறை சொல்லக்கூடாது. நம்மை பெற்று வளர்த்து இவ்வளவு பெரிய மனிதனாக்கி விட்டிருக்கிறார்களே! அது போதாதா? இரண்டு கை-கால்களும், அறிவும் திடமாக இருக்கும் போது சுயமாக முன்னேறுவதில் என்ன தடை இருக்க போகிறது.
பொதுவாக சொந்த தொழில் ஈடுபடுபவர்கள் அந்த தொழில் சிறக்க தினசரி காலையில் அவர்கள் எந்த சுவாமியை விரும்பி வழிபடுகிறார்களோ அந்த சுவாமிக்கு ஐந்து வெற்றிலையும், நான்கு பாக்கும் வைத்து “குருவடி சரணம் திருவடி சரணம்” என்று ஜெபித்து அதன்பிறகு தொழிலுக்கு செல்லுங்கள். கண்டிப்பாக தொழில் அமோகமாக நடக்கும். அதில் சந்தேகம் இல்லை இதை செய்பவர்கள் எவருமே தோற்றதை நான் பார்த்ததில்லை.