குருஜி அவர்களுக்கு வணக்கம். நான் புதியதாக ஓட்டல் ஒன்று துவக்குவதாக இருக்கிறேன். எனக்கு அந்த தொழிலை பற்றி எதுவும் தெரியாது. என் நண்பர் ஒருவர் அதில் நல்ல பழக்கம் உள்ளவர். அவரும் நானும் கூட்டாக சேர்ந்து தொழிலை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம் அதாவது கடையை நடத்துவதற்கான அனுபவ அறிவும் உழைப்பும் அவருடையது என்னுடைய பங்கு பணமாக முதலீடு செய்வது. இதில் என் கேள்வி என்னவென்றால் எனக்கு கூட்டு தொழில் சரியாக வருமா? நான் நினைக்கும் இந்த நண்பரோடு கூட்டு சேர்ந்தால் அவருக்கும் எனக்கும் பிரச்சனைகள் இல்லாமல் இருக்குமா? தொழில் நல்லபடியாக நடக்குமா என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன். காரணம் தொழில் முதலீடு என்று வரும்போது முதலாக போட்ட பணம் லாபம் அடையலாம் அல்லது நஷ்டமாகலாம். அது இயற்கையின் விதி அதற்காக நண்பர்கள் மத்தியில் பிரச்சனைகள் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறேன். எனவே நீங்கள் எங்கள் இருவரின் ஜாதகத்தையும் தெளிவாக பார்த்து எங்களுக்கு வழிகாட்டும்படி பணிவோடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
தணிகைநாதன்,
தாம்பரம்.
“தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்” என்று ஒரு பழமொழி உண்டு. ஒரு தொழிலை பற்றிய அறிவோ அனுபவமோ இல்லாமல் அதை செய்யப்போவது விபரீதமான முயற்சியாகும். அதுவும் என் நண்பனுக்கு தொழில் சூத்திரம் தெரியும் அதை நம்பி காரியத்தில் இறங்க போகிறேன் என்பது மிகவும் தவறுதலான முடிவு. காரணம் தொழிலை பற்றிய விபரம் தெரிந்த அவர் சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சில முடிவுகளை எடுப்பார் அது வெற்றி அடைந்தால் நமக்கு பிரச்சனையாக தெரியாது. தோல்வியில் முடிந்தால் காலப்போக்கில் நண்பரின் நாணயத்தின் மீதே அவநம்பிக்கை ஏற்பட துவங்கிவிடும்.
கூட்டாக தொழில் செய்ய நினைப்பவர்கள் சம்மந்தப்பட்ட துறையில் நேரடியான அனுபவம் என்பது கண்டிப்பாக இருப்பவர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் சாதக பாதகங்களை உணர்ந்து கூட்டான முடிவை எடுக்க முடியும். இதைவிட முக்கியமானது வேலைகள் துவங்குவதற்கு முன்பு கூட்டாளிகளுக்கு மத்தியில் நடைமுறைக்கு ஏற்ற ஒரு குறிப்பிட்ட காலம் வரை மாற்ற முடியாத ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். நண்பர்களாக இருக்கும் வரை தான் அன்பு, நட்பு என்பவைகள் எல்லாம். தொழில் என்று வந்தவுடன் அனைத்தும் எழுத்து பூர்வமான ரெக்கார்டுகளாக இருக்க வேண்டும். வாய், வார்த்தை என்பது தொழிலில் சரிபட்டு வராது
அடுத்தது மிக முக்கியமாக நமது ஜாதகப்படி சொந்த தொழில் செய்ய முடியுமா? அதை கூட்டாக நடத்துவதா? அல்லது தனியாக நடத்தலாமா? கூட்டாளியாக வருகிற நபருக்கும் நமக்கும் ஒத்துபட்டு வருமா? என்பன போன்ற விஷயங்களில் மிக தெளிவான பதில்களை நாம் பெற வேண்டும். அதன்பிறகே காரியத்தை துவங்க வேண்டும். இதில் முக்கியமானது நமக்கு அமைகின்ற கூட்டாளி நம்மோடு ஒத்துழைப்பாரா? அல்லது பகைவராக மாறுவாரா? என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்துகொள்ள வேண்டும்.
நமது ஒவ்வொருவர் ஜாதகத்திலும் எட்டாவது இடத்தை லக்கினமாகவோ ராசியாகவோ கொண்டவர்களை கூட்டாக சேர்த்துக்கொள்ள கூடாது. அப்படி சேர்த்தால் சிறிது காலத்திலேயே பகை வளருவதற்கு வாய்ப்பு உண்டு. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் நாம் மேஷ லக்கினம் என்று வைத்து கொள்வோம் விருச்சிக ராசி நமக்கு எட்டாம் இடமாக அமையும். இந்த ராசியை லக்கினமாகவோ அல்லது ஜென்ம ராசியாகவோ கொண்டவர்கள் நம்மோடு ஒத்துழைக்கவே மாட்டார்கள். இவர்களோடு கூட்டு வைத்தால் ஒவ்வொரு நாளும் அணுகுண்டு மேல் உட்கார்ந்து இருப்பது போல ஆகிவிடும்.
பொதுவாகவே எட்டாமிடத்தை ராசியாக லக்கினமாக கொண்டவர்களிடம் நம்மால் நெருங்க முடியாது அல்லது அவர்கள் நம்மை நெருங்க மாட்டார்கள். இயற்கையின் விதியாக இப்படிப்பட்டவர்கள் வியாபார துணையாக அமைந்தால் வெட்டி விட்டு போய்விடலாம். வாழ்க்கை துணையாக அமைந்தால் நிலைமையை சற்று யோசித்து பாருங்கள். பெரிய போராட்டம் தான், எனவே சர்வ ஜாக்கிரதையோடு அனைத்து காரியங்களையும் செய்தால் குறைந்தபட்சம் நிம்மதியாவது கிடைக்கும்.
நீங்கள் அனுப்பி இருக்கும் இரண்டு ஜாதகங்களையும் பார்த்தேன் அவை இரண்டும் எந்த வகையிலும் ஒத்துபோகவில்லை. ஒன்றையொன்று விழுங்கிற ஜாதகமாக இருக்கிறதே தவிர இணக்கம் என்பது சிறிது கூட இல்லை. பொதுவாகவே உங்கள் இருவரின் நட்பும் ஆழமானது அல்ல, மேம்போக்கானது. எனவே நீங்கள் கூட்டாளியாக மாறி ஜென்ம பகையாளியாக உருமாறாமல் இருக்க கூட்டு தொழிலை தவிர்க்கவும்.