மதிப்பு மிக்க குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். என் வயது நாற்பது. இளமையில் இருந்த சுறுசுறுப்பும் தைரியமும் இப்போது குறைந்து கொண்டே வருகிறது. எதற்கெடுத்தாலும் இனம்புரியாத பயமும் அச்சமும் மனதை வாட்டி வதைக்கிறது. உண்மையாக சொல்வது என்றால் விரைவில் இறந்து போய்விடுவோமோ என்று பயம் வருகிறது. இப்படி பயப்படுவது தவறு என்பது புரிந்தாலும் அந்த எண்ணத்தை மாற்ற முடியவில்லை இதிலிருந்து விடுபட எதாவது வழி கூற இயலுமா? நீங்கள் வழி சொன்னால் கண்டிப்பாக அதை நான் கடைபிடிப்பேன் உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.
இப்படிக்கு,
கைலாஷ் நீலமேகம்,
கனடா.
நாற்பது வயது ஆன உடனேயே எனக்கு முதுமை வந்துவிட்டது என்று நீங்கள் நினைப்பது மிகப்பெரிய தவறு. எண்பது வயது ஆனாலும் எனக்கு இன்னும் இருபது வயது தான் என்று நினைத்து கொள்ள வேண்டும். அந்த நினைப்பை உண்மை என்று உறுதியாக நம்ப வேண்டும். அப்போது மட்டும் தான் மனதும் உடம்பும் ஒரே கதியிலிருந்து நம்மை சுறுசுறுப்போடு இயங்க செய்யும்.
மரணம் என்பது நாம் பிறந்த அன்றே உறுதியாகிப்போன ஒன்று. அது எப்போது வேண்டுமானாலும் நம்மை பிடித்து கொண்டு போகலாம் அதற்காக வருத்தப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. என்றோ ஒருநாள் சாகப்போகிறோம் என்பதற்காக இன்றே சுடுகாட்டில் சென்றா படுத்துக்கொள்ள முடியும். நிமிஷ நேரம் தான் வாழ்க்கை என்றாலும் யுக முடிவு வரை வாழ்வேன் என்று நினைப்பவன் தான் சாதனைகளை படைக்க முடியும்.
நீங்கள் பெரியதாக எதுவும் சாதிக்கவில்லை என்றாலும் வாழும் நாள் வரையிலாவது நிம்மதியாக இருக்க வேண்டும் மனிதனது நிம்மதியை குலைப்பதில் மிக முக்கிய பங்காற்றுவது அச்சம் இந்த அச்சத்தை விடாத வரையில் சந்தோசம் என்பது நம்மை தொட்டு கூட பார்க்காது.
இந்த உலகத்தில் இறைவனான பரமசிவனை அடுத்து யம தர்மனை காலால் உதைத்தது மகாகவி பாரதி மட்டுமே மார்கண்டேயனை காப்பதற்காக இறைவன் காலனை காலால் உதைத்தான். ஆனால் பாரதியோ தன்னை நெருங்கி வரும் காலனை தானே எதிர்க்க வேண்டுமென்று மனதுணிச்சல் கொண்டு காலா என் காலருகே வாடா உன்னை காலால் மிதிக்கிறேன் என்று பாடினான்.
அந்த துணிச்சல் பாரதிக்கு இருந்ததனால் தான் நாற்பது வயதை தொடுவதற்கு முன்பே இறந்து போனாலும் இன்றும் நம்மோடு அமரத்தன்மையோடு வாழ்கிறார். இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வாழ்வார். நீங்களும் நானும் பாரதி போல் இல்லை என்றாலும் அவரது துணிச்சலில் ஒரு சிறிய பங்கையாவது பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டாமா?
மனதில் கிடக்கும் அச்சத்தை போக்குவதற்கு அருமருந்தாக இருப்பது இறைவனின் நம்பிக்கை. இறைவன் மீது கொண்ட நம்பிக்கை நிச்சயம் நமக்கு சிரஞ்சீவித்தன்மையை தரும் எனவே கடவுளை நம்புங்கள் பயம் கோழைத்தனம் எல்லாமே விட்டுப்போகும்.
மேலும் நமது சாஸ்திரங்கள் பரமசிவனை வழிபட்டால் மரண பயம் என்பது இல்லாமல் போகும் என்று சொல்கின்றன. மாதத்தில் இரண்டு நாள் வருகிற பிரதோஷங்கள் அன்று சிவாலயம் சென்று பகவனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள். குறைந்தபட்சம் அன்று மட்டுமாவது உங்களால் முடிந்தவரை ஒரு ஏழைக்காவது ஒருவேளை உணவு தானமாக கொடுங்கள் இல்லாதவனின் வாழ்த்துதலும் இறைவனின் கருணையும் உங்களை காப்பாற்றும்.