குருஜி அவர்களுக்கு வணக்கம். நான் சென்ற வருடம் உங்களை நேரில் சந்தித்தேன். அப்போது என் படிப்பு முடியாமல் பாதியில் நின்றது. அதில் நான் வெற்றி பெற சில பரிகாரங்களை சொன்னீர்கள் செய்தேன். கடவுளின் அருளாலும் உங்களின் ஆசிர்வாதத்தாலும் நல்லபடியாக படிப்பை முடித்துவிட்டேன் இப்போது வெளிநாடு சென்று வேலை செய்யலாம் என்று ஆசைபடுகிறேன். அதற்கு நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை தெரியப்படுத்துமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
ஹரிஹரபிரசாத்,
மயிலாடுதுறை.
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று நமது முன்னோர்கள் சொன்னார்கள். நமது பழைய தமிழர்கள் பல்லாயிரக் கணக்கான மைல்கள் கடல்பயணம் செய்ததும், கிரேக்கம் முதலான நாடுகளுக்கு சென்று வந்ததும், வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல. வாணிபம் செய்வதற்கு அந்த கால தமிழனுக்கும், இந்த கால தமிழனுக்கும் பெரிய வித்தியாசம் என்னவென்றால் அன்றுள்ளவன் வர்த்தகம் செய்ய சென்றான் இன்றுள்ளவன் வேலைக்காரனாக போகிறான் இது தான் வேதனை.
அயல்நாட்டுக்கு சென்று பல ஆயிரங்களை சம்பளமாக பெற்று, அதில் சொந்த செலவு போக மிச்சம் பிடிப்பதை கணக்கு பார்த்தாலும், இங்கு உள்ளுரில் சம்பாதிப்பதை கணக்கு பார்த்தாலும் பெரிய வித்தியாசம் கிடையாது. இங்கிருந்தால் வாய்க்கு ருசியாக சாப்பிட்டு ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அங்கு போனால் கண்டதை தின்று உடம்பை கெடுத்து கொள்ளவேண்டிய நிலையே வருகிறது. ஆனாலும் இது பலருக்கு புரிவதில்லை அயல்நாட்டு மோகமும் பணமோகமும் அவர்களை பிடித்து பேய் போல ஆட்டுகிறது
வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் செல்ல முடியாமல் தாமதம் ஏற்படுகிறது என்றால் திருச்செந்தூர் சென்று நாழிகிணற்றில் குளித்து முப்பத்தி ஒன்பது லட்டுகளை பண்டாரங்களுக்கு தானம் வழங்கி செந்தில் ஆண்டவனை வழிபட வேண்டும். இதை அவரவர் பிறந்த கிழமையில் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அயல்நாட்டு பிரயாணம் கண்டிப்பாக அமையும்.