குருஜி அவர்களுக்கு வணக்கம். நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறேன். நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்தாலும் ஏதாவது பிரச்சினைகள் வந்துகொண்டே இருக்கிறது. உடன் பணிபுரிபவர்களிடம் நட்போடு இருக்க முடிவதிவதில்லை, விட்டுக்கொடுத்து சென்றாலும் கூட மனஸ்தாபம் என்பதை தவிர்க்க முடியவில்லை இதிலிருந்து மாற விரும்புகிறேன். ஆனால் வழி தெரியவில்லை தாங்கள் தயவு செய்து நல்ல வழிகாட்டி எனக்கு உதவுமாறு வேண்டுகிறேன்
இப்படிக்கு,
சிவநாராயணமூர்த்தி,
தாழையுத்து.
நமது மனதில் சண்டைபோடுவதற்கான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தால் தான் மற்றவர்கள் நம்மோடு சண்டைக்கு வருவார்கள். நாம் அமைதியாக அனைவரின் மீதும் பாசமாக இருந்தால் அவர்களும் அப்படியே நம்மிடம் பழகுவார்கள் என்று ஒரு காலத்தில் நான் நினைத்தது உண்டு.
சில அனுபவங்களை வாழ்க்கையில் பட்டபிறகு நாம் மட்டும் ஒருவர் மீது அன்பு கொண்டவராக இருந்தால் போதாது அவரும் நம் மீது ஓரளவாவது கரிசனம் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். அப்போது தான் நமது அன்பிற்கும் மரியாதை கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டேன்.
சிலருக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது காரணமே இல்லாமல் குற்றம் குறைகளை தேடி தேடி கண்டுபிடித்து அப்படி எதுவுமே இல்லை என்றாலும் இருப்பதாக ஒரு போலி கருத்துக்களை உருவாக்கி நம்மீதே குறிவைத்து தாக்குவார்கள். ஒருவேளை அவர்களுக்கும் நமக்கும் சென்ற ஜென்மத்தில் தீராத பகை இருந்திருக்க வேண்டும் இல்லை என்றால் காரணமே இல்லாமல் நம்மை அவர்கள் ஏன் வெறுக்க வேண்டும்?
இந்த மாதிரியான நிலை வருகிற போது வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. என் அனுபவத்தில் நான் அறிந்ததை உங்களுக்கு சொல்கிறேன் நீங்கள் வாழுகிற இடத்திற்கு பக்கத்தில் இரங்கநாதர் ஆலயம் இருந்தால் அங்கே சென்று ஐந்து நெய் தீபம் ஏற்றி சுவாமியை வணங்குங்கள். அங்கே பிரசாதமாக தரப்படுகிற துளசியை வாங்கி பணி செய்கிற மேஜையின் மீது வைத்து கொள்ளுங்கள். தினசரி தவறாமல் இரங்கநாதருக்கான காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.